பாதிக்கப்பட்டோர் COVID-19 நெருக்கடி நிலையினை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவர்கள் அல்ல… எஸ். பி. எஸ். பபிலராஜ்

COVID-19 நெருக்கடி நிலையினை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவர்கள் அல்ல போரின் வடுக்களை சுமந்து வாழும் மக்கள் என்பதால் சமூகம் இவர்களின் நலன்களிலேயே அதிக கரிசனை கொள்ள வேண்டும்.

“பணமின்றி அமையாது உலகு”

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்து இன்று உலகையே உலுக்கி மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவுகொள்ளும் கொரோனா எனப்படும் COVID-19 னை எதிர் கொள்ள முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அபிவிருத்தியில் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான இலங்கைத் தீவும் அதற்கு விதிவிலக்கல்ல.

தொழிநுட்பத்தில் வளர்ச்சியடைந்து செவ்வாயில் கால் பதிக்க முனைந்த உலகில் இன்று வீட்டிற்கு வெளியே கால் வைக்க அஞ்சி மக்கள் வீட்டிற்கு உள்ளே முடங்கி இருக்கும் நிலைமையில் மனித இனம் தனது இருப்பை பூமிப் பந்தில் நிலை நிறுத்த போராடும் இன்றைய நிலையில் பொது விடுமுறைகளும், ஊரடங்கு உத்தரவுகளும் என உலகமே முடங்கியிருப்பதால் உலகம் இன்றைய சூழலை வெற்றி கொள்வதற்கு இடையில் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் போரின் வடுக்களை சுமந்து வாழும் மக்கள் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லவே பெரும் சிரமப்படும் நிலையில் அவர்கள் இன்றைய covid-19 நெருக்கடி நிலையினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்நிலையில் இலங்கைத்தீவில் நீடித்து நிலைத்த மூன்று தசாப்த யுத்தத்தின் வடுக்களை சுமந்து வாழும் மக்கள் அன்றாட கூலித்தொழில் மூலமாக வாழ்க்கையினை கொண்டு நடாத்துபவர்களாக உள்ள நிலையில் இன்றைய இவ் covid-19 நெருக்கடி நிலையினை எதிர்கொள்வதில் பாரிய சவால்களிற்கே முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைமையே இன்று உள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் போரின் வடுக்களை சுமந்து வாழும் மக்களினை நான்கு பிரிவினராக அடையாளப்படுத்த முடியும்.

I. மாற்றுத்திறனாளிகள்
II. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
III. பெற்றோரை இழந்த பிள்ளைகள்
IV. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்

இவர்கள் சாதாரண நிலைமைகளிலேயே அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதிலே பாரிய நெருக்கடிகளிற்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக

I. வறுமை
II. கல்வியினை தொடருவதில் உள்ள நெருக்கடிகள்
III. வேலைவாய்ப்புகள் இன்மை
IV. சுகாதார நெருக்கடிகள்

போன்ற காரணங்களினால் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதற்கே சிரமப்படும் இவ் மக்கள் covid-19 னையும் இன்றைய ஊரடங்கு நிலமைகளையும் எதிர்கொண்டு வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்ல சாதாரண மக்களே இன்று சிரமப்படும் நிலையில் இவர்களினால் இத்தகைய சூழ்நிலையினை எதிர் கொள்வது கடினம் என்பதால் இவர்களது நலன்களில் சமூகம் இன்று அக்கறை கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

பணமே அனைத்தையும் தீர்மானிக்கும் இன்றைய உலகில் ஒருவேளை உணவிற்கே ஏங்கித் தவிக்கும் இவ் மக்கள் பிரிவினர் தமது சுகாதார தேவைகளைப் பற்றி சிந்திப்பார்களா என்பதே ஐயம். இன்றைய covid-19 வைரஸ் பரவுதை தடுக்க சுகாதார நடைமுறைகளே மிகமிக அவசியமானதாக இருக்கும் நிலையில் போரின் வடுக்களை சுமந்து வாழும் மக்கள் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வைரஸ் பாதிப்புக்களிற்கு உட்படாமல் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்ல உதவ வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

மாற்றுத்திறனாளிகள் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லவதிலேயே பிறரில் தங்கியிருக்கும் நிலையில் பல இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவர்களின் உதவியுடனே தமது அன்றாட கருமங்களையே மேற்கொள்ளும் நிலையில் இன்று அவர்கள் இன்னும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளார்கள். பிறப்பால், நோயின் தாக்கம் காரணமாக மற்றும் போரினால் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் என இன்று சமூகத்தில் பலர் உள்ளனர். எனக்கு தெரிந்து எலும்பு வளர்ச்சி குன்றி பிறப்பால் மாற்றுத் திறனாளிகளான நடக்க முடியாத இரண்டு பிள்ளைகளை ஏழ்மை நிலைமையிலும் பெற்றோர் அவர்களை பராமரித்து வருகின்றார்கள். நடக்க முடியாதவர்களைப் பராமரிப்பதில் உள்ள சுகாதார நெருக்கடிகள் அதிகம் என்பதால் இன்று covid-19 வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் குறித்த பெற்றோரினால் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மாற்றுத்திறனாளிகளான தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையே உள்ளது. சாதாரண சுகதேகிகளிற்கு covid-19 ஏற்பட்டால் பராமரிப்பதே கடினமான நிலையில் மாற்றுத் திறனாளிகள் covid-19 தொற்றிற்கு உள்ளானால் பராமரிப்பது மிக கடினமான காரியம் ஆகும்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் எலும்பு வளர்ச்சி குன்றிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சக்கர நாற்காலி பாவனையாளர்களாகவே உள்ள நிலையில் அவர்கள் மற்றையவர்களில் தங்கி வாழ்வதால் covid-19 வைரஸில் இருந்து இவர்களை பாதுகாக்க அவர்களை சார்ந்த உறவுகள் விழிப்போடு இருக்க வேண்டும்.

இன்று covid-19 யாழ்ப்பாணம் வரையில் பரவிவிட்ட நிலையில் இலகுவாக எல்லோரையும் தொற்றிவிடும் அபாயமுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் covid-19 தொற்றிற்கு உள்ளானால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான காரியம் என்பதால் அவர்களிற்கு இவ் வைரஸ் பரவாத வகையில் அவர்கள் வீட்டிலேயே சுகாதார நடைமுறைகளோடு இருக்கும் வகையில் உலர் உணவுப் பொருட்களை அவர்களிற்கு வழங்குதல் வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் எமது சமூகம் மாற்றுத்திறனாளிகளை சுமையாக கருதாமல் அவர்களது ஆரோக்கியமான வாழ்விற்காக அர்ப்பணிப்போடு உதவிகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் போரில் விதவைகளான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளோடு நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லவே சிரமப்படும் நிலையில் எவ்வாறு ஊரடங்கு நிலையினை எதிர்கொண்டு வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லப் போகின்றார்கள். அது அவர்களிற்கு கடினமான காரியம் ஆகும். அன்றாடம் கூலித்தொழில் மூலமாக ஈட்டும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையினை நடாத்தும் இவர்கள் இன்று ஊரடங்கு நிலையில் வேலைகளிற்கு செல்ல முடியாத நிலையில் ஒருவேளை உணவிற்காக ஏங்கித் தவிக்கும் அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு அவர்கள் ஊரடங்கு நிலையினை எதிர்கொள்ள போதுமான இயன்ற உதவிகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

மேலும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் முதுமை நிலையிலும் கூலித்தொழிலிற்கு சென்று வாழ்க்கை நடாத்துபவர்களாகவும், பெற்றோரை இழந்த பேரப்பிள்ளைகளை தமது உழைப்பில் பராமரிப்பவர்களாகவும் உள்ள நிலையில் ஊரடங்கு நிலையினை எதிர் கொண்டு வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதும் covid-19 ஐ எதிர்கொள்வதும் இயலாத காரியம் ஆகும்.

கடந்த வருட முற்பகுதியில் நாம் எமது ஒன்றியத்திற்கூடாக வவுனியா மாவட்டத்தில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கிய போது அன்று நேரில் அறிந்து கொண்ட  ஓர் நெகிழ்ச்சியான சம்பவத்தையே உதாரணமாக கூறலாம் என்று நினைக்கின்றேன். பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள் இருவரை அவர்களது பாட்டி தானே அன்றாடம் கூலித்தொழில் செய்து பராமரித்து படிப்பிப்பதாகவும் அது தனக்கு சிரமமாக உள்ளது என்றும் பேரப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுமாறும் குறிப்பிட்டு கண்கலங்கினார்.

இவ்வாறு சாதாரண நிலைமையிலேய வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்ல சிரமப்படும் இவர்கள் இன்றைய ஊரடங்கு நிலையினை எதிர்கொண்டு அதற்கு ஊடாக covid-19 தொற்றுக்கு உட்படாமல் வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

போரின் வடுக்களை சுமந்து வாழும் இத்தகைய மக்களின் வாழ்வாதாரம் என்பதே தினக் கூலித்தொழில் தங்கியிருக்கும் நிலையில் இன்றைய covid-19 நெருக்கடி நிலையினை எதிர்கொள்ள அவர்கள் பசியோடு போராட வேண்டிய துர்பாக்கிய நிலையில் அவர்களால் வீட்டிற்குள் முடங்கியிருக்க முடியாது வெளியே வர நேரிடுவதால் அவர்கள் இலகுவில் covid-19 வைரஸ் தொற்றிற்கு இலகுவாக உட்படக் கூடிய சூழல் கண் முன்னே பிரகாசமாக உள்ளது என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

போரினால் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த இம் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் இன்றைய நிலையில் சவால் மிக்க ஒன்றாகும் என்பதை எமது அரசியல் தலைவர்களும் மற்றும் இன்றைய நெருக்கடி நிலையில் சமூகத்தில் வறிய மக்களிற்கு உதவிகள் பல செய்து கொண்டிருக்கும் சமூக அமைப்புக்களும் உணர்ந்து கொண்டு மேற்குறிப்பிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நான்கு பிரிவினரதும் இன்றைய நிலையினை கருத்தில் கொண்டு அவர்களிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

வறுமையில் உள்ள மக்கள் எல்லோருக்கும் இன்றைய நிலையில் உதவிகள் தேவையாக இருக்கின்றது ஆயினும் நாம் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கே இந்நிலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Covid-19 நோய் தொற்றினை தவிர்க்க அனைவரும் சுகாதார பிரிவினரின் நடைமுறைகளை அவசியம் செவிமடுங்கள். Covid-19 வைரஸினை முற்றாக ஒழிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்திட்டங்களிற்கு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவும்.

ஆக்கம்.
எஸ். பி. எஸ். பபிலராஜ்
மேனாள் செயலாளர்,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.