ஒரு காலத்தில், நம் நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேறிவிட்டால் நாம் எதையோ சாதித்து விட்டோம் என்ற உணர்வு கிடைக்கும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில், நம் நாட்டில் இல்லாத ஒன்றா அங்கு இருக்கப் போகிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
சாதிக்கப் பிறந்த நாமும், சாதிக்க வழி வகுத்துக் கொடுக்கும் நம் நாட்டையையும் விட்டு நாம் ஏன் செல்ல வேண்டும் என்ற உணர்வும் கேள்வியும் நம்முள் எழுகிறது.
அனைத்துத் துறைகளிலும் போட்டி போட்டு சாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நாம் என்றுமே அண்டை நாட்டைப் பார்த்து பிரமிக்க வேண்டும் என்ற தலையெழுத்தை நினைத்து வெட்கப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியவில்லை.
அண்ணார்ந்து பார்த்து வியக்கவைக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு வாகனங்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல வகையான அதிசயங்களும் ஆச்சிரியங்களும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், நம் சாலையில் அடர்ந்து கிடக்கும் குப்பைகளையும், திறந்த வெளி சாக்கடைகளையும், கழிவுகளையும் பார்த்தால் இதைத்தான் ‘நரகம்’ என்று கூறுவார்களோ என்று ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கிறது.
இதற்குக் காரணம், சமூகமா அல்லது தனிநபரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒவ்வொரு மனிதனின் அலட்சியம் கலந்த சுயநலமே இதற்கு முழு காரணம் ஆகும். தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து செயல்படுபவர்களிடம் ‘சமுதாய உணர்வு’ என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.
உதாரணத்திற்கு, நமது வீட்டில் நாம் ஏன் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒவ்வவொருவருக்கும் அதன் அத்தியாவசியத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். கடல் போல் வீடு இருந்தாலும் எதையெதை எங்கு செய்ய வேண்டுமோ, அதனை அங்குதான் செய்கின்றோம்.
நமது வீட்டை எந்த அளவுக்கு நாம் சுத்தமாக வைக்க நினைக்கின்றோமோ, அதைவிட பல மடங்கு நாம் நம் சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியில் கால் வைத்த அடுத்த நிமிடமே நாம் சுயநலம் மற்றும் அலட்சியத்தின் மறுவுருவாக மாறி பொது இடங்களை நாசப்படுத்தத் தயாராகி விடுகின்றோம்.