உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் பகுதி மேல் பகுதியில் உள்ள எடையை தாங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. புவியீர்ப்பு விசையின் காரணமாகவும், முதுகு கீழ் அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு, கீழ் பகுதி எலும்புகள் சரியான வளர்ச்சி இன்றியும் இருக்கும். இந்த முள்ளெலும்புகளில் இடையிலிருந்து வெளிவரும் சில நரம்புகள் தான், கை, கால்களுக்கு செல்கின்றன.
இந்த முள்ளெலும்புகளில் தேய்மானம் அல்லது சரியான முறையில் ஒன்றன் பின் ஒன்று பதியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், இவற்றின் இடையே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. சிறு வயது குழந்தைகள், பெரும்பாலும் வலியால் அவதிப்படுவதில்லை. இடைநிலைப் பள்ளி குழந்தைகள், புத்தகச் சுமை காரணமாக, முதுகு மற்றும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு அமைப்பிலேயே பாதிப்பு ஏற்படுவதால் அவதிப்படும் குழந்தைகள் மிகக்குறைவே.
புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் பையை தோளில் மாட்டிக்கொள்ளும் போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சதை மற்றும் தசைகளில் வலி ஏற்படுகிறது. வகுப்பு நேரத்தில் பெஞ்சும் நல்ல முறையில் வடிவமைக்கப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகு பகுதிக்கு சரியான சாய் மானம் இல்லாமல் இருக்கும். வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தப்படி சோபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகு வலியை அதிகரிக்க செய்யும்.