இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி யாழ்ப்பாணம்
ஆகிய மாவட்டங்களுக்கான இணைப்பாளர் திரு.ரி.கனகராஜ் அவர்கள்
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மூலம் இலங்கையில் வாழும்
ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்பெறும் வகையில் வழங்கிய
ஒலி-ஒளி வடிவ நேர்காணல்
1. பாதிக்கப்பட்டோரினது மனித உரிமைகள் குறித்து என்ன
அடிப்படைப் புரிதலை பாதிக்கப்பட்டோர் கொண்டிருக்க வேண்டும்?
மனித உரிமைகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. உலகத்தில்
வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான உரிமைகள் தான்
மனித உரிமைகளாக இருக்கின்றது.
ஒருவன் மனிதனாக பிறந்திருக்கின்றபடியால் அவனுக்கு கிடைக்கக்கூடிய
எல்லா உரிமைகளும் மனித உரிமைகளாக இருக்கின்றது.
மனித உரிமை அடிப்படைக் கோட்பாடு என்பது சமத்துவம். உயிர்கள் யாவும்
சமம் என்பது தான் மனித உரிமையினுடைய அடிப்படைக் கோட்பாடு.
சகல உயிர்களும் சமமாக நடாத்தப்படுவதை உறுதி செய்கின்ற ஒரு
விடயம்தான்; மனித உரிமைகள்.
மனித உரிமைகள் என்று ஒன்று இல்லை என்று சொன்னால் மனிதன்
மனிதனாக வாழ்ந்திருக்கமாட்டான். அல்லது மனிதன் ஒரு காட்டுமிராண்டி
யுகத்திற்கு சென்றிருப்பான் மீண்டும் மனித உரிமைகள்தான் மனிதனை ஒரு
நாகரீகமான வாழ்க்கை முறைக்கு கொண்டு வந்துள்ளது.
இவ்விடத்தில் நாங்கள் முக்கியமாக இன்று கதைக்கப்படுகின்ற விடயங்கள்
பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய
உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களுடைய உரிமைகளை
மேம்படுத்தி கொள்ளவும் கட்டாயமாக அவர்கள் மனித உரிமைகள்
தொடர்பான புரிதலை நிட்சயமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
அவ்வாறு அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களது
உரிமைகளை இலகுவாக மீறப்படுவதற்கு அந்த புரியாமை என்பதே ஒரு
காரணமாக அமையும். ஆகவே ஒவ்வொரு பிரஜையும் அல்லது மனித
ஜீவராசிகளும் தனக்குரிய உரிமைகளை தெளிவாகவும் மிக ஆளமாகவும்
தெரிந்திருத்தல் என்பது மிக முக்கியம்.
குறிப்பாக இன்று பார்க்கின்ற போது கூடுதலாக மனித உரிமைகளுக்கு
உட்படுகின்றவர்களாக இருக்கின்றவர்கள் பெண்கள், சிறுவர்கள் அதே
போன்று மாற்றுத்திறனாளிகள் இவர்கள்தான் கூடுதலாக மனித உரிமை
மீறல்களுக்கு அதாவது இயற்கையாக நடந்த சம்பவங்களினூடாக சில மனித
உரிமை மீறல்கள் காரணமாகின்றது. மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற
பல செயற்பாடுகள் காரணமாகக்கூட சில உரிமை மீறல்களுக்கு அவர்கள்
உட்படுகின்றார்கள்.
அவர்கள் தன்னுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும், தன்னுடைய
உரிமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் அல்லது அவர்களுடைய
உரிமைகள் மீறப்படுகின்ற போது அதற்குரிய சட்ட நடவடிக்கையினுடாக
தனக்குரிய உரிமைகளுக்குரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்ளுவதற்கு
அவர்கள் மனித உரிமைகள் தொடர்பான புரிதலை நிட்சயமாக
கொண்டிருத்தல் வேண்டும்.
ஆகவே புரிதல் என்பது அவருடைய உரிமையை பாதுகாத்துக் கொள்ளவும்
அவருடைய உரிமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக முக்கியமா
அமையும். பாதிக்கப்பட்டவர்கள் நிட்சயமாக மனித உரிமை தொடர்பான
ஒரு புரிதலைக் கொண்டிருத்தல் வேண்டும்.
2. ஒரு மாற்றுத்திறனாளிக்கு என்ன வகையான அடிப்படை உரிமைகள்
இருக்கின்றன? அவை எவ்வாறு வரையறுக்கப்பட்டிருக்கின்றன?
குறிப்பாக நாங்கள் மனித உரிமை, அடிப்படை உரிமை என்கின்ற இரன்டு
தளங்களில் இருந்து பார்க்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்திற்கு பிறகு 1948.12.10ம் திகதி ஐக்கிய
நாடுகளின் பொது சபையிலே அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக மனித
உரிமைகள் பிரகடனத்திலே பல மனித உரிமைகள் அங்கு
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை வெளிப்பாடுகளாக
அமைந்திருக்கின்றன.
இவை மனிதனுடைய உரிமைகள் என்று அங்கு வரிசைப்
படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் அடிப்படை உரிமைகள் என்று
வருகின்ற பொழுது ஒரு நாட்டினுடைய அரசியல் அமைப்பு அங்கு
முக்கியத்துவம் பெறும்.
குறிப்பாக நாட்டினுடைய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற
மனித உரிமைகள்தான் அங்கு அடிப்படை உரிமைகளாக மாற்றம்
பெறுகின்றன. ஆகவே சட்டரீதியான அந்தஸ்த்தை பெற்றுக் கொள்கின்ற
உரிமைகளாக இந்த அடிப்படை உரிமைகள் இருக்கும்.
ஆகவே இலங்கையினுடைய அரசியல் அமைப்பை பொறுத்த வரையிலே
1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பில் மூன்றாவது
அத்தியாயத்திலே அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயம் தனியாக
காணப்படுகின்றது. அந்த அத்தியாயத்திலே பல உரிமைகள்
கூறப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த உரிமைகள் இலங்கையில் வாழ்கின்ற சகல பிரஜைகளுக்கும்
சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் வாழ்கின்ற எல்லா நபர்களுக்கும் அவை
அனுபவிக்கக் கூடியவையாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்
இலங்கையினுடைய 1978ம் அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருக்கின்ற
அடிப்படை உரிமைகள் அனைத்தும் ஒரு மாற்றுத்திறனாளிக்கும்
அனுபவிக்கக்கூடிய ஏற்பாடுகள் காணப்படுகிறது.
குறிப்பாக சித்திரவதையில் இருந்து விடுபடுதல். ஆகவே இவ்விடத்தில் ஒரு
மாற்றுத்திறனாளி எந்தவிதமான சித்திரவதைக்கும் உட்படுத்தப்படலாகாது.
மாற்றத்திறனாளிகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள் சட்டத்தின் முன்
யாவரும் சமம் என்பதோடு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கும்
உரித்துடையவர்கள். அது சில நேரங்களில் அவர் மாற்றுத்திறனாளி என்ற
காரணத்தின் அடிப்படையிலே அவர்கள் பாரபட்சத்திற்குட்படுகின்ற
சந்தர்ப்பங்கள் பார்த்திருக்கின்றோம்.
அதற்காக தான் குறிப்பாக நாம் இன்றைக்கு அவர்களது அணுகும் வசதிகள்
தொடர்பில் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக நான் ஒரு மனிதன்
என்னால் எல்லாம் செய்யமுடியும் என்றால் நான் இந்த கட்டடத்திற்கு
இலகுவாக பிரவேசிக்க முடியும். ஆனால் ஒரு மாற்றுத்திறனாளி
என்பவருக்கு பல தடைகள் இருக்கின்றது. அது ஒரு பாரபட்சமான
நடவடிக்கைதான்.
ஆகவே இந்த 12வது உறுப்புரையில் சொல்லப்பட்டிருக்கின்ற எல்லா
உரிமைகளையும் அதாவது சட்டத்தின் முன் யாவரும் சமம், சட்டத்தினால்
சமமான பாதுகாப்பு உரித்துடையவர்கள், இனம், மதம், மொழி, பால், சாதி,
அந்தஸ்த்து, பிறப்பிடம் அல்லது வேறு எந்தவொரு காரணத்தினாலும்,
அடிப்படையில் எந்தவொரு நபரும் பாரபட்சத்திற்கு உட்படுத்தலாகாது.
இவ்வாறான விடயங்கள் மாற்றுத்திறனாளிக்கும் உடையதாக இருக்கும்.
நாங்கள் 13வது உறுப்புரையில் சற்றுப் பார்த்தால் அது சட்டவிரோதமான
அல்லது சட்டத்திற்குப் புறம்பான வகையில் கைது செய்யப்படுதலையோ,
தடுத்துவைக்கப்படுதலுக்கோ எதிரான ஒரு உரிமையாக இருக்கும்.
இவ்விடத்தில் மாற்றுத்திறனாளிகளும் சட்டத்திற்குப் புறம்பான வகையில்
கைது செய்தலோ அல்லது அவர்கள் சட்டத்திற்கு புறம்பானவகையில்
தடுத்து வைக்கப்படவும் ஆகாது.
அதே நேரம் 14வது உறுப்புரை இலங்கை பிரைஜைகளுக்காகவே
உரித்தாக்கப்பட்ட உரிமைகள்.
பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம். தகவல் ஒன்றை தேட,
பெற்றுக்கொள்ள, வெளியிடுவதற்கான உரிமை.
ஒன்று கூடுவதற்கான உரிமை. அல்லது ஒருங்குசேர்வதற்கான உரிமை
தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதற்கான உரிமை.
விரும்பிய சட்டரீதியான தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான உரிமை.
தன்னுடைய மொழியை, சொந்த கலாச்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான
உரிமை.
வசிப்பிடத்திற்கான உரிமை.
இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்கும் வெளிநாட்டில் இருந்து
திரும்பி வருவதற்கான உரிமைகள். இவை அனைத்தும் ஒரு
மாற்றுத்திறனாளிக்கும் உரித்தான உரிமைகளாக இருக்கும்.
இதே நேரம் இலங்கையினுடைய அரசியல் அமைப்பினுடைய 12.4வது
உறுப்புரை பெண்கள், சிறுவர்கள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில்
சட்டத்தினூடாகவோ, துணைநிலை சட்டத்தினூடாகவோ சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்பு
ஏற்பாடாகக்கூட இருக்கின்றது. இவ்விடத்திலும் மாற்றுத்திறனாளிகளுடைய
நலன் கருதி நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு சட்டதினூடாக அல்லது
துணைநிலை சட்டத்தினூடாக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என
சொல்லப்படுகின்றது. இவை எல்லாமே மாற்றுத்திறனாளிக்கு இலங்கையில்
இருக்கின்ற உரிமைகளாக இருக்கும். அடிப்படை உரிமைகளாக நாங்கள்
பார்க்கக்கூடியதாக இருக்கும்.
3. அதேபோல் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள், முதியோர்களுக்கான அடிப்படை உரிமைகள் எவை எவை எல்லாம் இருக்கின்றன?
சிறுவர்கள்; முதியோர்களுக்கென தனித் தனியே அடிப்படை உரிமைகள்
என்று பார்ப்பதில்லை. ஏற்கனவே சொன்னது போல் இலங்கையின்
அரசியலமைப்பில் 10வது உறுப்புரை தொடக்கம் 14வது உறுப்புரை
வரைக்கும் சொல்லப்பட்டிருக்கின்ற சகல உரிமைகளும் ஆண், பெண்
சிறுவர்கள்;, முதியோர்களுக்கும் பாரபட்சமின்றி சகலருக்கும் அவை
உரித்தான உரிமைகள்தான்.
இருப்பினும் பெண்கள், சிறுவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்லது
முதியோர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இங்கு
முக்கியமான விடயம்.
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்று சொன்னாலும் எல்லாம் சமமானவை
அல்ல. சமமானவர்களுக்கிடையில் சட்டம் சமனாகப் பகிரப்பட வேண்டும்.
ஆகவே எல்லாவற்றையும் நாம் சமம் என்;று சொன்னால் அங்கு ஒரு தரப்பு
எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் ஒரு தரப்பிற்கு எந்த ஒரு
சலுகைகளும் கிடைக்காது. அல்லது ஒரு தரப்பு எல்லா
வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கும் இன்னொருதரப்பு இல்லாமல்
போகலாம்.
சிறுவர்களையும் முதியவர்களையும் எடுத்தால் அங்கு பலம் பொருந்தியவராக
ஒரு முதியோரோ அல்லது வயது வந்தவரோ இருப்பார். ஆனால் சிறுவர்
அங்கு இலகுவில் பாதிக்கப்படுபவராக இருப்பார். ஆகவே அடிப்படை
உரிமைகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும்கூட சமத்துவம்
என்று வருகின்ற போது சமமானவர்களுக்கிடையில்தான் சட்டம் சமமாக
பகிரப்பட வேண்டும்.
ஆகவே சிறுவர்கள் தொடர்பாகவும், பெண்கள் தொடர்பாகவும், முதியோர்
தொடர்பாகவும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகவும் விசேடகவனம்
அல்லது ஒப்புரவுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாங்கள்
செயற்பட்டால் இந்தச் சிறுவர்களுடைய உரிமைகளையும்,
முதியோர்களுடைய உரிமைகளையும் எங்களுடைய
அரசியலமைப்பினுடைய ஏற்பாடுகளுக்கிணங்க நாங்கள் பாதுகாத்துக்
கொள்ளக்கூடியதாக இருக்கும்.
4. அடிப்படை உரிமைகள் ஒருவரப்பிரசாதமாக கொள்ளப்பட வேண்டுமா? அல்லது அவை உரிமைகளாக அவர்களுக்கு கிடைக்கின்றன
என்பதனை உறுதிப்படுத்த வேண்டுமா?
வரப்பிரசாதம் என்பதற்கு அப்பால் நாங்கள் அவை உரிமைகள். உரிமை
என்பது அவனுக்கு உரித்தான ஒன்று வரப்பிரசாதம் என்பது
இன்னொருவரால் எங்களுக்கு வழங்கப்படுகின்ற ஒன்றாகத்தான் இருக்கும்.
அதாவது உரிமை என்ற சொல்லை உரித்து என்ற சொல்லில் இருந்து
தோன்றியதாக சொல்லுவோம். எனக்கு எரித்தான எல்லா விடயங்களும்
உரிமைகளாக இருக்கும். இந்த உரித்துக்களைதான் நாங்கள்
அனுபவிக்கின்றோம். ஆகவே அதை நாம் வரப்பிரசாதமாகப்
பார்க்கக்கூடாது. அவை உரிமைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
உரிமைகள் தொடர்பில் நாங்கள் அரசியல் அமைப்பை ஏன் நாங்கள்
முழுமையாக உட்படுத்துகின்றோம் என்றால் ஒரு அரசிற்கு அந்த
உரிமைகளைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டை நாங்கள்
வலியுறுத்துவதற்குதான் இந்த உரிமையில் இருக்கின்ற முக்கியமான
விடயம்.
ஒரு அரசு மனிதனுடைய உரிமைகளை பல ஏற்பாடுகளினூடாக பாதுகாக்க
வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஒரு நாட்டினுடைய உயர்ந்த அதாவது
மீ உயர் சட்டமாக இருப்பது அரசியல் அமைப்பு. அந்த அரசியல் அமைப்பில்
உள்வாங்கப்பட்டிருக்கின்ற உரிமைகள் சட்ட வலுவானவை. அரசிற்கு
பொறுப்பு இருக்கின்றது அவ்வாறான உரிமைகளை பாதுகாக்கவும்,
மேம்படுத்தவும் வேண்டும்.
ஆகவே வரப்பிரசாதமாக ஏற்றுக்கொள்ள முடியாது. வரப்பிரசாதம் என்று
சொன்னால் அவை கிடைக்கும் ஆனால் கிடைக்காமல் கூட போகலாம்.
உரிமைகள் அவ்வாறு சலுகைகள் அல்ல. உரிமைகள் அவை உரித்தானவை.
ஒரு மனிதனுக்கோ, ஒரு மனித ஜீவராசிகளுக்கோ உரித்தானவை.
ஆகவேதான் நாங்கள் அரசியல் அமைப்பு ஒரு நாட்டினுடைய உயர்ந்த
சட்டம் என்பது போல் அடிப்படை உரிமைகளும் அந்த நாட்டு மக்களுடைய
பிரதான உரிமைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவற்றை
பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாரைச் சார்ந்தது என்று சொன்னால் அந்த
நாட்டினுடைய அரசு அல்லது அந்த அரசாங்கத்தை சார்ந்ததாக இருக்கும்.
5. அவ்வாறு அந்த உரிமைகள் கிடைக்கவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் எடுக்க வேண்டும்? ஒரு மனித
உரிமை ஆணையம் என்ற வகையில் நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்?
குறிப்பாக இலங்கையை கொண்டு அடிப்படை உரிமை மீறலை
கதைப்போமானால் எங்களுடைய அரசியலமைப்பு மிகத் தெளிவாகச்
சொல்லுகின்றது ஒரு அடிப்படை உரிமை தொடர்பில் என்னென்ன
ஏற்பாடுகள் இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. அந்த அடிப்படை
உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் சொல்லப்படுகிறது.
மீறலும் மீறலுக்குமான நிவாரணமும் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையின் அரசு நம்மிடம் தெளிவாக சொல்கின்றது உரிமை
ஆட்சித்துறை நடவடிக்கையால், நிர்வாகத்துறை நடவடிக்கையினால்
மீறப்பட்டால் அது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும். அவ்வாறு
கருதினால் ஒருவர் இலங்கையினுடைய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அல்லது
பாராளுமன்றத்திற்கான நிர்வாக ஆணையாளரிடம் (ஒம்புட்ஸ்மன்)
முறைப்பாடுகளை செய்து எங்களுடைய உரிமைகளுக்கான
நிவாரணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இரண்டிற்கும் அப்பால் சாதாரண மக்கள் அணுகக்கூடியதாக
அமைக்கப்பட்டதுதான் மனித உரிமை ஆணைக்குழு. ஆகவே அடிப்படை
உரிமை மீறல் தொடர்பாக நிர்வாக துறையினருக்கு எதிராகவோ அல்லது
நிறைவேற்றுத் துறையினருக்கு எதிராகவோ இலங்கையின் மனித உரிமை
ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைப்பதனூடாக இலங்கை மனித
உரிமை ஆணைக்குழு உரிமை மீறல்கள் உண்மையிலே நிகழ்ந்திருந்தால்
அந்த உரிமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எங்களுடைய பிரதான
கடமையாக இருக்கும். இவ்வாறு பல வழக்குகள் முறைப்பாடுகளைப்
பொறுத்து செய்திருக்கின்றோம்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளை செய்து
கொண்டிருக்கின்றோம். சாதாரண பிரைஜை சென்று வரக்கூடியதாக
இருக்கின்ற எல்லா இடங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளியும் செல்ல
வேண்டும் என்பதில் இலங்கை அரசு சில சட்ட ஏற்பாடுகள்
செய்திருக்கின்றது.
அந்த சட்டத்திற்கு அப்பால் ஒரு அதி விசேட வர்த்தமானியினூடாக அந்த
ஒழுங்கு விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்குத்
தாக்கலினுடைய தீர்ப்பு சாதகமாக வந்திருக்கின்றது.
இவ்வாறான விடயங்கள் இருக்கின்ற போது பல நிறுவனங்களிலே இந்த
மாற்றுவலுவுடையோர் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்குரிய அணுகும்
வசதிகள், அல்லது பொது போக்குவரத்து சேவையிலே அணுகும் வசதிகள்
மிகவும் அடிமட்டத்தில் அல்லது தாழ் மட்டத்தில் இருக்கின்றது. ஆகவே அரச
திணைக்களங்களோடு நாங்கள் கதைக்கின்றோம். நாங்கள் செல்லும்
இடங்களில் அவ்வாறான விடயங்கள் இருக்குமாக இருந்தால் அதனை
அவதானித்து அந்த நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் முறைப்பாடுகளை
பதிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
குறிப்பாக அண்மையில் கூட கொழும்பு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஒரு
மாற்றுத்திறனாளி மாணவனிற்கு கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லை
அந்த நிர்வாகம் சரியான வகையில் அந்த மாணவனுக்குரிய வசதிகள்
ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்று ஒரு முறைப்பாட்டின் அடிப்படையில்
மிக சிறந்த பரிந்துரை ஒன்றை நாங்கள் வழங்கியிருக்கின்றோம்.
அதே போல யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் குறிப்பாக வங்கிகள்.
வங்கிகளில் பல மோசடிகள் இடம் பெறுகிறது. மாற்றுத்திறனாளிகள்
உடசெல்ல முடியாத சந்தர்ப்பம் இருக்கின்ற போது மூன்றாம் நிலை நபரின்
உதவியை நாடுகின்ற போது உதாரணமாக தன்னியக்க பணம் பெறும்
இயந்திரத்திலே பணத்தை எடுப்பதற்கு அவர் ஒருவரை நாடுகின்ற போது
அவர் மோசடிகளுக்குள்ளாகின்றார். ஆகவே நேரடியாக அவர்கள் சென்று
பணம் பெறக் கூடிய வகையில் யாழ்ப்பாணம் இலங்கை வங்கியில்
நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று பல இடங்களுக்கு செல்கின்ற போது இந்தவொரு
கண்ணோட்டம் எங்களுக்கு இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்குரிய
வசதிகள் இருக்கின்றதா? இல்லையா? உதாரணமாக நாங்கள் ஒரு நிகழ்வு
செய்வோமாக இருந்தால் கட்டாயம் அங்கு மாற்றுத்திறனாளிகள்
வரக்கூடியவாறான வசதி இருக்கின்ற ஒரு அரங்கை தெரிவு செய்வது
எங்களுடைய ஒரு நடவடிக்கையாக இருக்கின்றது. ஆகவே
மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அவர்கள் பாரபட்சமாக நடத்தக்கூடாது
என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் உறுதிப்படுத்துகின்ற
செயற்பாடுகளை செய்து வருகின்றோம்.
6. பாதிக்கப்பட்டோர் சமூகம் இவ்வாறு ஒரு மனித உரிமை ஆணையம் தங்களுக்கு இருக்கின்றது தங்களது உரிமைகளை பேணிப் பாதுகாக்க
இருக்கின்றது என்ற அடிப்படை புரிதலை அவர்கள்
கொண்டிருக்கின்றார்களா? இல்லை நீங்கள் சமூகத்திலே கண்டறிந்தீர்களா?
இல்லை புரிதல் இருக்கின்றது இவர்கள் எம்மை நாடி வருகின்றார்கள்
பெரும்பாலும் குறிப்பாக வடகிழக்கைப் பொறுத்தவரையில் இந்த மனித
உரிமை ஆணைக்குழு என்பது அவர்களுக்கு பெரிய ஒரு வரப்பிரசாதம்.
குறிப்பாக யுத்த காலப்பகுதியிலே மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த
மக்களுக்கு உதவிய செயற்பாடுகள் மிக முக்கியமானவை. வடக்கை
பொறுத்தவரையில் சரணடைந்தவர்களை பாதுகாத்த ஒரு விடயம் மக்கள்
மத்தியிலே மனித உரிமைகள் ஆணைக்குழுவினுடைய பெயரை நன்றாக
எடுத்துச் சென்றிருக்கின்றது.
ஆகையிலே மக்கள் பெரும்பாலும் தங்களுடைய பிரச்சினைகளுக்கு மனித
உரிமை ஆணைக்குழுவை நாடுவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில்
நாங்கள் பார்த்திதிருக்கின்றோம். குறிப்பாக மனித உரிமை
ஆணைக்குழுவிற்கு ஒரு சட்டம் இருக்கின்றது அந்த சட்டத்திலே எங்களுக்கு
வரையறை இருக்கிறது. அந்த வரையறைக்குட்பட்டுதான் நாங்கள்
நடவடிக்கைகள் எடுப்போம்.
குறிப்பாக நாம் அரச திணைக்களங்களுக்கு எதிராக வருகின்ற
பிரச்சினைகளைத்தான் பெற்றுக் கொள்வோம். ஆனால் சில நேரங்களில்
தங்களது குடும்பப்பிணக்குகள் கொண்டுவருவார்கள், காணிப் பிரச்சினைகள்
கொண்டுவருவார்கள், கொடுக்கல்வாங்கல் பிரச்சினைகள்
கொண்டுவருவார்கள், விவாகரத்து அல்லது ஸ்தாபகரிப்பு போன்ற
விடயங்கள் கொண்டுவருவார்கள் இவற்றை நாம் எங்களது சட்டத்தில்
உள்வாங்க மாட்டோம்.
ஆனால் மக்கள் எங்களை நாடி வந்து ஆலோசனைகள் பெற்றுச் செல்கின்ற
அளவிற்கு மக்கள் விழிப்படைந்து இருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகள்
தொடர்பில் ஓரளவு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனைய மக்கள்
மனித உரிமை ஆணைக்குழுவை நாடுவதை ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது
மாற்றுத்திறனாளிகள் வருகை சற்றுக் குறைவாகத்தான் இருக்கின்றது.
ஆனால் கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை
வழங்குவோம்.
அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி (இடுப்பிற்குக் கீழ் இயங்காத
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்) ஒரவரை தாக்கியதாக பொலிசில்
முறைப்பாடு செய்யப்பட்டதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு நீதி
மன்றத்திலே அவர் ஆயர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற கட்டளையின் பெயரில்
அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாண சிறச்சாலையின் புதிய கட்டடம் அங்கு
மாற்றுத்திறனாளிக்குரிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.
உடனடியாக எங்களது கவனத்திற்குக் கொண்டுவந்து, நாங்கள் உடனடியாக
அந்த சிறைச்சாலைக்குச் சென்று அந்த நிர்வாகத்தோடு கலந்துரையாடி
அவருக்குகுரிய ஏற்பாடுகளை வழங்கிய செயற்பாடுகளை நாங்கள்
செய்திருக்கின்றோம்.
ஆகவே நாங்கள் மக்களுடைய எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்
வருகின்ற முறைப்பாடுகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.
அண்மையில்கூட ஆணையாளருடைய கலந்துரையாடலிலே
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற அரச உதவுத்தொகையிலே
குறைபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர்களுடைய மருத்துவ
அறிக்கையில் 100 வீதம் அங்க அவயவங்கள் இழந்தவர் என்று
சொல்லப்பட்டும் அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கப் பெறாத
சந்தர்ப்பத்தில் அதற்கான முறைப்பாடுகள் எமது கவனத்திற்குக்
கொண்டுவரப்பட்டு தற்போது 200, 250 முறைப்பாடுகள் பெற்றுள்ளோம்.
ஒரு அமைப்பு தான் வழங்கியிருந்தது. அதனை நாங்கள் தரம்பிரித்துக்
கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு முறைப்பாடாக ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகள்
இருக்கின்றார்கள். உதாரணமாக பார்வை குறைபாடுடையோர், கால்களை
இழந்தவர்கள், கேட்டல் குறைபாடுறையோர், அவயவங்களை இழந்தவர்கள்,
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அடிப்படையில் நாங்கள்
கோவைகளைப் பிரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அதன்பின் நாங்கள் சமூகசேவை திணைக்களம் வடமாகாணம், மத்தியில்
உள்ள சமூகசேவை திணைக்களம் அவர்களுடன் நாங்கள் ஆராய்ந்து
அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்
மக்கள் நேரடியாக வராவிட்டாலும் மூன்றாம் தரப்பினூடாக வருகின்ற
முறைப்பாடுகளையும் ஏற்றுக் கொள்கின்றோம். எங்களுடைய சட்டம்
அதற்கு இடம்கொடுக்கும்.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்டவர் நேரடியாக
வரவேண்டும் என்கின்ற தேவை இல்லை. மூன்றாம் தரப்பினூடாகவும்
வரலாம். ஆகவே நாங்கள் இந்த முறைப்பாடுகளை அமைப்புகளுடாகவே
பெற்றிருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கக்
கூடியவாறு இருக்கும்.
7. மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிய பரிதலை பாதிக்கப்பட்டோருக்கு கொண்டு சேர்ப்பதற்கு நம் போன்ற அமைப்புக்கள்
எவ்வாறு உதவமுடியும்?
குறிப்பாக நாங்கள் சிவில்; சமூகத்தை வலுப்படுத்தக் காரணம் சிவில் சமூகம்
என்பது மக்களுடைய பிரதிநிதிகளாக செயற்படுகின்றது. சமூகம் சார்ந்த
அமைப்புக்கள் சிவில் சமூகம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் இவை
எல்லாம் மக்கள் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளாக செயற்படுகின்றார்கள்.
மனிதஉரிமை ஆணைக்குழுவாகிய நாங்கள் சிவில் சமூகத்துடைய
ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் சிவில் சமூகத்தை
அழைத்து மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து மாதாந்த
ஒன்றுகூடலை செய்து வருகின்றோம்.
அத்த அடிப்படையில் இந்த பாதிக்கப்பட்டவர்களும். மாற்றுத்திறனாளி
அமைப்புக்களும் மனித உரிமை ஆணைக்குழுவோடு இணைந்து
சேவையாற்ற முடியும். ஏற்கனவே சொன்னது போல மனித உரிமை
ஆணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் தான் முறைப்பாடு செய்ய
வேண்டிய அவசியம் இல்லை. சிவில் சமூகத்தினரும் முறைப்பாடுகளைச்
செய்யலாம். அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஒருவர் முறைப்பாடு
செய்ய வேண்டும் என்ற அவசியம் கட்டாயம் இல்லை. அவர் சரியான
தகவல்களை வழங்கினால் மனித உரிமை ஆணைக்குழு தானாக
விசாரணைகளை செய்யலாம்.
சட்டத்தினுடைய 14வது பிரிவு சொந்த பிரேரணை அடிப்படையில்
விசாரணைகளை மேற்கொள்ளுதல். ஆகவே அங்கு நாங்கள் தான்
முறைப்பாட்டாளர்கள் நாங்களே ஒரு முறைப்பாட்டை அடையாளங்கண்டு
நாங்கள் ஒரு உரிமை மீறலை பதிவு செய்யலாம். உதாரணமாகா ஒரு
பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது அந்த செய்தியை அடிப்படையாகக்
கொண்டு நாங்களே விசாரணைகளைச் செய்யலாம்.
எங்களுக்கு சட்டத்தில் இடம் இருக்குது இவை யாரும் கேட்க முடியாது
நீங்கள் யார்? உங்களுடைய முறைப்பாட்;டாளர் யார்? அவருடைய
பெயரைச் சொல்லுங்கள் என்று யாரும் எங்களிடம் கேட்கமுடியாது.
இவ்வாறு நாங்கள் செயற்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள்
இருக்கின்றபடியால் இந்த மூன்றாம் தரப்புகள் அல்லது சிவில் சமூகத்தினர்
இந்த பாதிக்கப்பட்டோர் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவினை நாடி
பல்வேறு முறைப்பாடுகள் செய்யலாம்.
அல்லது மனித உரிமைகள் தொடர்பான புரிதலை அந்த மக்களுக்க
ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அல்லது நாங்கள்
வளவாளர்களாக வந்து மனித உரிமைக் கல்விகளை அவர்களுக்கு
சொல்லித்தருவோம். சில ஆய்வுகளைச் செய்யலாம். அந்த ஆய்வுகளுக்கான
கண்காணிப்புக்களை செய்யலாம் அந்த ஆய்வுகளின் முடிவுகளை எமது
அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம். எங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை
வழங்குகின்ற அதிகாரம் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு பரிந்துரை
வழங்குகின்ற அதிகாரம் எங்களுக்கு இருக்கின்றது.
ஆகவே நாங்கள் அரசாங்கத்தை வந்து பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக
சிந்திக்க வைப்பதற்கு சிவில் சமூகம் எங்களோடு இணைந்து
சேவையாற்றுமாக இருந்தால் நாங்கள் பல்வேறு விடயங்களை கொண்டு
செல்லக்கூடியதாக இருக்கும். நாங்கள் இந்த முறை கூட கௌரவ நிதி
அமைச்சர் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் பாதீடு சமர்பிப்பதற்கு முனனர்;
நாங்கள் எங்களுடைய ஆணையகத்தின் தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்கு
அல்லது அணுகும் வசதிக்கு அதி கூடிய நிதியை பாதீட்டின் ஊடாக
ஒதுக்குவதற்கு; ஒரு பரிந்துரை செய்திருந்தோம். அவரும் ஏற்றுக் கொண்டு
செயற்படுத்தியுள்ளார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் கடந்த வருடத்தை விட
இந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிக்குரிய
செலவீனங்கள் பாதீட்டில் ஒதுக்கியுள்ளார்கள். அண்மையில் கூட சில புதிய
பேரூந்துக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. கொடுப்பனவுகள்
ஓரளவு அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
மனித உரிமை ஆணைக்குழு அரசிற்கு தேவையான பரிந்துரைகளை
சட்டதிருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கலாம்.
இதற்கு சிவில் சமூகம் எம்மோடு பயணிக்க வேண்டும். நாங்கள் அரச
சாப்பற்ற நிறுவனமும் இல்லை. அரச நிறுவனமும் இல்லை. நாங்கள் ஒரு
சுயாதீன ஆணைக்குழு. நான் ஒரு அரச அதிகாரியும் இல்லை. ஒரு அரச
அதிகாரிக்கக் கிடைக்கின்ற வரப்பிரசாதமும் மனித உரிமை
ஆணைக்குழுவிற்கு இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையானவர்கள்.
ஆணைக்குழு என்பது ஒரு சுயாதீன ஆணைக்குழு எந்தப்பக்கமும்
சார்பில்லாதவர்கள். ஆகவே மனித உரிமை ஆணைக் குழுவை யாரும் நாடி
சலுகையினைப் பெற்றுக் கொள்ளலாம். எங்களினூடாக சேவையை
மக்களுக்கு கொண்டு செல்லலாம். அவர்களின் ஊடாக எங்களை அங்கு
அழைக்கக்கூடியவாறு இருக்கும். மனித உரிமை ஆணைக்குழு ஒரு திறந்த
அலுவலகம். குறிப்பாக யாழ்ப்பாணம் எந்த நேரமும் திறந்த மாதிரியேதான்
இருக்கும். நாங்கள் 4.00மணி 4.15க்கு எமது அலுவலகத்தைப் பூட்டிச்
செல்பவர்கள் இல்லை.
ஆகவே மனித உரிமை ஆணைக்குழுவை நாடி தேவையான விடயங்களை
பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
முறைப்பாடுகளை முன்வைக்கலாம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அரசிற்கு ஆலோசனை
வழங்கக்கூடிய முக்கியமான தகவல்களை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு
கொண்டுவரலாம். இதனூடாக பாதிக்கப்பட்டவர்களுடைய அதாவது மீள்
வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு மனித உரிமை ஆணைக்குழுவை
பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மனித உரிமை ஆணைக்குழுவினுடைய செயற்பாடுகள் பரவலாக மக்களுக்கு
தெரிந்தாலும். அடிப்படையான விடயங்கள் குறைவாகவேதான் இருக்கும்.
மனித உரிமை ஆணைக்குழு ஒன்று இருப்பது என்று அனைவருக்கும்
தெரியும் ஆனால் மனித உரிமை ஆணைக்குழுவினுடைய செயற்பாடுகள்
என்ன? மனித உரிமை ஆணைக்குழுவை எவ்வாறு நாடலாம்? அல்லது
பாதிக்கப்பட்டவர் தான் முறைப்பாடு செய்ய வேண்டும் என்கின்ற
விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு ஒரு தெளிவான புரிதல்கள் இல்லை.
அரச அதிகாரிகளுக்கோ அல்லது சட்டத்தரணிகளுக்கோ சில நேரங்களில்
அந்த புரிதல்கள் குறைவு. குறிப்பாக சிவில் வழக்கு ஒன்றைக் கூட மனித
உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி விடுவார்கள.
மனித உரிமை ஆணைக்குழு அரச செயற்பாடு அல்லது அரசினுடைய
நிர்வாக செயற்பாடு அல்லது நிறைவேற்று செயற்பாடுகளின் அடிப்படையில்
ஒரு உரிமை மீறல் ஏற்பட்டிருந்தால் அந்த உரிமை மீறலானது அரசினுடைய
நிர்வாக செயற்பாடு அல்லது நிறைவேற்று செயற்பாட்டின் ஊடாக
ஏற்பட்டிருந்தால் அவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவை நாடி வழக்குப்
பதிவு செய்து நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சாட்சிகளுக்கான
பாதுகாப்பு எல்லாம் மனித உரிமை சட்டத்தில் காணப்படுகின்றது. ஆகவே
உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவை
நாடுவதில் அவர்களுக்கு நிட்சயமாக நிவாரணங்கள் இருக்கும்.
சில நேரங்களில் சிவில் வழக்குகள், காணி தொடர்பான விடயங்கள், காசு
கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கிருமினல் வழக்கு குற்றவியல் வழக்கு
போன்றவற்றை நாங்கள் கையாளுவதில்லை. மனித உரிமை ஆணைக்
குழுவிற்கு வரையறைகள் சில இருக்கின்றது. அந்த வரையறைக்குட்பட்டு
பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவை
நாடலாம்.
மனித உரிமை ஆணைக் குழுவிற்கு வருவதற்கு ஒரு சட்டத்தரணியோ பணம்
செலுத்துவதோ இல்லை. இலவசமாக இங்கு மக்களுக்கான சேவைகள்
வழங்கப்படுகின்றது. ஆகவே பொது மக்கள் இலகு வழிமுறைகளினூடாக
உதாரணமாக கடிதம், குயஒ, நுஅயடை அனுப்புதல் போன்ற இவ்வாறான
நடவடிக்கையினூடாக இலகுவாக நாடி இலகுவாக தீர்வுகளை பெற்றுக்
கொள்ளக் கூடிய ஒரு நிறுவனமாக மனித உரிமை ஆணைக்குழு
அமைந்திருக்கும்.
அத்தோடு மனித உரிமை ஆணைக்குழு தொடர்பாக சிறிய விளக்கத்தையும்,
பாதிக்கப்பட்டோர் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவினுடைய
செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை வழங்க சந்தர்ப்பத்தினை
வழங்கிய னுயுவுயு அமைப்பிற்கு நன்றியினை தெரியப்படுத்திக்
கொள்கின்றேன்.