எவையெல்லாம் ஆரோக்கியமான, உடலுக்கு உகந்த உணவுகள் என்று தெரிய வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரியவேண்டும். ஆரோக்கியம் என்றால் என்னவென்றும் புரிய வேண்டும்.
எந்த நோயையும், எதிர்வினையையும், எந்த உடல் – மன பாதிப்பையும் உருவாக்காத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவுகள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? என்றால், அது முடியாது. எந்த தீய எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்றாலும், உடலுக்கு எந்த நன்மையையும் வழங்காத உணவை எதற்காக உட்கொள்ள வேண்டும்?. அவ்வாறென்றால் எவை ஆரோக்கியமான உணவு வகைகள்?.
எந்த உணவாக இருந்தாலும், உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் வழங்குமென்றால், அவற்றை உட்கொள்பவரின் உடல் அவற்றை முறையாக ஜீரணிக்கும் என்றால், அவை நல்ல உணவுகள் தான். தாராளமாக உட்கொள்ளலாம்.
உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்
தொடர்ந்து வாசிப்பதற்கு முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இரசாயனங்களும், உயிர் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்.
நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணைகள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எவற்றை உட்கொள்வீர்கள்?
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்கு கொடுக்கப்படும் சத்து மாவுகள் வரையில் அனைத்திலும் கலப்படம், இரசாயனம் இனி எவற்றை கொடுப்பீர்கள்?.
உணவில் கலப்படம் மற்றும் இரசாயனம்
உங்கள் உணவை நீங்களே பயிர் செய்தால் ஒழிய கலப்படத்தையும் இரசாயனங்களையும் தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு முக்கியமான விசயம், பயிர் செய்தது நீங்கலாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தெளிக்காவிட்டாலும், நீங்கள் விதைத்த தாவரத்தின் விதைகளை உருவாக்கியது யார் என்று பார்க்கவேண்டும். விதைகள் மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கலாம்.
Organic Foods ஆர்கானிக் உணவுகள்
ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன?. பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இரசாயனம் தெளிக்கப்படாத உணவுகள். சரி, பூச்சிக்கொல்லியும் இரசாயனமும் நீங்கள் தெளிக்கவில்லை, ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இயற்கை உரத்தை உருவாக்க பயன்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தால்? அந்த இரசாயனம் நீங்கள் பயன்படுத்தும் உரங்களிலும் இருக்கும் தானே? உரங்களில் இருக்கும் இரசாயனங்கள் பயிர்களிலும் கலக்கும் தானே?. இனி அது எப்படி ஆர்கானிக் உணவுகள் ஆகும்?.
உணவுகளை உற்பத்தி செய்த பின்னர், அவற்றை பொட்டலம் போட, கெட்டுப் போகாமல் தடுக்க, அவற்றை பாதுகாக்க என சிறிதளவேனும் இரசாயனம் கலக்கப்படும் தானே?.
கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஆர்கானிக் உணவுகள், உண்மையான இயற்கை உணவு வகைகள் அல்ல. இரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் குறைவானவை, மனிதர்களுக்கு நேரடியான கெடுதல்களை செய்யாதவை என்று வேண்டுமானால் கூறலாம். இப்படி அனைத்து வகையான உணவிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இரசாயனங்களும் கலக்கப்படும் போது இனி எவற்றை உட்கொள்வீர்கள்?
அவர் அதில் இரசாயனம் இருக்கும் என்று சொன்னார்! இவர் இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்று சொன்னார்! என்று நாம் கூறலாம். எல்லாம் சரி, அனைத்திலும் பூச்சிக்கொல்லிகளும் இரசாயனங்களும் இருக்கும் போது, இனி எதை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினாரா?.
உலகத்தின் தலைச் சிறந்த உணவுகள் தேன், தேங்காய், பழங்கள், கருப்பட்டி ஆனால் இன்று இவை அனைத்திலும் கலப்படம், பூச்சிக்கொல்லி, மெழுகு, சரி இனி எவற்றை சாப்பிடுவது?.