மன அழுத்தம் Depression ஒரு நோய்!

மன அழுத்தம் (Depression) ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில், நாளிதழ்களில் அதைப் பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. மன அழுத்தம் என்றால் என்ன? யாரெல்லாம் அதன் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும்? அதற்கான சிகிச்சை முறை என்ன? பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளன.

முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல; சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் / உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.