மாற்று திறனாளிகள் முன்வைக்கும் முக்கியமான மூன்று கோரிக்கைகள் – இன்று கிழக்கில் ஊடகவியலாளர் சந்திப்பு

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும்,போரினாலும் ஏனைய காரணங்களினாலும் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட மாற்றுவலுவுடன் செயற்படுவோர்  இன்று காலை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் தமக்கான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை செயற்படுத்தும் முகமாக ஊடகவியலார்களை சந்தித்துள்ளனர் .
இலங்கையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் அனைவரின் சார்பாகவும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்,மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி வழங்கப்படவேண்டும் ,பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு அவை தொடராக இயங்குவதற்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்கின்ற மூன்று கோரிக்கைகளை பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில்,இந்த ஆண்டில் நிறைவேற்றித் தருமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் .

அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் இன்று முன்வைத்த கோரிக்கை அறிக்கை வருமாறு ,
போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

1. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்

மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.

2.மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி

இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உதாரணமாக,
1. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்
2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
3. பல அங்கங்களை இழந்தவர்கள்
4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்.
6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்

3. பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்

கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.என data தமிழ் மாற்று திறனாளிகள் அமைப்பினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.