அனைத்து விதமான கட்டுமானப் பணிகளின் வடிவமைப்பு அளவீடுகளும் சராசரி, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான மனிதர்களை அடிப்படையாகக்கொண்டே செய்யப்படுன்றன. கட்டடக் கலை நிபுணர்கள் மற்றும் பயன்படுத்துவோர் தாங்களும் ஒருநாள் முதுமையடைவோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. சமீபகாலங்களில் மருத்துவத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியை நாம் பார்க்கிறோம்.
இதனால் உலகத்தில் மிகப் பெரிய புள்ளி விவர மாற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் முதியோர்களின் சதவிகிதம் மிக அதிகமாகப் போகிறது. பல்வேறு சமூகக் காரணங்களால் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.
இப்படி யோசனை இல்லாமல் கட்டப்படும் இருப்பிட சுற்றுச்சூழல் அவர்களுக்கு முழுக்க முழுக்க தடையாகத்தான் இருக்கும். தடங்கல்கள் முதியோருக்கு மோசமான பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும். இவை முதியோரைத் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது.
இதனால் தாங்கள் வாழ்வதற்கே அடுத்தவர்களின் உதவியை எதிர்பாக்க வைத்துவிடுகிறது. இந்தப் பிரச்சினை மிக விரைவாக பரிசீலிக்கப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தடங்கல்களால், வசிப்பிட சுற்றுச் சூழலின் ஆனந்தத்தை அவர்களால் அனுபவிக்க முடியாமல்போகக் கூடாது.
முதியோருக்குப் பொருத்தமான, பாதுகாப்பான, வசதியான தடையற்ற வசிப்பிட சுற்றுச்சூழலை அமைக்க கட்டடக்கலை நிபுணர்கள் குறிப்பிட்ட சில வடிவமைப்பு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட வேண்டும்.