கொரோனா என்னும் உயிர்க்கொல்லி: ஒரு மாற்றுத்திறனாளியின் மடல்

கொரோனா என்னும் உயிர்க்கொல்லி உலகளாவிய ரீதியில் தாண்டவம் ஆடுகின்றது அதனை தடுப்பதற்கு நாடுகளும் நகரங்களும் பூட்டப்படுகின்றன. அவ்வப்போது தளர்த்தப்படும், அந்த நடைமுறைகளில் மக்களும் முண்டியடித்துக் கொண்டு தமது வாழ்வுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள்.

ஒரு சக்கரநாற்காலியில் வாழ்பவனாக, நிலையை சமூகத்தோடு பகிர நினைக்கின்றேன்.

இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசத்தில் வட மாகாணத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளாக 20,011 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,001 ஒருவரும் வாழ்கின்றோம்.

இந்த சமுதாயத்தில் ஏற்கனவே பல்வேறு அவலங்களோடு வாழும் இந்த சமூகக் கூட்டம் கொரோனாவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை இந்த சமூகத்திடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

ஏற்கனவே பாதிப்பு நிலையில் வாழ்பவர்களை கொரோனா கொல்கின்றது என்று செய்திகளில் படிக்கின்றோம். முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே பல்வேறு உபாதைகளோடு வாழும் நாங்கள் இந்த செய்திகளை கவலையோடு பார்க்கின்றோம்.

அத்தோடு முற்றாக பார்வை இழந்து, கைகளையும் இழந்து, கால்களையும் இழந்து வாழ்கின்ற அத்தனை சமூக கூட்டத்தையும் நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம்.

நிவாரண அறிவிப்புக்களிலும், கொடுப்பனவுகளின் அறிவிப்புக்களிலும் எங்களுக்கு சலுகைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளில் பலர் உழைக்கும் வலுவற்றவர்கள். அவர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கப் போகின்றது.

அதேவேளை மாற்றுத்திறனாளிகளில் சிலர் உழைத்து வாழ்கிறார்கள். அந்த உழைப்பு முற்றாக நிலைகுலைந்துவிட்டது.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எங்களோடு எங்கள் நிலைமைகளை அறிய ஆளுநர், அரச அதிபர்களும் எங்களோடு பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் எங்களுடைய நிலைமைகளை எங்களிடமே நேரில் கேட்டறிய வேண்டும் என்று விரும்புகின்றோம்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் அவலங்களை நான் நன்கு அறிந்திருப்பது போல் பார்வை இழந்தோர், கை இல்லாதவர்கள், கால்களை இழந்தவர்கள், இன்னமும் அந்தந்த பிரதேசத்தின் மாற்றுத்திறனாளி அமைப்புகளைச் சார்ந்தவர்களோடு அரச அதிகாரிகள் பேசுவதன் மூலம் வெளியே சொல்ல முடியாமல் நின்றுழலும் மக்களின் அவலத்தை அறிந்து ஆறுதலைக் கொடுக்க முடியும்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்டோர், ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்த மக்களோடு முண்டியடித்து எமக்கு உணவை பெற்றுக் கொள்ளும் வலு எங்களிடம் இல்லை. எமக்கான ஒரு பிரத்தியேகமான நாளை நீங்கள் தளர்த்தி நம்மைப் போன்றோர் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனை நிவாரண அடிப்படையில் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் இந்தத் துன்பத்தின் போதும் குறைந்தபட்சம் உணவு உண்டாவது வாழ முடியும்.

பெரும் அவலத்தை இன்னமும் நாங்கள் எதிர்நோக்க போகிறோம் என்ற நிலைதான் இன்றைய நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எனது இந்த வேண்டுகோளை ஏற்று அரச நிர்வாகமும் புலம்பெயர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டோருக்கு நீங்கள் முன்பு செய்கின்ற உதவிகளோடு மேலதிகமான உதவிகளை செய்ய வேண்டும் என்று வேண்டி நிற்கின்றேன்.

பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், அதேபோல் பெண் தலைமைத்துவ குடும்பத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் ஆகியோரோடு அரச நிர்வாகம் நேரடியாக பேச வேண்டு என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்கள் அவலங்கள் சரியான புரிதலுக்குட்படுத்தப்பட்டு நிவாரணங்கள் கிடைக்கப்பெறுவதன் மூலமே இந்த உலகப் பேரவலத்தில் நாங்கள் தப்பிப் பிழைக்க முடியுமென்ற கருத்தையும் என் சமூகத்தின் முன் நான் உரிமையோடு முன்வைக்கின்றேன்.

நன்றி

வி.ஜெயகாந்தன்,

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவன்.

தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு (DATA)