நமது குடும்பங்களையும், சமூகத்தினரையும் கொரோனா வைரசிலிருந்து (COVID-19) பாதுகாக்க நம்மால் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள் உள்ளன:
உங்களுடைய கைகளைத் தவறாமல் கழுவவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும். மேற்பரப்புகளின் மீது அநேக நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடிய கோவிட்-19 -லிருந்து நம்மைப் பாதுகாக்க இது உதவும்.
மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியில் விலகியிருக்கவும்.
நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதில், உட்புற மற்றும் வெளிப்புற இடங்கள் இரண்டுமே அடங்கும். இது கோவிட்-19 நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கிறது.
உங்கள் வீட்டிற்கு விருந்தினர் யாரும் வரவோ அல்லது நீங்கள் மற்றவர்களைப் பார்க்கச் செல்லவோ முடியாது. நெருங்கிய வாழ்க்கைத் துணைகள் வீட்டிற்கு வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்காகக் கடைக்குச் செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், உங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ வரை மட்டுமே நீங்கள் பயணிக்க முடியும்.
நீங்கள் சுகவீனமாக இருப்பதாக உணர்ந்தால், பரிசோதனை செய்து கொள்ளவும், அத்துடன் வீட்டிலேயே இருக்கவும். உங்களுக்கிருக்கும் நோயறிகுறிகள் மிதமானவையாகவே இருந்தாலும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வது கோவிட்-19 தொற்றுப் பரவலைக் குறைக்க உதவும்.
கோவிட்-19 பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் புகலிடம் வேண்டுவோர் போன்ற மெடிகேர் (Medicare) அட்டை இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.
கோவிட்-19 தடுப்பூசிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால், அதைப் போட்டுக்கொள்ளவும்.