‘நின்றுழலும் பெண்கள்’  மனம்திறந்த பொழுதுகள் – வீரமுனை 2

வீரமுனையில் ‘நின்றுழலும் பெண்களின்’ நேரடி சந்திப்பு ;உண்மை சம்பவங்களை மனம் திறந்து சொல்லும் தொடரின் இரண்டாம் பகுதி – ப்ரியமதா பயஸ்

கதிரையில் ஆற அமர இருந்த நான் மெதுவாக நுனி கதிரைக்கு நகர்கிறேன் .. அவரின் கண்கள் மெல்ல மெல்ல சிவந்து நீர்த்துளி நிறை கட்டி கொள்கிறது – என் திருமணம் எனக்கு விருப்பமான ஒன்றாக இடம்பெறவில்லை எனக்கு அப்போது 17 வயது, மிக அழகாக இருப்பேன், என்னை எனது கணவர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றே மணம் புரிந்தார் இருந்தாலும், அவர் என்மேல் அதிக அன்பையும், பாசத்தையும் வைத்திருந்தார் எமது வாழ்க்கை மிக இனிமையாகவே கடந்தது .

 

அன்றும் அப்படித்தான் எங்கிருந்தோ அலறி அடித்துக்கொண்டு ஓடியவர்கள், என்ன சம்பவம் நடந்தது என்று தெரியாமல் ஓடியவர்கள் என எல்லோருடனும் நானும் இருந்தேன் ,என் கணவர் காடையர்களால் வெட்டி படுகொலை ஆனார் என்பதுமட்டுமே இறுதியாக நான் அறிந்த செய்தி .

 

அந்த செய்தி என் காதில் விழும்போது நான்குமாத கருவாக என் வயிற்றில் இருந்த குழந்தையையே தொட்டு பார்த்துக்கொண்டேன் …அதன் பின்னர் என் நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள் என்றார் தழுதழுத்த குரலில், ஒருகையால் தனது  கண்ணீரை துடைத்துக் கொண்டு மறு  கையால் என் வலது கரத்தை பற்றிக் கொள்கிறார் …

 

ஒரு அநாதரவான பெண்ணுக்கு இருக்கும் சோகம் என் நெஞ்சில் புதைந்திருப்பதால் அவர் கரங்களை நானும் இறுக பற்றிக்கொள்கிறேன் மேற்கொண்டு பேசுவதற்கான நேர அவகாசத்தை கரங்களை பற்றிக் கொண்ட நேரத்தின் ஆறுதல் தழுவலாக அவரை சுதாகரிக்க செய்கிறேன் கலங்கும் என் கண்களை கட்டுப்படுத்த சூன்யத்தை வெறித்து பார்த்து கொள்கிறேன் …

 

இப்போது நானே பேச ஆரம்பிக்கிறேன் “அப்போ அவர் இறந்து ஆறுமாதங்களில் மகன் பிறந்துவிட்டார் ” இத்தனைக்கும் மீண்டும் உங்கள் அம்மா அப்பாவோடு இணைந்துவிட்டீர்களா” என்றேன் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு நிலத்தை நோக்கி அமைதியாகவே இருக்கிறார் அப்போதும் அவர் தன் கணவனின் இறந்த நாள் நினைவுகளில் இருந்து மீளவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன் .இப்போது கதிரையில் இருந்து எழுந்து அவர் அருகில் சென்று என் நெஞ்சொடு அவர் தலையை அணைத்து ஆறுதல் படுத்துகிறேன் என்னிடம் ஆறுதலுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை. வெறும் அணைப்பை மட்டுமே கொடுக்க முடிந்தது அவரை ஆசுவாசப்படுத்தி மீண்டும் பேச வைக்கிறேன் …

 

ஆம் அவர் இறந்து ஆறுமாதங்களில் மகன் பிறந்துவிட்டார் அப்போது நாம் முகாமில் தான் இருந்தோம் அம்மா அப்பாவுடன் சேர்ந்துவிட்டேன் ,அவர்கள் என்னை பார்த்துக் கொண்டார்கள் .

 

ஒருவருடம் ,இரண்டுவருடம் என வருடங்கள் ஓட ,கைக்குழந்தையுடன் கிடைக்கும் அத்தனை கூலி வேலைகளையும் செய்தேன் ,நான் படிக்கவில்லை ஆதலால் எந்த வேலையையும் நாள் கூலி வேலைக்குத்தான் போய் செய்யவேண்டிய சூழல் இருந்தது தயிர் போட்டு விற்பது ,பால்காச்சி விற்பது ,அரிசி விற்பது ,துணி, உடுப்புடவைகளை வேண்டி விற்பது என்று எல்லா வேலைகளையும் செய்தேன் .

 

18 வயதில் கணவனை இழந்து குழந்தை ஒன்றுடன் தனியே வாழ்தல் என்பது மிக கொடுமையாக இருந்தது , சமூகத்தின் கழுகுப்பார்வை என்னை விட்டுவைக்கவில்லை ,வீட்டுக்கு ஒரு ஆண் எந்த தேவை நிமித்தமும் வரமுடியாத சூழலை எதிர்நோக்கினேன் . அவசர தேவைக்கு வெளியே போகமுடியாத சூழலை எதிர்நோக்கினேன். இவை என்னை மிகவும் நோகடித்தன ,அவற்றை கடந்து வரவேண்டும் என்ற ஓர்மத்தினால் இன்னொரு மணம் புரிய வற்புறுத்திய உறவுகளிடம் மறுப்பு கூறிவிட்டேன் .

 

எம்மால் எதையும் கடந்து வரமுடியும் என்ற எண்ணம் சமூகத்துக்கு தப்பாகவே  பட்டது . அது அவ்வப்போது மனதை நொறுக்கினாலும் நான் வாழும் வாழ்க்கை குழந்தைக்காக என்பதால் அத்தனையையும் பொறுத்துக்கொண்டேன் …

ஒருசமயம் எனக்கு எந்த வருமானமும் பெறமுடியாத பஞ்சமான சூழல் ஏற்பட்டுவிட்டது  அப்போது நான் என்ன செய்தேன் என்றால்…

 

தொடரும் ……