இயற்கையான பார்வை குறைபாடுகள் இப்படியும் வரும்

அம்ப்லியோபியா என்பது தெளிவான அல்லது கூர்மையான பார்வை குறைதல் ஆகும். மூளையானது கண்களின் பார்வையைச் சரியாக விரிவாக்காதிருக்கும்போது இது சம்பவிக்கும். பெரும்பாலும் அம்ப்லியோபியா நோய் ஒரு கண்ணில் மாத்திரம் உண்டாகும், ஆனால் இந் நோய் இரண்டு கண்களிலும் உண்டாகலாம். அம்ப்லியோபியா நோய் “சோம்பற் கண்” என்றும் சிலவேளைகளில் அழைக்கப்படுகிறது.

பார்வையைப் பிறப்பிப்பதற்கு மூளையும் கண்களும் சேர்ந்து இயங்க வேண்டும். மூளையும் ஒரு கண்ணும் சேர்ந்து வேலைசெய்யாத போது தெளிவற்ற பார்வை உண்டாகிறது.

நோய் உண்டாவதற்கான காரணங்கள்

பிம்பத்தை மங்கச் செய்யும் அல்லது மூளை ஒரு கண்ணை மாத்திரம் நல்லதென்று தேர்ந்தெடுக்கும் நிலைமை அல்லது நோய் உண்டாகும்போது அம்ப்லியோபியா ஏற்படலாம். அதற்குப் பின்வருவனவற்றுள் ஏதாவது நிலைமை காரணமாக இருக்கலாம்:

வாக்குக் கண், கருவிழிகள் நேராக அமைந்திருக்காதபோது
சமநிலையற்ற கண் குவிமையம், கண்களிரண்டும் வேறுபட்ட நிலையில் பார்க்கும்போது
கண்படலம் (கண் வில்லையில் படலம்)
கடுமையான இமை இறக்கம்
குறைகாலப் பிறப்பு
தெளிவற்ற பார்வை அல்லது வாக்குக்கண் உள்ள பெற்றோரிடமிருந்து மரபுவழி
கண்களைப் பாதிக்கின்ற ஏதாவது ஒரு நோய்
9 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள்தான் அம்ப்லியோபியா நோய்க்கு அதிக ஆபத்திலிருக்கிறார்கள். இந்த வயதில், பிள்ளைகளின் கண்கள் இன்னும் விருத்தியடைந்துகொண்டேயிருக்கும். பெரும்பாலும் வயது குறைந்த பிள்ளைகள்தான் அதிக ஆபத்திலிருக்கிறார்கள்.

தெளிவற்ற பார்வைக்குச் சிகிச்சை

ஒவ்வொரு பிள்ளைகளின் அம்ப்லியோபியா நோயும் வித்தியாசமாயிருக்கும். உங்கள் பிள்ளைக்கான சிறந்த சிகிச்சைபற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கமளிப்பார். சிகிச்சையானது, உங்கள் பிள்ளையின் வயது மற்றும் அம்ப்லியோபியா நோய்க்கான காரணம் என்பனவற்றைப் பொறுத்ததாக இருக்கும்.

சிகிச்சையானது பின்வருவனற்றுள் ஒன்று அல்லது பலவற்றை உட்படுத்தும்:

மூக்குக் கண்ணாடி

உங்கள் பிள்ளையின் கண்பார்வையை முன்னேற்றுவிக்க மூக்குக் கண்ணாடி தேவைப்படலாம். இரு கண்களும் ஒன்றாக வேலை செய்வதற்கும் இரு கண்களையும் ஒரே பிம்பத்தில் குவியச் செய்வதற்கும் மூக்குக் கண்ணாடி உதவி செய்யும்.

மூக்குக் கண்ணாடி உதவி செய்வதற்கு, உங்கள் பிள்ளை விழித்திருக்கும்போதெல்லாம் அவன்(ள்) அதை அணிந்திருக்க வேண்டும்.

ஒட்டுப்போடுதல்

அதிக பார்வையுள்ள கண்ணுக்கு ஒட்டுப் போட்டு மறைத்து விடுவது, “சோம்பற்” கண்ணைப் பலப்படுத்த உதவி செய்யும்.

எவ்வளவு அடிக்கடி மற்றும் எவ்வளவு காலத்துக்கு ஒட்டுப்போடுதல் தேவைப்படும் என்பது பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கமளிப்பார். கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கிறதா என்பதைச் சோதித்துப்பார்ப்பதற்காக, மருத்துவர் அடிக்கடி உங்கள் பிள்ளையைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டியிருக்கலாம்.

கண் சொட்டு மருந்து

சில சமயங்களில், வலிமையான கண்ணிலுள்ள பார்வையை மங்கச் செய்வதற்காக மருத்துவர் விசேஷ கண் சொட்டுமருந்தை எழுதிக் கொடுக்கலாம். இது சோம்பற் கண்ணை மேலுமதிகமாக வேலை செய்யத் தூண்டும்.
அறுவைச் சிகிச்சை

பின்வருவனவற்றோடு சேர்ந்து தெளிவற்ற பார்வை ஏற்பட்டால் அப்போது அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகலாம்:

வாக்குக் கண்
கண்ணில் படலம்
இமை இறக்கம்
கண்களில் வேறு நோய்கள்
அறுவைச் சிகிச்சை அவசியமானால், செயல் முறைகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறுவார்

உங்களுக்கு கேள்விகள் அல்லது கவலைகளிருந்தால், உங்கள் பிள்ளையைப் பார்வையிட்ட மருத்துவரை அழையுங்கள்

முக்கிய குறிப்புகள்
அம்ப்லியோபியா என்பது கூரிய பார்வையில் அல்லது கண் நடவடிக்கையில் குறைவு.
மூளை கண்களில் ஒன்றை முழுமையாக உபயோகிக்காததன் காரணமாக அம்ப்லியோபியா வழக்கமாக ஒரு கண்ணில்தான் ஏற்படும்.
9 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் தான் அதிக ஆபத்திலிருக்கிறார்கள்.
ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்