COVID-19 னை சாதாரண மக்கள் போல் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்கொள்கிறார்களா!
30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்து போரின் வடுக்களில் இருந்து முழுமையாகமீளாத சூழலில் மீண்டும் ஓர் போர்க்கால சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழ்ச்சமூகம்.
சீனாவில் ஆரம்பித்த தொற்று தற்போது உலகை உலுக்கி வருகின்றது அதில் இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வீதத்தினை குறைப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ஓர் நல்ல விடயமாக இருந்தாலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
பாதிக்கப்பட்டவர்கள் என்பதனுள்
1. மாற்றுத்திறனாளிகள்
2. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
3. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
2009 இல் யுத்தம் முடிவடைந்து யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரத்தை மெல்ல கட்டியெழுப்பும் சூழலில் இவ் வைரஸ் தாக்குதலானது மீண்டுமோர் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
ஏறத்தாழ 38,000 மாற்றுத்திறனாளிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருக்கும் சூழலில் அவர்களுக்கான தேவை என்பது அவர்களின் பாதிப்பின் அடிப்படையில் வேறுபடுகின்றது.
அன்றாடம் உழைத்து உண்ணும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களின் பாதிப்பானது ஏனையவர்களின் பாதிப்பை விட ஒரு படி மேலாகவே உள்ளது.
அதாவது ஊரடங்கு வேளையில் திடீரென வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்படின் போக்குவரத்து பிரச்சினைகளையும் போக்குவரத்துக்கான செலவும் அதிகமாக இருத்தல், பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை, ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பாதிக்கப்பட்டவர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையும் அல்லது காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுதல்.
வைரஸை கட்டுப்படுத்துவதில் சில குறைபாடுகள் உள்ளவர்கள் குறிப்பாக நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், சுவாச செயற்பாடு தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள் COVID-19 பாதிப்பிலிருந்து குறைவான பாதுகாப்புடனே உள்ளனர், ஏனெனில் அவர்களுடைய சுகாதார நிலைமைகள் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
ஐ. நா மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் Catal Devandas Aguilar “இந்த சமூகம் வழிகாட்டுதல்களையும், ஆதரவுகளையும் வழங்குவதில் சிறிதும் செயற்படவில்லை என்று எச்சரித்ததோடு, குறைபாடு உடையவர்கள் தாங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதாக உணர்வதாகவும் தெரிவித்தார்”.
இலங்கை அரசு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்து இருந்தது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என ஒரு சில சலுகைகளையே எடுத்துக்கொள்ள முடியும்.
1. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான ஆறுமாத கால கடன் நிவாரணத்தை நடைமுறைப்படுத்துதல்
2. சமுர்த்தி நிவாரணம் பெறுவோருக்கு 10,000 ரூபா வட்டியற்ற கடன் முற்பணம்.
3. குறைந்த வருமானம் பெறுவோருக்கான போசணை உணவுப் பொருட்களை வழங்குதல் போன்றவற்றை குறிப்பிடலாம்
இவன் நிவாரணத் திட்டங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் உள்ள குடும்பங்களுக்கும் உரியதாக இருந்தாலும் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இதில் மாற்று வலுவுடையோரிற்கு அல்லது மாற்று வலுவுடையோரின் குடும்பங்களுக்கு என மேலதிகமாக எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை. மாற்று வலுவுடையோரது சுகாதார நிலமை கருதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மாற்று வலுவுடைய ஒருவருக்கு உதாரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்லுதல் என்பது பாரிய நெருக்கடியான சூழலை உருவாக்கும் ஆகவே அரசாங்கமும் சமூகமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளாக
1. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். (வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்)
2. குடும்ப அங்கத்தவர்களும், பாதுகாவலர்களும் தொற்று நீக்கத்திற்கான சுகாதார முறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
3. தனியார் துறையில் வேலை செய்யும் மாற்றுவலுவுடையோருக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
4. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கூடுதல் நிதிக்கான அணுகல் மிக முக்கியமானது.
5. சுகாதாரப் பொருட்கள் பதுக்கப் படுவதைத் தடுத்து அவர்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ந.திவாகரன்
முன்னால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்