யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் இன்று வவுனியாவைச் சென்றடைந்தது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொஹமட் அலியுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிரேமசந்ர ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் மும் மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவைச் சென்றடைந்த மூவரையும் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வர்த்தக பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
அவர்களின் செலவுக்காக தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் தலா 10,000 ரூபாயை வழங்கியிருந்தனர்.
இந்த பயணமானது, எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொழும்பை சென்றடையவுள்ளது. மேலும் குறித்த மூவரும் ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் வழங்கவுள்ளனர்.