எதிர்கால சமுதாயம் நலமுற்று இருந்திட சமத்துவத்தைத் தவிர வேறு வழியில்லை.
கணவனை இழந்தவள் ,பெண்தலைமைதாங்கும் குடும்பமாக உள்ளவள்,பாதிக்கப்பட்டவள் ,விசேட தேவை உடையவள் என எல்லா பெண்களுக்கும் சாதி, மதம் கடந்த மரியாதையான சமூக அந்தஸ்து தேவைப்படுகிறது.
அனைவரும் பாரதியின் புதுமை பெண்கள் தான். போராட்டம் என்று வரும் போது பெரியாரின் பெண்களாக மாறிவிடுகின்றனர். சிலர் வாழ்க்கையில் போராடுகின்றனர் சிலர் பலருக்காக போராட்டக்களத்தில் குதிக்கின்றனர். பாரதியின் புதுமை பெண் பெரியாரின் புரட்சி பெண்ணாக மாறும் போது விஸ்வரூபம் எடுப்பது போல ஆகிறாள்.
பெண்கள் மதிக்கப்படுதல் வேண்டும்; போகத்திற்கு மட்டும் பெண்கள் உரியவர்கள் என்ற எண்ணம் ஒழிய வேண்டும்; கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், ஆட்சியில் சம உரிமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு கிடைக்கப் பெறுதல் வேண்டும் என்பது தான் பெண்கள் வேண்டும் உரிமை.
இவை கிடைக்கத்தான் காலந்தோறும் பெண்கள் போராடி வந்துள்ளனர். ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்று உறுதியான உரிமைக் குரல் எழுப்பிய ஆண்டாள் நாச்சியாரைப் போலப் புதுக்கவிஞர்களும் பெண்ணியத்திற்காகக் குரல் எழுப்பியுள்ளனர்.
வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்று சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று கனவு கண்டார் பாரதியார். ஆனால் அவர் காண விரும்பிய பெண் விடுதலை இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
பெண் திருமணத்திற்கு முன்னால் தந்தையைச் சார்ந்திருக்க வேண்டும்; திருமணம் ஆனபிறகு கணவனைச் சார்ந்திருக்க வேண்டும்; முதுமையில் பெற்ற பிள்ளையைச் சார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுகிறது மனுநீதி. காலங்காலமாகச் சமுதாயத்தில் நிலவி வரும் பெண்ணின் நிலை இது.
தலையில் பூ விலங்குவெளிப்பார்வைக்கு ஒரு பெண் தன் தலையில் வாசமலரும், கையில், காலில், மூக்கில் அணிகலன்களும் அணிந்திருப்பது போல் தோன்றும்; ஆனால் உண்மையில் அவை அவளுக்கு விலங்குகளே. கந்தர்வனின் ‘விலங்குகள்’ என்னும் கவிதை.
“தலையில் பூ விலங்கு கையில் பொன் விலங்கு காலில் வெள்ளி விலங்கு சுவாசத் தடைக்குமூக்கில் கல் விலங்கு ஒவ்வொரு மூச்சிலும் அவள் விலங்குகளை நுகர்கிறாள்!”’ஆணைவிட பெண்ணுக்கு ஆடைகளும் அணிகலன்களும் எவ்வளவு அதிகமோ அவ்வளவு அதிகமாக அவள் மீது விலங்குகளும் கட்டுக்களும் சுமைகளும் சுமத்தப்படுகின்றன’ என்னும் ஜெயகாந்தனின் கூற்று முற்றிலும் உண்மை.
வரதட்சணை என்னும் விலங்குபெண் பார்க்கும் படலம், பெண் வளர்ந்து ஆளாகி விட்டால் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்பது இன்றைய சமுதாயத்தில் குதிரைக் கொம்பாக ஆகி விட்டது.
வரதட்சணை என்னும் விலங்கு அவள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருப்பதால் முதிர்கன்னிகளாய்த் திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னிப் பெண்களின் எண்ணிக்கை இன்று கூடிக் கொண்டே போகிறது;“கார்த்திகைத் தீபங்கள் ஏற்றி மார்கழிக் கோலங்கள் இட்டு காத்திருக்கும் பெண்களுக்கு தை மட்டும் வருவதேயில்லை” என்றும்“அம்மாவுக்கு 15ல் அக்காவுக்கு 25ல்எனக்கு 35ல்”என்றும் முதிர்கன்னிகளின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன ஹைகூ கவிதைகள்.
அவமானங்கள்பெண் பார்க்கும் படலம் என்ற பெயரில் இன்று ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அவமானங்கள் மிகப் பலவாகும். அவள் தான் பெண் என்பதைக் காட்ட எவ்வளவும் செய்தாக வேண்டும்.“சந்தைக்குப் போகும் மாடுகள் கூடபல்பிடித்து சுழிசுத்தம் பார்த்து விலை நிர்ணயிக்கப்படும்;திருமணச் சந்தையிலோ பெண்ணின் நடைபார்த்து சடைபார்த்து விலை நிர்ப்பந்திக்கப்படும்”என்று பெண்ணின் அவல நிலை தொடர்கிறது
காலங்காலமாகப் பெண் பலவீனமானவள் என்று அடக்கி வைக்கப்பட்டிருக்கிறாள். இக்குறை நீங்கும் வகையில் இந்த நுாற்றாண்டில் ஒரு வெளிச்சம் தோன்றத் தொடங்கியுள்ளது; பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் பெண்கள்; அதற்கு ஆண்களின் துணையும் இருந்தால்தான் முடியும் என்பது பெரும் உண்மை .
பெண் தலைமைத்துவ குடும்பங்களா இன்று வேர் விட தொடங்கி விடடான அவைகள் விழுதுகள் பரப்பி தம் வாழ்வியலை சீராக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை பெண்களின் சுய மரியாதையும் அவர்களின் அறிவும் முயற்சியும் மதிக்கப்படும் பட்ஷத்தில் அவள் விடுதலையாவாள் .