சுய பாதுகாப்பு என்றால் என்ன?

குழந்தைகளை பாலியல் கொடுமையிலிருந்து, பாதுகாப்பதற்காக அவரவர் வயதிற்குப் பொருத்தமான தகவல்கள், திறன்கள் மற்றும் சுயமதிப்பைத் தருவதன் மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை சுய பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கிறது.

குழந்தைகளுக்கு தமது உடல் தமக்கு மட்டுமே சொந்தம் என்றும் தமக்குப் பிடிக்காத அல்லது புரியாத வகையில் தமது உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கற்றுத் தருகிறது.

குழந்தைகள் கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது மூலம் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குழந்தைகள் தங்கள் மீது நம்பிக்கை கொள்ள கற்றுத் தருவதன் மூலம் அடுத்தவரது உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுத்தாமலும், அதே சமயத்தில் தயக்கமின்றி தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் வகையிலும் நடந்து கொள்ளவும் உதவுகிறது.
குடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் என்று ஒவ்வொரு குழந்தையின் உதவி மற்றும் ஆதரவு அமைப்பையும் சீராகக் கட்டமைக்க சுய பாதுகாப்பு உதவுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் தனது சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்பிக்கை திறன்களை நடைமுறைப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆற்றல் அளிக்கிறது.
மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனை சுயபாதுகாப்பு வளர்க்கிறது.
முறைகேடான பாலியல் தொடுதல்களுக்கு பாலியல் குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பு, அது குழந்தையின் தவறல்ல என்று சுய பாதுகாப்பு கற்றுத் தருகிறது.
குழந்தையை தொட்டுத் தான் கொடுமையிழைக்க முடியும் என்பது சரியல்ல என்று புரிந்து கொள்வது முக்கியம்; தொடாமல் செய்யும் செயல்களும் அதில் அடக்கம்.
இந்த விதிகளை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.
அடுத்தவர்களுடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடுவது சரியல்ல.
உன் முன்னால் வேறு ஒருவர் அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தானே தொட்டுக் கொள்வது சரியல்ல.
ஒருவர் உன்னை அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடச் சொல்வது சரியல்ல.
உன் உடைகளைக் களைந்துவிட்டு உன்னை ஒருவர் நிழல்படமோ வீடியோவோ எடுப்பது சரியல்ல.
உடைகள் இல்லாமல் மற்றவர்கள் இருக்கும் படங்களையோ வீடியோவையோ வேறு ஒருவர் காண்பித்து உன்னைப் பார்க்கச் சொல்வது சரியல்ல.
வெவ்வேறு விதமான தொடுதல்களைப் பற்றி குழந்தைகளுடன் பேசுங்கள். மூன்று விதமான தொடுதல்கள் உள்ளன என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள்.
பாதுகாப்பான தொடுதல்
பாதுகாப்பற்ற தொடுதல்
குழப்பத்தைத் தரும் தொடுதல்