நின்றுழலும் பெண்கள் மனம்திறந்த பொழுதுகள் – வீரமுனை – 3

48 வயதிலும் 18 வயது பெண்ணுக்கே உரித்தான அதே தயக்கம் ,வெட்கம் ,சோகம் என்பவற்றுடன் நேருக்கு நேர் என் கண்களை ஊடறுத்து பார்த்துக்கொண்டார், ம்ம்ம் …. என்ன வேலை செய்தீர்கள் என்றேன் அரிசி விற்க தொடங்கினேன் அரிசியை மூடைகளாக பெற்று வீடுகளுக்கு கொடுக்க தொடங்கினேன் அதில் கிடைக்கும் நூறு , இருநூறு ரூபா இலாபம் என்னுடைய அன்றாட தேவைகளுக்கு உதவியது .

அப்படியா அரிசி மூடைகளை தூக்குவது ,இறக்குவது எல்லாம் சிரமம்தான் ஆனாலும் மனபலம் அதை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டது என்றார்.

அவரின் செயற்பாட்டுக்கும் சுபாவத்துக்கும் சற்றும் தொடர்பு இருக்கவில்லை அத்தனை மென்மையான பெண்ணாக இத்தனை கடினமான வேலைகளை ஆண்களுக்கு நிகராக செய்து முடிப்பது பெருமையை தந்தது எனக்கு .

சரி இப்போது என்ன வேலை என்றேன்? தன்  கைகளை என் நாசியில் வைத்து உரசி என்ன மணக்கிறது என் கைகளில் என கேட்டார் ,மட்டக்களப்புக்கே உரித்தான கமகமக்கும் தயிர் வாசனை,  ம்ம் தயிர் மணக்கிறது என்றேன் … தயிர்தான் போட்டு விற்பனை செய்கிறேன் என்கிறார் , நல்லது . நல்ல வருமானம் தேறுமா என்றதற்கு கைகளை நாசியில் தேய்த்த வேகத்துக்கு பதில் வரவில்லை. பரவாயில்லை போத்தலில்தான் அடைத்து கொடுக்கிறேன் பால் காசுபோக கொஞ்சம் மீதம் வரும் ஏதோ சமாளிக்க முடிகிறது என்கிறார் .

எது எப்படி இருந்தாலும் தனிமை வாழ்வு பொருளாதாரத்துக்கு ஒரு சவால் இல்லாத போதும் சமூகத்துக்குள் ஒரு சவால் என்பதே அவரின் இறுதிவரையான வாதமாக இருந்தமை கவலைக்குரியது .

இந்த மாதிரியான கிராமங்களில் இப்படியான மனநிலையில் இருக்கும்  பெண்களின் எண்ணங்களை மாற்ற நாம் கடுமையாக உழைக்க வேண்டி இருப்பதை நான் நன்கு உணர்ந்துகொண்டேன். ஒரு கிராமத்தில் ஒரு சமூகத்தின் அத்தனை ஆண் தலைமைகளும் இறந்துபோவது என்பதும், அதற்கு பின்னரான பொருளாதாரம் வாழ்வியல் போராட்டம் என்பதும் அவ்வளவு இலகுவாக பார்த்து கடந்துபோய் விடகூடிய விடயம் இல்லை .

சமூகம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருந்து விலகி உழைத்து வாழுதல் பிள்ளைகளை பராமரித்தல் ,ஒருசேர சமூகத்துள் மூழ்கி வாழ்தல் எல்லா இடங்களிலும் முடிந்தகாரியம் இல்லை.

சரி இப்போது இன்னொருவரை அணுகுகின்றேன் , என்னோடு வந்த  குழுவினர் தங்கள் வேலையில் மும்முரமாக இருக்கின்றனர் அவர்களின் தொழில் முன்னேற்றம் பற்றி அவர்கள்  கலந்துரையாடுகின்றனர் .

நானோ அவர்களின் கடந்த காலத்தை அவர்களின் தர்க்காலத்தை ஒப்பிட்டு அவர்களுக்கு வித்தியாசப்படுத்தி காட்டிட பிரயத்தன படுகின்றேன் .

இவர் மிக துணிச்சலாக இருக்கிறார் வளர்ந்த பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் தன்போன்ற பெண்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறார் ,இவர் இந்த கணவனை இழந்த பெண்களின் அமைப்புக்கு தலைமை தாங்குகின்றார்.

மிகவும் கனத்த இறுக்கமான வார்த்தைகள் அவரிடம் இருந்து வருகின்றன ,இந்த சமூகம் பொல்லாதது மகள் இதற்குள் நம் போன்றவர்கள் வாழ்வதுதான் சவால் என்றே தன் கதையை தொடங்குகிறார் ….

(ப்ரியமதா பயஸ்)

தொடரும் …