பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக “நாச்சியார் உணவகம்” – வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் புதிய பெண் ஆளுநர் பதவி ஏற்று சொற்ப நாட்களே ஆகும் நிலையில்  பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பில் முதல் முறையாக கருத்து பகிர்ந்துள்ளார் .
அந்த வகையில் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர்வழங்கிய செவ்வியில் கூறியிருக்கும் விடயங்களாவன –
ஊடகம் எழுப்பியுள்ள கேள்வி – போரின் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ள வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிலைகளில் விசேட தேவையுடைய தரப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் பற்றிய விசேட கருத்திட்டமொன்றை முன் மொ ழியும் திட்டமுள்ளதா?

ஆளுநரின் பதில்

பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என்று பல்வேறு தரப்பினர் விசேட தேவைகளைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

மட்டக்களப்பில் நான் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய போது தான் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக “நாச்சியார் உணவகம்” என்ற திட்டமொன்றை அறிமுகப்படுத்தி அங்குரார்ப்பணம் செய்திருந்தேன்.

அந்தக் கருத்திட்டம் தற்போது வடக்கு உட்பட நாடளாவிய ரீதியில் படிப்படியாக வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஈடேற்றுவது குறித்து நான் சிந்தித்தபோது பெண்களுக்கென்றே தனித்துவமாக உள்ள சமயல்கலையை மையப்படுத்தி அந்தக் கருத்திட்டத்தினை முன்மொழிந்தேன். ,தற்காக விசேட பயிற்சிகளோ, செலவீனங்களோ இன்றி அவர்களுக்குள்ள இயற்கையான திறனை மையப்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்த திட்டத்தினை முன்மொழிந்தேன். அது வெற்றிப்பாதையில் செல்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்  என குறிப்பிட்டுள்ளார் .