மனவிறுக்கம் (Autism spectrum disorder (ASD) என்பது சிக்கலான நரம்புவளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாகும். சமூகப் புரிதலில் தடங்கல்கள், தொடர்பு சிக்கல்கள், கட்டுப்படுத்தப்பட்ட, திரும்பத் திரும்ப செய்யும் ஒரே மாதிரியான நடத்தை ஆகியவை இதன் கூறுகள். இது ஒரு மூளைக்கோளாறு. இது ஒருவரின் பிறரோடு தொடர்பு கொள்ளும் திறனைப் பாதிக்கிறது. இக்கோளாறுகள் பொதுவாக குழந்தைப் பருவத்தில் தொடங்கி வளர்ந்த பின்னும் தொடர்கிறது.
இதுவே மனவிறுக்கத்தின் பொதுவான வகை. மனவிறுக்கக் கோளாறு உடையவர்களுக்கு மொழித்தடங்கல், சமூக மற்றும் தொடர்பு பிரச்சினைகள், இயல்பற்ற நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கும். இக்கோளாறுடைய பலருக்கு அறிவுத்திறன் குறைபாடும் இருக்கலாம்.
அஸ்பெர்ஜர் நோய்க்குறி : அஸ்பெர்ஜர் நோய்க்குறி கொண்டவர்களுக்கு மனவிறுக்கக் கோளாறின் லேசான அறிகுறிகள் இருக்கும். அவர்களுக்கு சமூக ரீதியான சவால்களும் அசாதாரண நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பொதுவாக மொழி அல்லது அறிவுத்திறன் குறைபாடு இருப்பதில்லை.
படர் வளர்ச்சிக் கோளாறு : மனவிறுக்கக் கோளாறு, அஸ்பெர்ஜர் நோய்க்குறி ஆகிய இரண்டின் ஒரு சில அறிகுறிகள் காணப்படும். ஆனால் அனைத்தும் அல்ல. மனவிறுக்கக் கோளாறைவிட லேசான மிகச் சில அறிகுறிகளே இருக்கும். சமூக மற்றும் தொடர்புப் பிரச்சினைகளை உண்டாக்கும்.