பாதத்தின் பயணம் – தேடலுடனான ஒரு தொடர் பயணம் 2

நமக்கு என்ன நடக்கிறது நாம் போகும்பயணம் சரியானதா ? நாம் எவ்வகையான சூழலில் வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் பயணங்களின் தொடர் நிலையைப்பொறுத்ததே. அந்த வகையில் நாம் இப்போது தொடங்கியிருப்பது ” பாதத்தின் பயணம் ” அனைத்து பயணங்களுக்கும் ஏதோ ஒரு இலக்கு இருக்கும் அப்படியே இந்த பாதத்தின் பயணத்துக்கும் மிக துல்லியமான இலக்கு இருக்கிறது .

ஒரு பேருந்தில் ஏறிப் பயணிக்க நினைத்துப் பேருந்தில் ஏறி விடுகிறீர்கள். பேருந்து நடத்துனர் பயணச் சீட்டு கொடுப்பதற்காகவேண்டி “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்கும்போது, “எங்காவது போவதற்குப் பயணச்சீட்டு கொடுங்கள் “, என்று கேட்டால் நீங்கள் கேலிக்குரியவராகிவிடமாட்டீர்களா ?

ஒரு சாதாரணப் பேருந்து பயணத்திற்கே எங்கே போகவேண்டும் என்று தீர்மானிக்காமல் பயணத்தைத் தொடங்குவதில்லை.

ஆனால் நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்திற்கு எமக்கொரு இலக்கிருக்கிறது ஏதோ ஒரு அகப் புற சூழ்நிலையால் நாம் நம் பாதங்களை இழந்துவிட்டோம் ஆனால் நம் பயணம் வாழ்க்கை என்ற சக்கரத்தில் ஒரு இலக்கு நோக்கியதாக மாறி இருப்பதை மறுத்துவிட முடியாது .

சாதிப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கே நல்ல இலட்சியங்கள் கட்டாயம் இருக்கவேண்டும். பாதங்கள் இழந்த நமக்கு வாழ்வை நிலைநிறுத்தி கொண்டு செல்வதே பெரும் இலட்சிய மாக இருக்கிறது என்கின்றனர் பாதம்களை இழந்தவர்கள் . அவர்களோடு நாம் மனம்திறந்து பேசியுள்ளோம் அவர்களின் எண்ணக்கிடக்கைகள் எம்மிடம் பரிமாறப்பட்டுள்ளது .

ஆங்கிலத்தில் Goal Setting-என்றும் தமிழில் “இலக்கை நிர்ணயித்தல்” என்றும் அழைக்கப்படும் இந்த மென் திறன் வாழ்க்கையைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் கட்டாயமாகத் தேவைப்படும். அப்படியான ஒரு மென்திறன் பயணம்தான் நம் பாதத்தின் பயணம் .
ஒவ்வொரு பாதங்களை இழந்தவர்களும் செயற்கையான பாதங்களை பெறும் வழிமுறைகள் ,பயன்படுத்தும் வழிமுறைகள்,சீர்திருத்தும் முறை அதில் பெறும் இடர்பாடுகள் நெருக்கடிகள் என இன்னோரன்ன விடயங்களை இந்த பயணம் சந்திக்கிறது ,

இலங்கையின் யாழ்ப்பாணம் ,வவுனியா ,முல்லைத்தீவு ,கிளிநொச்சி , மன்னார் ,திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை என எட்டு மாவட்டங்களில் இருக்கும் பாதங்களை இழந்தவர்களின் அனுபவங்களை நாம் இந்த பயணத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறோம் .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விதமாக தமது பாதங்களை இழந்திருக்கிறார்கள் ஆனால் இழக்கப்பட்டது மனித உடலின் மிக முக்கியமான அங்கமான பாதம் (கால்கள் ) என்பது மறுக்கமுடியாத நிதர்சனம் .

இழக்கப்பட்ட ஒவ்வொரு காலின் இடத்துக்கும் ஈடு செய்யப்பட்டுள்ள செயற்கை பாதங்கள் எந்தளவுக்கு அவர்களை தாங்குகின்றன என்பதும் அதனைப்பெறுவதில் அவர்கள் எதிர்கொண்டுள்ள இடர்பாடுகள் என்ன என்பதையும் நாம் மிக ஆழமாக கேட்டு அறிந்திருக்கிறோம் , பாதிக்கப்பட்டவர்களிலும் பலவகையினர் இருக்கின்றனர் ,வல்லமை என்பதும், பரந்த சமூக அணுகல் என்பதும் எல்லோருக்கும் இருப்பதில்லையே இதில் பாதங்களை இழந்தவர்கள் விதிவிலக்கல்ல என்பதை அவர்களோடு பேசும்போது நாம் உணர்ந்துகொண்டோம் .
30 வருடங்களுக்குமேல் போர் இடப்பெற்ற ஒரு நாட்டில் செயற்கை அவயவங்களை பெறுவதற்கு அரசிடம் ஒரு சரியான அணுகுமுறை இல்லை என்பது எவ்வளவு வருத்தமானதாக இருக்கிறது என்பதை அவர்களே நமக்கு உணர்த்தினர் .

அரச சார்பற்ற நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களை கருணையோடு அணுகுவதாக கூறும் பயனாளிகள் , அந்த அமைப்புக்களைவிட அரசு பெருமளவில் தமக்கு உதவவேண்டும் என்பது செயற்கை அங்கங்களோடு பயணிக்கும் மனிதர்களின் பேரவா ஆக உள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலான செயல்முறைகளை அரசு தொடர்ச்சியாக செய்யவேண்டுமென அவர்கள் எதிர்பார்கின்றனர் .

இலங்கையில் நாம் தொடர்புகொண்ட எட்டு மாவட்டங்களிலும் இருக்கும் ஒவ்வொரு பாதங்களை இழந்தவர்களும் என்பது வீதம் ஒரே மாதிரியான பிரச்சனைகளை நமக்கு ஒப்புவித்தனர் .

சிலர் தமது தனிப்பட்ட செல்வாக்கு அணுகுமுறைகளை பயன்படுத்தி ஓரளவு தமது பிரச்சனைகளை தீர்க்க முனைந்திருக்கிறார்கள், பலர் எப்போதும்போல் அல்லல்படுகின்றனர் .

எப்போதும் தனியார் தொண்டு நிறுவனங்களின் வரவுக்காக ஒரு அங்கத்தை இழந்த நிலையில் காத்திருப்பது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் வாய்விட்டு கூறும்போது நெஞ்சு பதறிப்போகிறது .

செயற்கை என்பது மனதளவிலும் வலிந்து வந்து உள சீரழிவை தர வல்லது என்பதையும் நாம் கவனிக்காமல் இல்லை.

குறைந்தது இரண்டு வருடங்கள் ஒரு பாதத்தை பயன்படுத்த வேண்டியது பாதங்களை இழந்தவர்களின் கட்டாயமாக இருக்கின்றது .
கடினமான பணிகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அவை பெரும் சவாலாகவே இருக்கின்றது .கட்டட வேலைகள் ,விவசாயம் என கடினமான பணிகளில் ஈடுபடும்போது செயற்கை பாதங்கள் மிக விரைவாக சிதைந்து போகின்றன அவற்றை சீர்படுத்துவதற்கு, உடனடியா பயனைப்பெறுவதற்கு இன்றுவரை எந்த நிறுவனங்களும் இல்லை என்பது கவலையானது , குறிப்பாக அரசிடம் இருந்து துரிதமான எந்த அனுகூலமும் கிடைப்பதில்லை என்பது பாரிய இடர்நிலையின் உச்சக் கட்டமான வெளிப்பாடு.
அரச வைத்திய சாலைகளில் இயங்கும் செயற்கை அங்கங்களை செய்யும் பிரிவு மிகுந்த இழுபறிகளோடு இயங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்,பாதங்களை அளந்து சரிவர பெறுவதென்பது நீண்ட இழுபறிகளுக்கு பின்னரான முடிவாக இருப்பதனால் ,அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது அவர்களின் வாதமாக இருக்கின்றது,

அவர்களின் தேவை அங்கே இயல்பாக எடுத்துகோரப்படவில்லை என்பதாலும் அதிகரித்த பயனாளிகளின் கோரிக்கை இல்லை என்பதனாலும் அரசு பிரயத்தனம் இல்லாமல் இருக்க காரணாமாக இருக்குமா என நாம் எண்ண தோன்றியது .

இருந்தபோதும் மாவட்டதுக்கு ஒரு துரித செயற்பாட்டு மையங்களை அரசு நிறுவினால் அவர்களுக்கு சேவை இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கும் என்பதும் அவர்களின் கருத்துக்கள் மூலம் நாம் எடுத்துள்ள தீர்மானமாக இருக்கின்றது.
ஒவ்வொருவரின் கருத்துகளையும் அவர்களின் மன உணர்வுகளையும் நாம் அடுத்த பகுதியில் விபரிப்போம் பயணம் தொடரும் ….