தன் தடையை வெல்வதே சாதனை ; மாற்றுதிறனாளிகள் தினம்

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்.

‘வலி தந்த வலிமையால் வாழ்வுப் பயணத்திற்குப் புதியவழி கண்டவர்கள் நாங்கள். நரம்புகளிலும் நம்பிக்கையுள்ளதால் குறையொன்றும் இல்லை’ என நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டாமா.

கண்களிருந்தும் மற்றவர்கள் துன்பங்களைப் பாராதவர்களுக்கு மத்தியிலே கழுத்துக்குக் கீழேஉறுப்புகள் செயல்படாதபோதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நுாற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் திறன்களை ஊக்கப்படுத்தி, அவர்களைக் காக்கும் மாற்று திறனாளிகள் வாழ்ந்துகாட்டியல்லாமல் வேறுயார்?

முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!
அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங்.இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மாற்றுத்திறன்
உலகஅளவில் பேசப்படும் ‘காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ எனும் நுாலை எழுதி பாராட்டைப் பெற்றார். இயற்பியல் ஆய்வுகளுக்காக உலகின் பலநாடுகளுக்குப் பயணிக்க அவருக்கென்று வடிவமைக்கப்பட்ட விமானத்தில் பயணித்து ஆய்வுச் சொற்பொழிவுகளை வழங்கினார்.

என் வாழ்வின் இலக்கு விண்வெளிப் பயணம் மேற்கொண்டு நிலவைச் சுற்றிவருவதுதான் என்று மிகத்துணிச்சலாகக் கூறினார். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைத்து 19 ஆய்வுநுால்களை உருவாக்கினார்.

பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் தேனீயைப் போல் உலவிய அறிவியல் விஞ்ஞானி!உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பேத்தோவன், பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26வது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது, அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார்.

உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பேத்தோவன்.