பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வரும் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள
பொது முடக்கம் சட்ட திட்டங்கள் நீட்டிக்கப்பட்டுகொண்டே செல்கிறது . அதேசமயம், பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலையிழந்த ஏராளமானோர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரிகட்ட அரசு சலுகைகளை அறிவித்தாலும் அது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்த கொரோனா காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால், இவற்றை வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நல்ல நிலையில் இருக்கும் மக்களே கடைக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வரும் நிலையில், தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் என்ன செய்யவேண்டும் என்ற அறிவிப்பைக்கூட அரசு வெளியிடவில்லை . அரசு அலுவலகங்களில் பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர விலக்கு எதுவும் வழங்கப்பட்டதாகவும் தெரியவில்லை . இருந்தாலும் இதுபோன்ற காலங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களை வகுப்பதும், அத்தியாவசிய தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்ய தேவையான வழிவகைகளை செய்வதும் அவசியமாகிறது.
இலங்கையில் இருக்கும் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவிகளை நம்பி இருப்பவர்கள். அதிலும், பலர் அரசு தரும் உதவிகளை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்கள். அன்றாட தேவையான உணவு, மருந்து உள்ளிட்டவைகளை பெருவதற்கு மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நகற்புற பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஓரளவுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஊரக பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மோசமாக உள்ளது என தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் இதுபோன்ற காலங்களில் சிறப்பு நிவாரண நிதி உள்ளிட்டவைகளை மாற்றுத்திறனாளிகள் பலன் பெறும் வகையில் அரசு தர வேண்டும் என கோரி நிற்கின்றனர் .