கொரோனா வைரசுக்கான (COVID-19) நோயறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கிருந்தால், நீங்கள் கட்டாயம் பரிசோதனையை மேற்கொள்ள அத்துடன் அதன் முடிவு வரும் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். வேலைக்கோ அல்லது கடைகளுக்கோ போகவேண்டாம்.
கோவிட்-19 இன் நோயறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
- காய்ச்சல், குளிர்க்காய்ச்சல் அல்லது வியர்த்தல்
- இருமல் அல்லது தொண்டை வலி
- மூச்சுத்திணறல்
- மூக்கு ஒழுகுதல்
- வாசனைத் திறன் அல்லது சுவைத் திறன் இழப்பு
கொரோனா வைரஸ் (COVID-19) பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புகலிடம் வேண்டுவோர் இதில் அடங்குவர்.
கொரோனா வைரஸ் (COVID-19) நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் கட்டாயம் உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும்.
கோவிட்-19 நோய்த்தொற்றுள்ள எவருடனாவது நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், 14 நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் தொற்றுத்தடுப்புக் காப்பில் (quarantine) (வீட்டிலேயே இருத்தல்) இருக்க வேண்டும். அத்துடன், சுகாதாரத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரால் நீங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படும் வரை நீங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
நோய்த்தொற்று உள்ளவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவரோடு நீங்கள் வசித்தாலோ அல்லது நேரம் கழித்திருந்தாலோ, நீங்களும் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.