இலங்கையில் இருக்கின்ற இனரீதியான குழப்ப நிலைகள் இன்னமும் நீங்கிய பாடில்லை – எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாக தொடர்ந்து நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை நிலை சொல்லொணா துன்பத்தின் பெருநிலை .
உலக நாடுகளில் எல்லாம் நடந்த யுத்தங்கள் ஓய்ந்த பின்னும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள், கொள்கிறவர்கள் பெண்கள்தான். அந்த சூழ்நிலைக்கு இலங்கை விதிவிலக்கல்ல ,வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி கொண்ட ஒரு நாடாக இலங்கை இருப்பதால் போருக்கு பின்னரான பெண்களின் வாழ்வியல் மிக நெருக்கடியாகவே உள்ளது அதிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை மிகுந்த துயரமானது .
போரின் ஒவ்வொரு காரணங்களாலும் வாழ்க்கை துணையை இழந்த பெண்கள் இலங்கையில் அதிகமானவர்கள் அவர்கள் அடையும் வாழ்வியல் போராட்டங்களும் மிக அதிகமானவை – இறுக்கமான கலாசார ஒழுங்குமுறைகள் பின்னி பிணைக்கப்பட்டுள்ள இலங்கையில் விதவைகள் என்ற குறியீட்டால் அழைக்கப்படும் பெண்களின் நிலைமை மிக மோசமானது – பல்கலாச்சார சூழல் பெண்ணிய கட்டமைப்புக்கள் இந்த இக்கட்டான பெண்களின் வாழ்வியலை இன்னமும் அதிகமாக பாதிக்கின்றது என்றே சொல்ல வேண்டும் .
ஓரளவு கல்வி அறிவு கொண்ட பெண்கள் இந்த சமூக சூழ்நிலைகளை துண்டாடி வாழ்க்கையில் பிடிமானமான தூண்களை பிடித்து சற்று நகர்கின்றனர் , ஆனால் பெருமளவான கல்வியறிவு குறைந்த பெண்களின் வாழ்வியல் போராட்டமாகவே இன்றும் இருக்கிறது .
இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த கல்வி ,தொழில்நுட்பம் , கலாசார விருத்தி ,பெண்களுக்கான கல்வி தன்மை என்பது போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இலங்கை பெண்களை பாதிக்கும் காரணிகளாகவே இருந்துள்ளன .
அவை தொடரான பெண் தலைமை குடும்பங்களின் போராட்டமான வாழ்க்கை க்கு வழிவகுத்தது என்றே சொல்ல வேண்டும் .
உதாரணமாக போரில் கணவனை இழந்த பெண்கள்,கணவன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வாழும் பெண்கள் ,போராட்டத்திற்கு கணவருடன் இணைந்து தானும் போராடிய பெண்கள் ,போரில் அங்கங்களை இழந்த சாதாரண பெண்கள் ,போராடி அங்கவீனர்களாக இருக்கின்ற முன்னாள் போராளி பெண்கள் என அனைவரும் எதோ ஒரு வகையில் மிக நெருக்கடியான வாழ்க்கையையே எதிர்கொள்கின்றனர் .
அவர்களின் பொருளாதார சிக்கல் நிலைகள் எண்ணில் அடங்காதவை காலம்காலமாக புரையோடிப்போய் உள்ள கலாசாரத்தையும் பெண்களுக்கான கட்டமைப்புகளையும் சாதாரண பெண்கள் சமாளித்து ஓரளவு நகர முடிந்தாலும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் நான் மேற்குறிப்பிட்ட பெண்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்தல் என்பது முயல் கொம்பாகவே உள்ளது .
காரணம் இலங்கை அரசியல் போக்கும் அரசின் பாராமுகமுமே என்றே சொல்ல வேண்டும் – ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவே உள்ளனர் அவர்களின் பொருளாதாரம் என்பது திட்டமிடப்படாத அரசால் சீராக வழிநடத்தப்படாத பாராமுகமான வாழ்க்கை சூழலை கொண்ட நிலையாகத்தான் இருக்கிறது கிட்ட தட்ட தற்போது 60 வயதில் இருக்கும் விதவை பெண்ணும் 35- 40 வயதுக்குள் இருக்கும் விதவை பெண்ணும் ஒரே மாதிரியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளாள் .
அவள் சுமக்கும் குடும்ப சுமைக்கு ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத்தை இலங்கை அரசு செய்யவில்லை என்பது துயரமான விஷயம் .
வெறுமனே தொழில்வாய்ப்பு என்ற ஒரு செயற்பாடு மட்டும் அவர்களின் வாழ்க்கைக்கு சரியான களம் இல்லை தொடர் பயிற்சிகள் உளவியல் சார்ந்த செயற்பாடுகள் எல்லாம் தற்போதுவரை அவசியமான இன்றியமையாத தேவைகளாகவே உள்ளன .
இவை சீராக இல்லாத பட்சத்தில் அவர்களின் போராட்டமான வாழ்க்கை பக்கம் இன்னமும் சிக்கலாகவே உள்ளது தமது குழந்தைகளின் கல்விக்காகவும் உணவுக்காகவும் அவர்கள் மிக கடினமான பாதுகாப்பு இல்லாத பல தொழில்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் .
பாதுகாப்பற்ற தொழில்களை அவர்கள் செய்வதனால் அவர்களை நம்பி இருக்கின்ற குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் பெரும் அக்கறை காட்ட வேண்டிய சூழல் சமூகத்துக்கும் அரசுக்கும் இருப்பதை யாரும் கண்டு கொள்வதாக இல்லை .