கடலில் முதலுவியைப் பற்றி ஒவ்வொரு மீனவரும் அறிந்து வைத்திருத்தல் இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். முதலுதவியைப் பற்றி ஏற்கனவே தெரிந்தாலும் அவற்றைப் பற்றிய தனிப்பட்ட சிறப்புப் பயிற்சி அவசியம். முதலுதவி பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும் முதலில் உதவி செய்வது புனிதமான செயலாகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக முதலுதவி முறைகளும் தற்பொழுது மாற்றமடைந்து வருகிறது. தற்பொழுது, உடல் நிலைப் பாதிப்பிற்கும், காயங்களுக்கும் பல்வேறு முறைகளில் முதலுதவி அளிக்கப்படுகின்றது. இத்தகைய முதலுதவிக்குத் தேவையான உபகரணங்களை மீன்பிடிப் படகில் வைத்திருத்தல் இன்றியமையாத ஒன்றாகும்.
முதலுதவி அளிப்பவர் தேவைப்படும் நபருக்கு எவ்வித தவறுமின்றி குறித்த நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். முதலுதவியானது பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை, அவரின் உயிருக்கும், உடலுக்கும் நல்ல முறையில் பாதுகாப்புத் தருவதாக அமையவேண்டும். முதலுதவி என்பது விபத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவரை காப்பாற்றும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.
முதலுதவியின் முக்கிய மூன்று குறிக்கோள்
உயிரைப் பாதுகாத்தல்
உடல் நலம் மேலும் பழுதடையாமல் காத்து அதனைச் சீரான நிலைக்குக் கொண்டு வருதல்.
உடல் நலத்தை முன்னேற்றமடையச் செய்தல்.
முதலுதவி செய்பவரின் கடமைகள்
மருத்துவர் வரும் வரை ஆபத்தான நிலையில் இருப்பவரை காப்பாற்றுபவர் முதலுதவி செய்பவர் ஆவர். முதலுதவி அளிப்பவர், மிகப் பொறுமையாகவும், நம்பிக்கையுடன், நிதானமாகவும், பரபரப்பு அடையாமலும், அதே வேளையில் விரைவாகவும் உதவி செய்தல் வேண்டும். எனவே முதலுதவி செய்பவர்கள் விபத்து நடந்த இடத்தை விரைவில் அடைய வேண்டும். இது பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும்.
துரிதமாகவும், அதே நேரத்தில் மிகவும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். இதனால், அடிப்பட்டவரின் வலி குறைய வாய்ப்புள்ளதோடு அவரின் உயிரைக் காப்பாற்றவும் இத்தகைய முயற்சிகள் காரணமாக அமையும். முதலுதவி செய்பவர், விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி நன்கு உணர்ந்து செயலாற்றுதல் வேண்டும். பாதிப்பை அறிந்தபின், மருத்துவர் பொறுப்பு ஏற்கும் வரையில், பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான முதலுதவிகளை அளிக்க வேண்டும்.
முதலுதவிக்குப் பின் பாதிக்கப்பட்டவரைத் தேவைக்கேற்ப படகைக் கரக்கு திருப்பியோ அல்லது மீன்பிடித்துக் கரைக்குத்திரும்பி கொண்டிருக்கும் ஏனைய படகின் மூலமோ கரைக்கக் கொண்டு வந்து உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதலுதவி செய்யும் முறைகள்
மீன்பிடிப் படகில் காயப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவருக்கு, முதலுதவியை மேற்கொள்ளும்போது கீழ்காணும் செயல்களை விரைந்து கவனிக்க வேண்டும்.
அதிர்ச்சிபலமானதா அல்லது குறைவானதா?
மூச்சு விடுதலில் சிரமம் உள்ளதா?
மிதமிஞ்சிய இரத்த போக்கு ஏற்பட்டுள்ளதா?
இவற்றை அறிந்த பின், தேவையான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும்.
முதலுதவி முறைகள்
விபத்தின் தன்மைக்கேற்ப முதலுதவி முறைகள் மாறுபடும்.
மூச்சுத் திணறல்: சுவாசித்தல் மூலம்தான் தேவையான உயிர்வளி உடம்பின் பல்வேறு உறுப்புகளுக்கும் செல்கின்றது. சுவாசித்தல் நின்றுபோனால், சில நொடிகளில் மரணம் ஏற்படும்.