மருத்துவத் துறையில் சமீப காலமாகப் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று எலும்பு வங்கி. சமீப காலமாகப் பேசப்பட ஆரம்பித்தாலும், எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை வளர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்று. ஆனால், இது பற்றிப் போதிய அளவு விழிப்புணர்வு இன்னும் நம்மவர்களிடம் உருவாகவில்லை.
விபத்து, கிருமித்தொற்று அல்லது புற்றுநோய் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்றுச் சிகிச்சை. இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் ஏன்… உயிரோடு இருப்பவர்களிடமிருந்தும்கூட எலும்பைப் பெற்று, முறைப்படிப் பாதுகாத்து, எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே எலும்பு வங்கி. ரத்த வங்கி, கண் வங்கிபோல இதுவும் உறுப்பு தானத்தை எதிர்பார்த்துச் செயல்படும் ஓர் அமைப்பு. இதயம், கண், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் தானமாகத் தருவதுபோல் எலும்பையும் தானமாகத் தரலாம்; பெறலாம்.
மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பயன் படுத்துவதுதான் உறுப்பு தானத்தின் முக்கிய அம்சம். தமிழகத்தின் உறுப்பு தானத் திட்டத்தில் இணைந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச்சாவு நிகழ்ந்தால், உடனே உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி உறுப்புகளைத் தானம் கொடுப்பதன் அவசியத்தைப் புரியவைப்பார்கள். அவர்களின் சம்மதம் கிடைத்ததும், அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே இந்தக் குழுவினரிடம் பதிவுசெய்திருப்பார்கள். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயம். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளை உடனடியாகப் பொருத்திவிட வேண்டும். கண், தோல் மற்றும் எலும்பைப் பாதுகாத்துப் பின்னாளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எலும்பைப் பாதுகாப்பதற்கு அதிநுண்ணிய தொழில்நுட்பம் எதுவும் தேவையில்லை. மிகவும் எளிதான வழியில், குறைந்த செலவில் எலும்புகளைச் சேமிக்க முடியும். மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஆல்கஹாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ் மற்றும் மஞ்சள் காமாலைக் கிருமிகள் இல்லை என்பது உறுதியானதும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸில், குளிர்சாதனப் பெட்டியில் பல வருடங்களுக்குப் பாதுகாக்கலாம். எலும்புகளை காமா கதிர்கள் கொண்டு தொற்றுநீக்கம் செய்து பாதுகாப்பதும் உண்டு.
இயல்பாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற்றுக்கொண்டால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உயிரோடு இருப்பவரிடமிருந்தும் எலும்பைப் பெறலாம். உதாரணத்துக்கு, இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, அங்குள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குத் தானமாகத் தரலாம். மார்புக்கு அருகிலுள்ள முதுகெலும்புச் சிகிச்சையின்போது விலா எலும்புகளைவெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். விபத்தின்போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கிவிட்டால், அவற்றின் எலும்புகளை மட்டும் இம்மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்.