நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன?

நரம்புத்தளர்ச்சி என்பது சரியான வார்த்தை இல்லை. நரம்புகள் தளர்வது இல்லை. நம் மூளை ஒரு ஜெனரேட்டர் மாதிரி, மூளையிலிருந்த கட்டளைகளைச் செய்திகளாக எடுத்துச் செல்லும் வயர்களாகச் செயல்படுவது இந்த நரம்புகள்தான்.

மயலின் என்னும் வேதிப்பொருள் சூழ்ந்த லட்சக்கணக்கான சின்னச் சின்ன நரம்புகள் சேர்ந்து ஒரு பெரிய நரம்பாக தசைகளுக்குள் ஊடுருவி இருக்கும். எப்பொழுது எல்லாம் மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தொய்வு ஏற்படும் பொழுது, பாதங்களில் கட்டை விரல்கள் உணர்ச்சியற்று மரத்துப் போகும். செக்ஸில் நாட்டம் இருக்காது. சில பேருக்கு கைகள் நடுங்குவது, வேகமாகச் செயல்பட முடியாமல் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வுகள் சர்வ சாதாரணமாகத் தோன்றும்.

பாலியலில் ஈடுபாடு மிக்கவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருமாமே?

நூறு சதவிகிதம் கிடையாது. மனநிலை, சூழ்நிலை, அதிகமான ஈடுபாடும், நாட்டமும்தான் உடலின்பத்துக்குக் காரணம். இதனால், நரம்புத் தளர்வு வராது.

ஏற்கெனவே நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் மிக அதிகமாக உடல் இன்பத்தில் ஈடுபட்டால் நரம்புப் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.

இளைஞர்களும், மாணவர்களும் கூட கைநடுங்குதல், பதற்றம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுவது ஏன்?
முதல் காரணம் புரோட்டீன். வைட்டமின்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் முக்கியக் காரணம். மேலும், வாழ்க்கையில் பல நெறிமுறை பிறழ்ந்த மாற்றங்கள், நிறைய சறுக்கல்கள், தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் கைநடுக்கம் வரலாம்.

நரம்புத் தளர்ச்சி வராமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். எப்போதும் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அரை வயிற்றுக்குச் சாப்பிட வேண்டும்.

எண்ணெய் அறவே ஒழிக்கக் கூடாது. ஆலிவ் ஆயில், கார்ன் ஆயில் உபயோகிக்கலாம். மீன் அடிக்கடி சாப்பிடலாம். இது வலுவைத் தரும். சிக்கன், மட்டனை கூடுமானவரை தவிர்த்து விடலாம். வானவில் நிறங்கள் அடங்கிய பழங்கள், காய்கள் சாப்பிட்டால் வாழ்வில் நடுக்கம் ஓடிப்போகும்.

கீரைகள், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, செர்ரி, தக்காளி, ஆரஞ்சுப் பழங்கள், முளைகட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி வருவதை அறவே ஒழித்து விடலாம்.

எந்தவிதமான மருத்துவத்தை மேற்கொள்ளலாம்?

ஆங்கில மருத்துவம்தான் சரியான தீர்வு. நவீன கருவிகளின் உதவியுடன், நரம்புகளின் பாதிப்பை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியும். தானியங்கி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைச் சரியாகக் கணிக்க முடியும். இந்த வேகம் குறைந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறையும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீரை அடக்கும் தன்மை குறையும். தலைச்சுற்றல், மயக்கம் வரும். இதைக் கண்டுபிடித்து ஆங்கில மருத்துவத்தில் சரி செய்ய முடியும்.

குணமாக்குவது எப்படி?

மருத்துவத்தோடு இணைந்த மனப்பயிற்சிதான் சிறந்த முதல் வழி. செயற்கையாக நரம்புத் தூண்டுதல் மூலமாக மனத்தை ஒருநிலைப்படுத்துதல். கவுன்சிலிங் மூலம் மனஓட்டத்தைச் சீராக்குதல், வாழ்க்கை நடைமுறையை ஒழுங்குபடுத்துதல், அவர்களுக்குப் பிடிக்காததை, போரடிப்பதை, ஒதுக்குவதை அவர்களது ரசனைக்குப் பிடித்த மாதிரி மாற்றி ஏற்றுக் கொள்ள வைத்தல், ஒரு நிமிடமோ, அரை மணி நேரமோ எதுவானாலும் மனம் ஒன்றிய தியான முறையை மேற்கொள்ளப் பழகுதல், குடும்பத்துக்குள் விட்டுக் கொடுத்தல், புரிதல், கோபம் தவிர்த்தல் முக்கியமானது.

நரம்புத் தளர்ச்சிக்கும் ஞாபகமறதிக்கும் தொடர்பிருக்கிறதா?

இல்லை. நினைவாற்றல், நினைவு பெருக்கும் பயிற்சிகள் இவற்றை முறையாகச் செய்தாலே ஞாபகமறதி சரியாகி விடும். தேர்வு பற்றிய பயமும், பதற்றமும் மறதியை அதிகமாக்கும்.
70 வயதுக்கு மேல் நரம்புகளின் மிக மந்தமான செயல்பாடுகளால் ஏற்படுவதுதான் டிமென்சியா என்னும் ஞாபகமறதி நோய். மற்றபடி பயம் வேண்டாம்.