ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இவைகள் வீட்டிலே தயார் செய்யப்பட்டதாக இருக்கும் போது குழந்தை எளிதில் பழகிவிடும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும், வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி இருப்பதால் இது சுலபமாகும்.
இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது?
குழந்தையின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில் தயாராக உள்ளது. 6 மாதம் முன் இணை உணவு தரும் போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்து விடும். ஊட்டச்சத்து குறைவு ஏற்படலாம். அதே போல் இணை உணவு ஆரம்பிப்பதை 6 மாதத்திற்குப்பின் தள்ளிப்போடவும் கூடாது. அறிவில் சிறந்த நம் பண்டைய சமுதாயம் நம் பாரம்பரிய முறையான அன்னம் ஊட்டுதலை 6 வது மாதத்தில் கடைப்பிடித்தது.
பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு, அன்றன்றைக்கு வீட்டுப் பக்குவத்தில் தயாரான சுத்தமான, ரசாயன பொருள் சேராத சாதா உணவானது, தாயின் அன்பு, பாசத்துடன் சேர்ந்து, மிகச்சிறந்த உணவாக மாறும். குழந்தையும் விரும்பி உண்ணும்.
அடைத்து விற்கப்படும் உணவுகளில் ருசிக்காகவும், வாசத்திற்காகவும், இனிப்பும், வேதிப்பொருட்களும், மணமும் கலந்து இருக்கும். உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அதன் ருசிக்கு குழந்தை பழகிவிடும். டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகளை மட்டும் தந்து பழக்கிவிட்டால் சத்துள்ள கீரை, பருப்பு மற்றும் பயிறு வகைகளை கண்ணெடுத்தும் பாராது. சாப்பிடவும் சாப்பிடாது.