இந்த பெண் பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் ,ஆனால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரியாதவர்களுக்கு இப்பதிவு கண்டிப்பாக தன்னம்பிக்கை அளிக்கும் என்பது உறுதி. சற்று பெரிய பதிவு தான் ,பொறுமையாக படிக்கவும்
உத்திரபிரதேச மாநிலம் ,லக்னோ நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பேத்கர் நகர் என்னும் கிராமத்தில் பிறக்கிறாள் “அவள்”
அப்பா ,இந்திய ராணுவத்தில் பொறியாளர் ,அம்மா சுகாதாரத்துறையில் மேலாளர். தன்னுடைய மூன்றாவது வயதில் தந்தையை இழக்க ,அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறாள் .
சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம்.பல விளையாட்டுகளை விளையாடினாலும் ,கைப்பந்து விளையாட்டில் சிறப்பாக செயல் பட்டு,தேசிய அளவில் விளையாட்டு வீரராக திகழ்ந்தாள்.
முதுகலை பட்டப்படிப்பை படித்து முடித்தவுடன் சட்டம் பயின்று ,வேலை தேட ஆரம்பிக்கிறாள்.முதலில் துணை ராணுவத்தில் விண்ணப்பித்து,பல முறை முயற்சி செய்தும் தோற்கிறாள் .
பிறகு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF ) விண்ணப்பிக்கிறாள். அவளின் முயற்சி கைகொடுக்க , அவளின் இல்லத்தை தேடி அழைப்பு கடிதம் வருகிறது. மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளான அவளுக்கு ,ஒரு சிறு சோகமும் தொற்றிக்கொள்கிறது.காரணம்,ஒரு சில தொழிநுட்ப பிழையின் காரணமாக,இவளின் பிறந்த திகதி தவறாக இருந்துள்ளது.
இந்த சிறு பிழையின் காரணமாக வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற ஐயத்தில் ,உடனே தவறை திருத்த டெல்லி புறப்படுகிறாள்.
2011 ஆண்டு, ஏப்ரல் மாதம் ,இரவு நேரம் :
பத்மாவதி எக்ஸ்பிரஸ் : லக்னோ — டெல்லி ரயில் பயணம்
அப்போது அவளுக்கு தெரியவில்லை ,அந்த பயணம் அவளது வாழ்க்கையே புரட்டி போட போகிறதென்று.
அவசர அவசரமாக பயண சீட்டு எடுத்து கொண்டு ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறுகிறாள். ரயிலும் புறப்பட்டது. கம்பார்ட்மெண்ட் முழுவதும் அப்படி ஒரு கூட்டம்.தட்டுத்தடுமாறி ,எப்படியோ ஒரு ஓரமாக இருக்கையை பிடித்து அமர,ஐந்து வழிப்பறி திருடர்கள் இவளின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்கின்றனர்.
இவள் விளையாட்டு வீராங்கனை என்பதால் ,அவர்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளை யில்,அந்த கம்பார்ட்மெண்ட்யில் ஒருவர் கூட உதவி செய்ய முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவளும் தொடர்ந்து போராட,ஒரு கட்டத்தில் அந்த ஐந்து கொள்ளையர்கள் ,இவளது இரு கை மற்றும் இரு கால்களை பிடித்து ,ஓடும் ரயிலிலிருந்து வீசி எறிகின்றனர் .
வீசி எறியப்பட்ட அவள்,பக்கத்துக்கு தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வேறொரு ரயிலின் மீதி மோதி கீழே விழ,நொடிப்பொழுதில் அவளின் காலின் மீது ரயில் ஏறி சென்றுவிட்டது.
இவள் மயங்கிய நிலையில் இருக்க,தண்டவாளத்தில் உள்ள எலிகள் ,இவளின் அடிபட்ட பகுதிகளை மொய்க்க தொடங்கின.
இவளால் நகர கூட முடியவில்லை. முழு இரவும், இவள் தண்டவாளத்தின் அருகில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க, 49 ரயில்கள் அந்த தண்டவாளத்தை கடந்தது.
கிட்ட தட்ட 7 மணி நேரம் கழித்து ,அப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகள் காலைக்கடனை தண்டவாளத்தில் கழிக்க, வரும் போது ,இவளை கண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
மருத்துவ வசதிகள் வட மாநிலங்களில் அதிகம் இருக்காது. மருத்துவமனையில் anesthesia இல்லை என்று மருத்துவர்கள் கூற ,இவளின் ஒப்புதலின் அடிப்படையில்,மயக்க மருந்து செலுத்தாமல்,இவள் conscious ஆக இருக்கும் போதே ,இவளின் இடது கால், முட்டிக்கு கீழ் பகுதி வெட்டி எடுக்க பட்டது.
பிறகு இவள் தேசிய விளையாட்டு வீராங்கனை என்ற தகவல் அறிந்தவுடன் ,மீடியா வெளிச்சம் இவள் மீது பட,விளையாட்டு துறை அமைச்சரின் உதவி கிடைத்து, இவளுக்கு AIIMS மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது.
ஸ்பைனலில் அறுவை சிகிச்சை,வலது காலில் இரும்பு Rod ,இடது கால் முட்டிக்கு கீழ் துண்டிப்பு என இவள் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ,மீடியா தன்னுடைய பங்கிற்கு இவளை மன ரீதியாக தாக்கியது.
இவள் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்த தாகவும் ,இவள் தற்கொலைக்கு முயன்று ரயிலில் இருந்து குதித்ததாகவும் ,பல உண்மை அற்ற செய்திகளை பரப்பியது.மறுபுறம் இவள் பயண சீட்டை பெற்ற CCTV ஆதாரங்கள் வேறு ஒரு ஊடகம் வெளியிட்டது.
கிட்டத்தட்ட 4 மாத காலம் மருத்துவமனை படுக்கையில் இருந்த அவளுக்கு இரண்டு எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடியது .ஒரு புறம் அனுதாப பார்வை மறுபுறம் தவறான விமர்சனங்கள்,இதிலிருந்து எப்படி விடு படவேண்டும் என ஆழமா யோசித்தாள்.
எல்லோரிடமும் சென்று,என் மீது சுமத்த பட்டது பொய் தகவல் என்று சொன்னாலோ அல்லது என் மீது அனுதாப பார்வை வேண்டாம் என்று கூறினாலோ எதுவும் மாற போவதில்லை.
கனா படத்தில் ஒரு வசனம் வரும் ” இந்த உலகம் ஜெய்ச்சிடுவேன்னு சொன்னா கேக்காது ,ஜெயிச்சவன் சொன்னா கேக்கும் ” என்று .
தான் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற விதையை மனதில் விதைத்து,அவள் எடுத்த முடிவு ,எவெரெஸ்ட் சிகரம் ஏறுதல்.
இதை பலரிடம் இவள் கூற ,” உனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருக்கு ,அத பாரு ,ஒரு கால் இல்லை ,இன்னோரு காலில் இரும்பு rod இருக்கு ,முதுகுல ஆபரேஷன் ,இதெல்லாம் வச்சிக்கிட்டு நீ மலை எற போறியா என்று பலரும் ஏளனமாய் சிரிக்க ,இவளின் குடும்பம் மட்டும் இவளின் மீது நம்பிக்கை வைத்தது.
வெட்டு பட்ட இடத்தில் இவளுக்கு புரோஸ்தெடிக்(Prosthetic) கால் பொருத்தப்படுகிறது.மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் நேராக மலைசிகரங்கள் ஏறும் பச்சேந்திரி பால் (Bachendri Pal) அவர்களை தேடி செல்கிறாள்.
“பத்ம பூஷன்” Bachendri Pal – எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்.
இவளின் தன்னம்பிக்கையை பார்த்த பச்சேந்திரி பால்,” நீ ஏற்கனவே மனதால் எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டாய்,நீ எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்து ,நீ யார் என்பதை இந்த உலகிற்கு காட்டு ” என்று தைரியமாக பேசி,
இவளை நேரு மலையேறும் பயிற்சி மையத்திற்கு அனுப்புகிறார்.கிட்டத்தட்ட 18 மாதம் கடும் பயிற்சி. புரோஸ்தெடிக் காலை வைத்து நடப்பதே சிரமம்,இவள் கொஞ்சம் கொஞ்சமாக சிறு மலைகளில் ஏறி பயிற்சி பெற்று,பல இன்னல்களை கடந்து பயிற்சி வகுப்புகளை முடிக்கிறாள்.
இவளின் திறமையை கண்ட, டாட்டா ஸ்டீல் நிறுவனம் இவளின் எவெரெஸ்ட் பயணத்திற்கு ஸ்பான்சர்ஷிப் அளித்தது.
எவெரெஸ்ட் சிகரம் அடிவார சாலையில் இருந்து ,பேஸ் கேம்பிற்கு(Base Camp) செல்ல 2 நிமிடம் தான் ஆகுமாம்.ஆனால் இவளுக்கு 3 மணி நேரம் ஆனது.
புரோஸ்தெடிக் காலில் அழுத்தம் குடுத்து நடக்கும் போது ,அப்படி ஒரு வலி வலிக்கும் .ஆனால் ,இவளின் இலக்கு ,எவெரெஸ்ட் சிகரத்தை அடைவதே.
எவெரெஸ்ட் சிகரத்தை அடைய மொத்தம் நான்கு கேம்ப் உள்ளது.மலை ஏறுபவர்கள் ஆங்காங்கே இளைப்பாறவே அந்த 4 கேம்புகள்.
நான்காவது கேம்பை கடந்தவுடன்,மேலும் 3500 அடி சென்றால் எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்து விடலாம்.
இந்த நான்காவது கேம்ப், death zone என்று அழைக்க படுகிறது.காரணம்,அங்கு தான் மரணங்கள் அதிகம் நிகழும்.பிராண வாயு இல்லாமல் ,உடல் உறைந்து பலர் இறந்துள்ளனர்.
பல போராட்டங்களுக்கு பின் நான்காவது கேம்பை அடைந்த அவள் ,மேலும் பயணிக்கும் போது ஆங்காங்கே உறைந்த நிலையில் பல பிணங்களை கண்டாள். இவளின் முன்பு , ஒரு வங்காளதேசத்து மலை ஏறுபவர் , உயிருக்கு போராடி இறந்ததை கண்டு கடும் பயத்திற்கு உள்ளானாள்.
ஆனாலும் இவள் ஆழ்மனதில் உள்ள அந்த விதை இவளை உந்தியது.ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும்,இவளுடன் பயணித்த ஷெர்பா (Mountaineer Expert ),இவளை எச்சரித்தார்.தேவையான அளவு பிராண வாயு உன்னிடம் இல்லை,நாம் திரும்பி விடலாம்,வேறொரு முறை பயணிக்கலாம் என்றுள்ளார் .
ஆனால் இவள் திரும்புவதாக இல்லை,சிகரத்தை அடையும் முனைப்போடு ,மேலே, மேலே சென்று சிகரத்தை அடைந்தாள்.
ஏப்ரல் 2011 உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவள்,
மே 21,2013 ,உலகின் உயர்ந்த சிகரத்தில் அவள்.
இரண்டு ஆண்டுகளுக்குள் ,இடது காலை இழந்து,வலது காலில் இரும்பு rod பொறுத்த பட்டவள்,எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்தாள்.
சிகரத்தை அடைந்ததும் உலகிற்கு தான் யார் என்பதை காட்ட புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தபின் ,கீழே இறங்கும் வேளையில் ,ஷெர்பா கூறியது போல் பிராண வாயு தீர்ந்து ,மறுபடியும் உயிருடன் போராட்டம்.
கடவுளே கீழ் இறங்கி வந்து உதவியது போல்,சிகரத்தை நோக்கி எறிய ஒரு பிரிட்டிஷ் மலையேறுபவர் தான் வைத்திருந்த கூடுதல் ஆக்சிஜென் சிலிண்டரை தர,ஷெர்பா , அந்த பிராண வாயு சிலிண்டரை பொருத்தி , இவளை மீட்டார்.
இவளது சாதனை எவெரெஸ்ட் சிகரத்துடன் நிற்க வில்லை.அடுத்த இலக்கை நோக்கி இவளின் பயணம் தொடங்கியது .
இவளின் அடுத்த இலக்கு ,உலகத்தில் உள்ள அனைத்து கண்டங்களின் உயரிய சிகரத்தை தொட வேண்டும் என்பதே.
ஆசியாவின் சிகரம் ,எவெரெஸ்ட் சிகரம் ,ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம்,ஐரோப்பா கண்டத்தின் எல்பர்ஸ் சிகரம்,ஆஸ்திரேலியா கண்டத்தின் கோஸ்கியுஸ்கோ சிகரம்,அண்டார்டிக்காவின் மவுண்ட் வின்சன் சிகரம் என இதுவரை 7 மலை சிகரங்களை அடைந்து விட்டாள் .
அவளின் பெயர் பத்மஸ்ரீ ” அருணிமா சின்ஹா “.