மாதாந்த உதவி அதிகரிக்கப்பட வேண்டும் – பிரதமரிடம் DATA கோரிக்கை

மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாற்றுத்திறனாளிகளான முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கை களையும் இழந்தோர், இரண்டு கண்களையும் முற்றாக இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகளாக மாதம் 10000 ரூபாய் அளவில் அரசு வழங்க வேண்டும் என்று DATA அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தது.

அதேவேளை உழைக்கும் மாற்றுத்திறனாளிகள், உழைக்கும் பெண்தலமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோரது தொழிலை விருத்தி செய்வதற்கான உதவியையும் அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பிரதமருடனான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட DATA அமைப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்ததோடு சுயமதிப்பீட்டு மாநாட்டின் பிரதியையும் அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த சிறு குறிப்பு அடங்கிய கடிதத்தினையும் கையளித்திருந்தனர்.

கோரிக்கைகள் பின்வருமாறு

மாற்றுத்திறனாளிகள் குறித்தான கொள்கை

மற்றவர்களில் தங்கி வாழ்தலில் இருந்து விடுபடக்கூடிய அம்சங்களை உள்ளடக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு

நடைமுறையிலுள்ள மாதாந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக மிகவும் பாதிப்பு நிலைக்குள்ளாகியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய்க்குக் குறையாது கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கைகளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் 10,000 ரூபாய்க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.

அணுகும் வசதி

பொது இடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும்வசதிகள் இருப்பதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து ஏற்படுத்தப்பட வேண்டும்.

பராமரிப்பு இல்லங்கள்

அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

ஆதரவற்ற சிறுவர்கள்

ஆதரவற்ற சிறுவர்களுக்கு அவர்களது சிறுவர் பராயத்தில் அரச கொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்கள் வளர்ந்து வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கையை நிலைபெறச் செய்வதற்கான கொடுப்பனவுகளையும், வழிகாட்டுதல்களையும், உருவாக்குதல் வேண்டும்.

தொழில் முயற்சி

மாற்றுத்திறனாளிகளாலும், பெண் தலைமைத்துவ குடும்பத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார முயற்சிகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்த வேண்டும்.

தொழில் வாய்ப்பு

அரச வேலைவாய்ப்புக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு மூன்று வீதத்திலிருந்து ஆறு விதமாக உயர்த்தப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்ட அமுலாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் முழுமையான அளவில் அமுலாக்கப்பட வேண்டும்.

கல்வி

பாதிக்கப்பட்டோருக்கான விசேட கல்வி முறைகள் முழுமையான விதத்தில் அமுலாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வழிமுறைகளை செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு

வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச அளவில் விளையாட்டுக்களை பங்குபற்றுவதற்கான வழிவகை செய்ய வேண்டும்.

முதியோர் கொடுப்பனவுகள்

போரின் போது தமது பிள்ளைகளை இழந்த முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.