மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டு

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினரால் இன்று (03.12) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமுறைகள் மற்றும் கொள்கை வரைபுகள் போதுமானதா என்பது விவாதிக்கக்கூடிய ஒரு விடயமாகவே உள்ளது எனவும் சட்டங்களும், கொள்கைகளும் மிகவும் குறைவாகவே காணப்பட்டாலும் அவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாத அவல நிலையே இலங்கையில் உள்ளது.

எனவே இலங்கையில் சட்டங்களிலும், கொள்கைகளிலும் சமூக உள்வாங்கலினை கருத்திற் கொண்டு சில மாற்றங்களை கொண்டுவர முல்லைத்தீவு மாவட்ட அமரா, சமாச ஒன்றியத்தினராகிய நாம் பின்வரும் சிபார்சுகளினை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடையோருக்கும் முன்வைக்கின்றோம் அவற்றினை அவர்கள் கவனத்திலெடுப்பார்களென்ற நம்பிக்கையுடன் என கூறியிருந்தார்.

அவர்களால் முன்வைக்கப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளாக,
1.மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

2.அவர்களுக்கான புதிய கொள்கைகள் நடைமுறைக்கேற்ப வரையப்பட வேண்டும். அவை சட்டங்களாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

3.பெண் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவை அணுகப்பட வேண்டும்.

4. இன்று உலகம் கவனம் செலுத்தும் முக்கியமானதோர் விடயம் சமூகத்தில் வாழும் அனைவருக்கும் எதுவித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களுக்கான மாண்பினையும் வழங்குவதாகும். மாற்றுத்திறனாளி நபர்களும் சமூகத்தில் சமமான உரிமைகளை அனுபவிக்க உரிமையுடையோர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்.

5. அரசினது கல்வி தொழில்வாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டினை அதிகரித்து ஊக்குவிப்பு வழங்குவதுடன் அவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

6.மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருத்தமான தொழிற் பயிற்சிகளையும் வளங்களையும் வழங்கல்.

7.அரைமானிய வாழ்வாதாரத் திட்டங்களினை விடுத்து மாற்றுதிறனாளிகள் தாமாகவே பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் வாழ்வாதாரத் திட்டங்களை வழங்கல்.

8.சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கள் மாற்றுத்திறனுடன் கூடிய மக்களைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும்.

9.மாற்றுதிறனுடையவர்கள் இலகுவாக சேவைகளை அணுகக்கூடியவாறான வசதிகள் மற்றும் முன்னுரிமைப்படுத்தல்களினை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

10.மாற்றுதிறனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உதவிகளினை வழங்குவதனை விடுத்து மாற்றுத்திறன் உடையவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரத் திட்டங்களை வழங்க வேண்டும்.

11.அவர்கள் அரசியலில் போட்டியிடவும் சமூக மட்ட அமைப்புக்களில் தீர்மானமெடுக்கும் பதவிகளில் போட்டியிடவும் இடம் அளிக்கப்பட வேண்டும்.

12. அவர்களது சுகாதாரத் தேவைகள் கவனத்திற்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கான பிரத்தியேகத் தன்மை கருதி உரிய மருத்துவப் பொதிகள் வழங்குவதற்குரிய ஒதுக்கீட்டினை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக ஏற்பாடுகளினைச் செய்து தரல் வேண்டும். (மாதவிடாய் துவாய்கள், பம்பர்ஸ், கலீற்றர் மற்றும் பிற) போன்ற 12 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.