சுத்தத்தை கற்றுக்கொடுங்கள்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்,கை,கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் தலை குளிக்கவைக்கவும்.

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.