எமது சமூகம் பாதிக்கப்பட்டோருக்கான கொள்கைகளை வகுத்துள்ளதா ?

சமூகம் ஏற்படுத்திய போர் ,அந்தப்போரின் வடுக்களையும் வலிகளையும்
சுமந்து வாழ்கின்ற ஒரு சமூகக்கூட்டதுக்கு அவர்களுடைய தேவைகளையும்,
எதிர்பார்ப்புக்களையும், வாழ்வையும் மையப்படுத்திய ஒருகொள்கையை எமது
சமூகம் உருவாக்கியுள்ளதா என்ற கேள்வியை இப்போது அந்த
பாதிக்கப்பட்டவர்களே எழுப்புகின்றனர் ,இவர்களில் நானும் ஒருத்தி என்ற
வகையில் இந்த கட்டுரையின் பார்வை அமைகிறது .
மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும்
நீக்கி இந்த சமுதாயத்தில் அவர்கள் ஏனையோருடன் எல்லா வகையிலும்
சமமான பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வாழ்வியலோடு
அவர்களை இணைப்பதே இந்த கட்டுரையின் முதன்மையான கருத்தியல்
ஆகும்.
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள்
சமூகத்தின் வழியே, மறுவாழ்வுத் திட்டங்கள் கிடைக்கப்பெற்று பயன்பெறும்
வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவேண்டும் என்பதே
இங்கே முக்கிய கோரிக்கை .
இருந்தபோதும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்றவகையில் சில ஆதங்கங்கள்
இருக்கத்தான் செய்கின்றன – ஒரு மாற்று வலுவுள்ள இலங்கை பிரஜைக்கு
இலங்கை அரசாங்கம் சமூக சேவை திணைக்களத்தினூடாக மாதாந்தம் 5000
ரூபா பணத்தை வழங்குவதாக அறிகின்றேன் – ஆனால் பாதிக்கப்பட்ட
பெண்கள், கணவனை இழந்தவர்கள் ,பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
இவற்றுக்கெல்லாம் அரசின் உதவி திட்டங்கள் என்ன என்பது பெரும்பாலும்
கேள்வி மட்டுமே .
அரசு சாரா அமைப்புகள் (Non Governmental Organisations) மூலம்
இப்படியானவர்களுக்கு ஏதோ சிறு உதவிகள் கிடைக்கலாம், ஆனால் இந்த
மாற்று திறனாளிகளுக்கான கொள்கைகள் தொடர்பில் எந்த தீர்மானமோ
முடிவோ இல்லாமல் இருப்பது பெரும் கவலையான விடயம் .

இலங்கையை பொறுத்தவரை நாடுமுழுவதும் மாற்று திறனாளிகள்
இருக்கின்றனர் அவர்கள் இயற்கையாகவோ அல்லது இடையிட்டோ அந்த
உடல்நல பாதிப்பை அடைந்திருக்கலாம் அவ்வாறானவர்களின் அடுத்த கட்ட
நகர்வுக்கான அவர்களின் புள்ளிவிபரங்கள் எங்கேயும் சரியாக இல்லை
என்பதே இப்போது இருக்கின்ற மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது .
30 ஆண்டுகள் போர் நடந்து ஓய்ந்த ஒரு பூர்வீக மண்ணில்,
போரின்பின்னரான வடுக்களை பேசிக்கொண்டிருக்கும் எம்மிடம் அந்த போரில்
அங்கங்களை இழந்தவர்கள் போரின் பின்னரும் படும் துயரங்களை
வரித்துக்கொண்டு அவர்களை இனங்காணவும் உதவவும் முடியாமல்
இருப்பதும் அவர்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் திட்டமிடவும் எந்த
அடித்தளமும் இல்லாமல் இருக்கிறோம் என்பது கவலையான விடயமே .
தோராயமாகவும், குத்துமதிப்பாகவும், பாதிக்கப்பட்டவர்கள் ,அங்கங்களை
இழந்தவர்கள் ,பார்வை இழந்தவர்கள், முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்கள் என நாம் ஒரு கணக்கு வைத்து பேசிக்கொள்கிறோம்
ஆனால் அவர்களின் சரியான தொகைக்கணிப்பைக்கூட எம்மால்
பெறமுடியாமல் அல்லது திரட்டமுடியாமல் இருப்பது கவலையானதே .
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் கடைசி மாகாண ரீதியிலாவது சரியாக
கணிப்பிட்ட தொகை மதிப்பீடு இருக்கவேண்டும்,அவர்களின் தேவைகள்
குறித்தான மதிப்பீடு இருக்கவேண்டும் வடக்கு கிழக்கில் கூட
பாதிக்கப்பட்டவர்களின் சரியான கணக்கெடுப்பை சரியான எண்ணிக்கையை
ஒரு ஊடகவியலாளராக என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
எங்கேயும் சரியான எண்ணிக்கை கணக்கெடுப்பு இல்லை என்பது மிகுந்த
கவலை அளிக்கும் விடயம் .
நான் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் – பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றாக
மணிக்கணக்கில் இருந்திருக்கிறேன் அவர்களின் தேவைகளை சிரமங்களை
கண்கூடாக பார்த்திருக்கிறேன் இதை முக்கிய சில இடங்களில்
கொண்டுசேர்த்திருக்கிறேன் ஆனால் அவர்ளுக்கான தேவைகளை இதுவரை
பூர்த்தி செய்வதற்கான எந்த முன்னெடுப்புக்கழும் இல்லை என்பது
வருத்தமளிக்கும் உண்மை .ஏனைய நாடுகளில் உள்ளதுபோன்று

மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகள் இலங்கையில் இல்லை என்பது
மிக வருந்த தக்கவிடயம் ,இதுதொடர்பாக எமது பாதிக்கப்பட்டோர் சார்பாக
முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரிடம் வினவப்பட்டபோது அரசுசார்பாக
பாதிக்கப்பட்டோர் சார்பான கொள்கைகள் இல்லை என்பதை அரசு சார்பாக
அவர் ஏற்றுக்கொண்டார், இது உண்மையில் பாதிக்கப்பட்டோரின் நலனில்
இன்னமும் விழப்போகும் அடியாகவே கருதவேண்டி உள்ளது .
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றதொரு நிலைமை வேண்டாமே
என்பது என்போன்றவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது .
இலங்கையில் மாவட்டம் ரீதியாக நடைபெறும் அபிவிருத்தி குழு
கூட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஏதாவது ஆராயப்படுகிறதா ?
மாவட்டத்தில் எத்தனை விதவைகள் உள்ளனர் என்கின்ற கணக்கெடுப்பு
சரியாக உள்ளதா ? முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்
அவர்களுக்கான மருத்துவம் ,கல்வி ,உளவியல் தேவைகள் தொடர்பில்
யாரும் ஏன் கரிசனை கொள்ளாமல் உள்ளனர் ?
நான் இதை வெளிப்படையாகவே சொல்ல நினைக்கிறேன் இந்த தரவு
சேகரிப்பில் அல்லது கொள்கைகளை வகுப்பதில் ஏன் அசம்மந்தம்?
போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் நான் அறியவே ஏராளமானவர்கள்
இருந்தனர். தாயை இழந்தவர்கள் தந்தையை இழந்தவர்கள் இதற்கும்
அப்பால் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள் என அநாதரவான
சிறுவர்கள் எப்படி சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்?அவர்கள் அவர்களது
பெற்றோர்கள் பின்பற்றிய மதம் அல்லது சமய பாரம்பரியம் இப்படி ஏதாவது
பின்னணிகளுடன் அவர்களின் வாழ்வியல் பயணிக்க இடம்
வழங்கப்படுகின்றதா? அது எப்படி யார்மூலம் ?

இதற்கான தரவு விடயங்கள் யாரிடம் உண்டு ?இந்த அளப்பரிய
வேலைத்திடத்தை அல்லது சமூகப்பொறுப்புள்ள இந்தவிடயத்தை யார்
கண்காணிக்கின்றனர் ? இந்த கேள்விகளை வருடக்கணக்கில் பொறுத்திருந்து

இவர்களிடம் கேட்கலாம் என எண்ணிய அரசியல்வாதிகள் ,அரச அதிகாரிகள்
,சமூகசேவை உத்தியோகத்தர்கள் ,சமூக சேவகர்கள் என அனைவரிடமும்
வினவி எந்த பயனும் எனக்கு இல்லை.
கைவிரிப்புக்களும் முயல்கிறோம் என்கின்ற முன்மொழிவுகளுமே எனக்கு
விடையாகின.
ஒரு சமூகத்தின் வலுவானவர்கள் தொடர்பில் இருக்கும்
புள்ளிவிபரங்களைக்காட்டிலும் வலுவற்றவர்களின் புள்ளிவிபரங்கள்
அவசியமானவை சமூக நல்நோக்கம் என்பதும் அதுவே .
அரசியல் சாரதா யாரிடமும் இந்த நல்நோக்கம் இல்லை என
வைத்துக்கொண்டாலும், அரசியலில் இவர்கள் தொடர்பில் பேசவும்
சுட்டிக்காட்டிடவும் யாரும் முன்வராமையும் வருத்தமளிக்கும் விடயமே.
பாதிக்கப்பட்டவர்களின் சரியான கணக்கெடுப்புகள்,அவர்களின் தேவைகள்
என்பன மிக அவசியமான வகைப்படுத்தல் தேவை ,பாதிக்கப்பட்டவர்கள்
சார்பான கொள்கைகள் வகுக்கப்பட அவர்களின் தொகை மதிப்பீடு
இன்றியமையாதது இந்த விடயங்களுக்காக நாம் தயாராகவேண்டி உள்ளது .
மாற்றுத்திறனாளி மாணவர்கள் இலவச கட்டாய ஆரம்பக்கல்வி மற்றும்
உயர்கல்வியிலிருந்து விடுபடக்கூடாது என்பதனை உறுதி செய்திடுவதற்கான
குறிக்கோளில் நாம் முழு கவனம் செலுத்தவேண்டும். இக்குறிக்கோளினை
அடைந்திடும் விதமாக நாட்டில் இன்னும் மாற்றுத் திறனாளி
மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கூடங்களை அமைப்பது சிறப்புக்
கல்வியை வழங்குவது தொடர்பில் நாம் கொள்கைகளை
வகுக்கவேண்டியுள்ளோம் .
மாற்றுத் திறனாளிகளுக்கு அரச அலுவலகங்கள் நிறுவனங்கள், மற்றும்
குழுமங்கள் அரச கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் இடஒதுக்கீடு
அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதற்க்கு அவர்களின்
சரியான கணக்கெடுப்பு அவசியம் . மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய
சதவிகித வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டினை அரசதுறைகளில்
நிறுவனங்களில் செயல்படுத்த அங்கீகாரம் இருக்க வேண்டும் . இதற்காக

குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களை
கண்டறியும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .
மாற்றுத்திறனாளிகளுக்கு அரச துறை மற்றும் தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்பட வேண்டும் மாற்றுத் திறனாளிகள் தமது வாழ்வியலை
இடையூறின்றி நகர்த்த அவர்களுக்கு இப்படி வழிகாட்ட வேண்டும் .
மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்
வகையில் வங்கிக் கடன்களை பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும் .
என் சமூகம் என்போன்ற பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கொள்கையை
உருவாக்கி வாழ்வின் வலிகளை பகிர்வதற்கான வழிவகைகளைச்செய்து
உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற வகையில் இந்த
கொள்கை உருவாக்கப்பயணத்தில் என் பேனாவும் தொடர்ந்து பயணிக்கும் .
அவர்களையும் சமூகத்தில் ஒருவராக்க முயலுவோம் .
ப்ரியமதா பயஸ் –  நன்றி காலைக்கதிர்