பெண்களில் சிறுமை காணின் உலகில் ஏதும் பெருமை இல்லை

இன்றைய உலகில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கின்றது என சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு நாளைக்கு எத்தனை செய்திகள்? என்ன காரணம்? சந்தேகமே இல்லாமல் சமத்துவத்தை  ஏற்க மறுக்கிறோம். கல்வியில், வேலைவாய்ப்பில், வீட்டில், குழந்தை பராமரிப்பில் என அனைத்திலும் ஆண்களால் சமத்துவமாக இருக்க முடிகிறதா?

காலங்காலமாக இந்த எண்ணம் ஆண்களிடத்தில் இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தினால் உண்டாகும் குற்றவுணர்ச்சியை மறைக்கவே பெண்ணைப் புகழ்கிறான் ஆண். உடனே நான் அப்படியல்ல என்று முகம் சிவக்க வேண்டாம். எல்லா விதிகளுக்கும் விதி விலக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் உங்களைச்சுற்றி இப்படி எதுவுமே நடக்கவில்லை என சொல்லிவிடவும் முடியாது.

கல்வியறிவு, பேச்சுரிமை, புலமை, ஆட்சியுரிமை, அதிகாரம், சுயம்வரம் என அனைத்து உரிமைகளையும் வைத்திருந்த பெண்கள் இன்று ‘பெண் ஏன் அடிமையானாள்?‘ புத்தகம் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள்.

சமூகம் முழுவதும் இம்மாதிரியான சாக்கடைகள் இருக்கின்றன. பெண்கள் யாரும் தங்களை வணங்க வேண்டும் என விரும்பவில்லை. தங்களைச் சுற்றி புனித வளையத்தை போட்டுக்கொள்ள அவர்களுக்கு ஆசை இல்லை. அவர் கேட்பதெல்லாம் ஆண்களைப்போல் போல் அவர்களையும் நடத்த வேண்டும் என்பதே. ஆகவே பெண்களை சக மனுஷியாக நாம் அணுகுவதில் இருந்துதான் சமத்துவம் பிறக்கிறது. எதிர்கால தமிழ்ச் சமுதாயம் நலமுற்று இருந்திட சமத்துவத்தைத் தவிர வேறு வழியில்லை.

கணவனை இழந்தவள் ,பெண்தலைமைதாங்கும் குடும்பமாக உள்ளவள், பாதிக்கப்பட்டவள் ,விசேட தேவை உடையவள் என எல்லா பெண்களுக்கும் மரியாதையான சமூக அந்தஸ்து தேவைப்படுகிறது .

அந்த காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் கல்வியறிவு கொண்டிருந்தனர். ஔவையார், வெண்ணிக் குயத்தியார், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், ஆண்டாள் என தமிழ் வளர்த்த மகளிர் அதிகம். தங்களது கவித்திறமையால் மன்னர்களிடத்தே நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.

வேந்தர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் அவர்களை புலவர்கள் நல்வழிப்படுத்தியிருகிறார்கள். ஒளவையாரின் புலமையின் காரணமாக சேர,சோழ,பாண்டிய மன்னர்களிடையே சூழ இருந்த போர்மேகம் விலகியதை நாம் வரலாற்றில் இருந்து அறிகிறோம்.

பெண்கள் உலகின் ஒரு அங்கம் அவர்களில் சிறுமை காணின் உலகில் ஏதும் பெருமை இல்லை .