‘மாற்றுத்திறனாளிகள்’ – ஏனையோருக்கு நிகராக போற்றுமளவிற்கு காலம் மாறி விட்டது!

ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒரு விசேட ஆற்றல் புதைந்துள்ளது. சிலர் அதிக ஆற்றல் கொண்டவராகவும் வேறு சிலர் சிறு சிறு குறைகளை தம்மகத்தே கொண்டவராகவும் உள்ளனர். இவ்வுலகில் நெறியான பூரணமானவர்கள் என்று எவரும் இல்லை. குறைகளையும் நிறைகளையும் கலந்த ஓர் உயிராகவே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இன்று பலர் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவே எற்பட்ட பாதிப்புக்களினால் குறைகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தமது வாழ்க்கையின் அத்தியாவசியமான செயற்பாடுகளை செய்வதற்கு கடினப்படுகின்ற மனிதர்களை விசேட தேவையுடையவர்கள் என்று அழைத்து வந்தனர்.

இவ்விசேட தேவையுடையவர்களை ஆரம்ப காலங்களில் வலுவிழந்தோர் என்று அழைத்தனர். ஏனெனில் முன்னைய காலத்தில் பயனற்றவர்களாகவும் சமூகத்திற்கு பாரிய சுமையாக இருப்பவர்களாகவும் எப்பொழுதும் குடும்பத்தின் பாதுகாப்பிலோ அல்லது உறவினர், நண்பர்களின் தயவிலோ வாழ்பவர்களாகவும் பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் நோக்கப்பட்டனர். அதனாலேயே இவர்கள் ‘வலுவிழந்தோர்’ என அழைக்கப்பட்டனர்.

நாகரிகம் வளர வளர சிந்தனைகள் விரிவடையத் தொடங்கின. பிற்பட்ட காலங்களில் நாகரிக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இவர்கள் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று கௌரவிக்கப்பட்டனர். அவர்களும் சாதாரண மக்களைப் போன்றவர்கள் என்ற எண்ணங்களை வளர்க்கும் முகமாக இவர்கள் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பெயருடன் மட்டுமன்றி ‘விஷேட தேவையுடையோர்’ என்றும் ‘மாற்று வலுவுடையோர்’ என்றும் ‘தனித்துவமான திறன்களைக் கொண்டோர்’ என்றும் ‘தமக்கே உரித்தான சிறப்பான கல்வியை வேண்டி நிற்போர்’ என்றும் குறிப்பிடப்பட்டனர்.

அவர்களையும் ஏனையோருக்கு நிகராக போற்றும் அளவிற்கு இன்றைய காலம் மாறி விட்டது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பற்றி சமூக நிறுவனங்களும் அமைப்புக்களும் சிந்திக்கத் தொடங்கின. எனவே அவர்களை ஒரு கூட்டாக அல்லது ஒன்றாக தங்கவைத்து அடிப்படை வசதிகளை வழங்கி பராமரித்தனர்.  இவர்களை பராமரித்த இடத்திலேயே அவர்களது அடிப்படை திறன்களை நிறைவேற்றப் பயிற்றுவிக்கப்பட்டனர்.