உங்களுக்கு பிரமிப்பை தரப்போகும் மட்டக்களப்பு தமிழ் பரா விளையாட்டு 2022

இன்று நேற்றல்ல, 27 நூற்றாண்டுகளுக்கு முன்னர் துவங்கியது ஒலிம்பிக் போட்டிகள் ,ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஒரு நாள் போட்டியாக ஒலிம்பிக் போட்டி துவங்கியது. கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்டது.

அந்த காலத்தில் போர்க்கலையாகவும், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கேளிக்கையாகவும் இருந்த சிலவற்றை தொகுத்து விளையாட்டுப் போட்டிகளாய் மாற்றி முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதாக பழைய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஒலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டு அந்த கிரீடத்துடன் பெருமையாக தங்கள் நகர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களையே “ஹீரோ” என்று அழைத்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணமான பெண்கள், போட்டியில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பணிப்பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த டிமட்டர் ஆலயத்தின் தலைமை பெண் பூசாரி 2வது உயர்ந்த இருக்கையில் அமர்த்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்களுடைய திறனை வெளிப்படுத்த ஹேரேயா போட்டிகள் என்று தனியாக நடத்தப்பட்டது. கிரேக்க கடவுளான ஜீயசின் மனைவி ஹேரா பெயரால் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

அன்றைய ஒலிம்பிக்கில் மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை எறிதல் ஆகியவற்றுடன் இன்று வரை பிரபலமாக இருக்கும் மரதன் போட்டி என்றழைக்கப்படும் நீண்ட தூர ஓட்டப்பந்தயம் நடந்துள்ளன. முதலில் ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்ட போட்டியாக இருந்த ஒலிம்பிக்ஸ், பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல நாள் போட்டியாக நடத்தப்பட்டுள்ளது.

காலத்தின் போக்கின் ஒரு அடையாளமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை இப்போட்டிகள் நடத்தப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது. இப்போட்டிகள் நடைபெறும்பொழுது எந்த வன்முறையும், போரும் நடைபெறக் கூடாது என்பதில் அதீத கட்டுப்பாடும், கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு முன்னர், ஒலிம்பியா நகரில் இருந்து 3 ஸ்போன்டோஃபோராய் என்று அழைக்கப்படும் ஈலிஸ் நகர குடிமக்கள் ஆலிவ் இலைகளுடனான கிரீடம் அணிந்து ஒரு மாத காலத்திற்கு கிரேக்கம் முழுவதும் சுற்றி வருவர். அவர்கள் புறப்பட்டதற்கு பிறகு புனிதமான அமைதியும், சமாதானமும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது வழமையாக இருந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் எவரும் எந்த வித பாதிப்புகளுக்கும் உள்ளாகக் கூடாது என்றும், எந்தவொரு வன்செயலும் கிரேக்க கடவுளான ஜீயசுக்கு எதிரானதாகவே கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி பல புனித தத்துவங்களுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஒலிம்பிக்விளையாட்டுக்கள் .

இந்த பாரம்பரியமும் புனிதமும் ,ஒற்றுமையும் ,தீவிரபோக்குமற்ற விளையாட்டுபோட்டியில் வலுவிழந்தவர்களையும் பேசுபொருளாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் பரா ஒலிம்பிக் போட்டி , சாதாரண ஒலிம்பிக் போட்டியைவிடவும் இங்கே புனிதமான அமைதியும், சமாதானமும் கடைபிடிக்கப்பட வேண்டும்,எந்த வன்முறையும், போரும் நடைபெறக் கூடாது என்பதில் அதீத கட்டுப்பாடும், கவனமும் ஒருபடி மேலாக செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைத்து பாதிக்கப்பட்டவர்களை பேசுபொருளாக்கும் நோக்கில் இரண்டாவது தடவையாக நடைபெறவிருக்கிறது ,தமிழ் பரா விளையாட்டு போட்டி-2022 ,மட்டக்களப்பின் வெபர் மைதானத்தில் DATA charity அமைப்பினரின் பிரமாண்ட ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் இந்த விளையாட்டு விழாவில் பங்குபெற இருக்கின்றனர் .

ஓகஸ்ட் மாதம் 20ஆம் 21 ஆம் திகதிகளில் மாற்று திறனாளிகளை பேசுபொருளாக்க வெபர் மைதானத்தில் ஒன்று கூடுங்கள் ,ஒவ்வொரு மாற்று திறனாளியும் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறான் என்பதை நூறு வீதம் மாற்றி அவர்களை பார்த்து நிச்சயம் நீங்கள் பிரமித்துப்போவீர்கள் .