பாதிக்கப்பட்டோர் குறித்தான ஆழமான புரிந்துணர்வும் அவர்களின் தேவைகள் குறித்து பரந்துபட்ட அளவில் விவாதங்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இன்று சனிக்கிழமை (20.02.2020) மட்டக்களப்பில் சந்தித்தது.
பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள்
- கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய புள்ளிவிபரம் என்ன?
- மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை என்ன?
- பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை என்ன?
- என்ற வினாக்களோடு மட்டுமல்லாது பெற்றோரை இழந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த விபரங்கள் எவை?
- பிள்ளைகளை இழந்த பெற்றோரின் விபரங்கள் என்ன?
என்பது பற்றி பொதுவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று DATA அமைப்பினர் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
போரின் போதும் போரின் பின்னரான காலப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டோரது பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றன.
அந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களோடு இன்னும் நெருக்கமாக இணைந்து செயற்படக்கூடிய வழிவகைகளை ஆராய்வதும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.
கடந்த சில ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் பெருமளவு பேசப்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆனால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான அமைப்புக்கள், முதியோர்களுக்கான அமைப்புகள் போன்றவை இன்னமும் பெரிதாக பேசப்படவில்லை என்ற பொதுவான கருத்து இருக்கின்றது
பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான கொள்கை உருவாக்கம்
மாற்றுத்திறனாளிகள் குறித்து இந்த சமூகம் எவ்வாறான கொள்கையை வகுத்துள்ளது
அதே போல ஏனைய பாதிப்புக்குள்ளானவர்களுக்காக இந்த சமூகத்தின் கொள்கைகள் எவ்வாறு அமையப் போகின்றது என்ற கேள்விகள் தற்போதைய காலநிலையில் கேட்கப்பட வேண்டியதாக அமைகின்றது.
பாதிக்கப்பட்டோருக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களை நோக்கி செயல்படுத்தப்படும் திட்டங்கள், பரந்துபட்ட அளவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியவாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கை பாதிக்கப்பட்டவரிடம் இருக்கின்றது.
இந்த பணிகளில் ஊடகவியலாளர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி
மாற்றுத்திறனாளிகளை பேசுபொருளாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் பரா விளையாட்டு விழா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றன.
மீண்டும் 2020ஆம் ஆண்டு தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது.
இக் கலந்துரையாடலில் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.