புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி

முதியோர்கள் தம் பருவத்தை சூழலை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். வீட்டிலோ, சமூகத்திலோ தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி.

பல இடங்களைச் சென்று பார்ப்பதும், புதியவர்களுடன் நட்பு கொள்வதும், இயற்கை அழகை ரசிப்பதும் மனதிற்குத் தெம்பூட்டும். பிடித்தமான நூலை படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டிய பின்னும் எழுதிக் கொண்டிருந்ததார். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார்.

பொழுதுபோக்குகளைத் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும். மன மலர்ச்சிக்கு தொடர்ந்து பல பொழுதுபோக்குகளைக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.