போலியோ (சாம்பல்நிறம்) மற்றும் மைலான் (மச்சை, தண்டுவடத்தைக் குறிக்கிறது) ஆகிய இரு சொற்களும் கிரேக்க மொழி மூலம் கொண்டவை. போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
போலியோ வைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
இது வரையிலும் இதற்கான குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆகவே, தடுப்பு மருந்து மட்டுமே பாதுகாப்புக்கும் பரவாமல் தடுப்பதற்கும் உள்ள ஒரே வழி.
பொதுவாக, போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன:
நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.
நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
இளம்பிள்ளை வாதம், வைரஸ் உள்ள உணவு அல்லது நீரை உட்கொள்ளும்போது மலவாய்-வாய் வழியாகவோ அல்லது வாய்-வாய் வழி மூலமாகவோ பொதுவாகப் பரவுகிறது. நோய் தோன்றும் பகுதிகளில் முழு மக்கள் தொகுதியையும் போலியோ வைரஸ் பாதிக்கும். மிதவெப்ப வானிலைகளில் பருவகாலம் சார்ந்து இந்நோய் பரவும். கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் உச்சத்தை அடையும்.
95% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.
ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள்.
1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும்.
ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.
பல பக்கவாதமுள்ள போலியோமைலிட்டிஸ் நோயாளிகளுக்கு தசைச் செயல்பாடுகள் சிறிதளவு பழைய நிலைக்குத் திரும்பும். அறிகுறி தோன்றி 12 மாதத்துக்குப் பின்னும் நீடிக்கும் பலவீனம் அல்லது வாதம் பொதுவாக நிலைத்து நிற்கும்.