படுவான்கரையில் 5000க்கு மேற்பட்ட பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள் இவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
சுமைகளைத் தாங்கி வலிகளுடன் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுமைகளை நிரந்தரமாக குறைக்ககூடிய திட்டங்களை தீட்ட வேண்டிய தேவையும் தற்போதைய சூழலில் உணரப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும் என பேசிக்கொண்டிருக்கின்ற சூழலில், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தினைப் பெற்றுக்கொடுக்ககூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும், சமுக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
பல்வேறு சுயதொழில் வாய்ப்புக்கள் நிறுவனங்களினாலும், அரசினாலும் வழங்கப்பட்டாலும் கூட, அவை தொடர்தேர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றதா? அல்லது சரியான ஆய்வுகளின் அடிப்படையில் அத்தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டனவா? அதன்மூலமாக குறித்த திட்டங்கள் வெற்றியளித்துள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்து நிற்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் இயற்கை போன்ற காரணங்களினால், குடும்பங்களை பொறுப்பேற்று வழிநடத்திய குடும்பத் தலைவர்களான ஆண்கள் பலர் மரணித்திருக்கின்றனர். இதனால், அக்குடும்பங்களின் சுமைகளை தூக்க வேண்டிய பொறுப்பு அக்குடும்பத்தின் தலைவிகளுக்கே ஏற்பட்டுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை வளர்க்க வேண்டிய, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் குடும்பத் தலைவிகள் மீதே சுமத்தப்பட்டிருக்கின்றதெனலாம்.
வீட்டிலே எந்நேரமும் ஓய்வில்லாமல் வேலை செய்துக்கொண்டிருக்கும் தலைவிகளுக்கு, தலைவன் பொறுப்பையும் ஏற்று நடப்பதென்பது மிகவும் சுமையே. அச்சுமைகளைத் தாங்கி தமக்கு தெரிந்த தொழில்களைச் செய்து, குடும்பத்தினை இற்றை வரை வழிநடத்திச் செல்கின்றனர். நாட்டில் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் இவர்களை வெகுவாக பாதிப்பதும் உண்டு. தற்போதைய அசாதாரண சூழ்நிலை வெகுவாக பாதிந்திருந்தமையும் அறிந்ததே.
மறுமணத்தினை விரும்பாது, தம் கால்களிலே தம் குடும்பத்தினை வழிநடத்தும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள், அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்ந்த ஆடவர்களின் மனைவிகளாவர். இதனால், வீட்டிலே பல்வேறான தேவைப்பாடுகளும், கடன்போன்ற சுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 1737பேர் கணவனை இழந்து, குடும்பத்தலைவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் முனைக்காடு கிராமத்திலேயே அதிகளவிலான பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக இக்கிராமத்தில் 302குடும்பங்களும், கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 258 குடும்பங்களும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக உள்ளன.
மண்முனை மேற்கு பிரதேசத்தில் 1730பேர் கணவனை இழந்திருக்கின்றனர். இரு பிரதேசங்களிலும் 3461குடும்பங்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக உள்ளன. இதே போன்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதனடிப்படையில் பரந்து விரிந்துள்ள படுவான்கரைப்பிரதேசத்தில் அண்ணளவாக 5000க்கு மேற்பட்ட குடும்பங்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக உள்ளன.
இக்குடும்பங்களிற்கு நிரந்தர வருமானத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு சிறந்ததொரு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மற்றவர்களை விமர்சித்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுக்கு நன்மை பயக்ககூடிய திட்டங்களைக்கூறி வாக்குக்களை கேட்க வேண்டும் அது நாகரீகமான அரசியலாக அமையும்.
5000குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தினை ஏற்படுத்திவிட்டால், இதன்மூலம் 15ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயனடைந்து கொள்வர். மட்டக்களப்பு மாவட்டமும் அபிவிருத்தியில் முன்னேறும்.