உள்ளூராட்சி தேர்தலில் கணிசமான மாற்றுத்திறனாளிகள்-வி.ஜெயகாந்தன்

தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளரும் கௌரவ பூநகரி
பிரதேச சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான திரு.வி.ஜெயகாந்தன்
அவர்களது நேர்காணல்

1. நீங்கள் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர். இன்று நீங்கள் ஒரு பிரதேச சபை உறுப்பினராக அரசியல் களத்திலே இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேரை அரசியல் களத்தில் காண்கின்றீர்கள்?

2018 ஆம் ஆண்டு அரசியல் களத்திலே ஒருவனாக உள்வாங்கப்பட்டேன்.
அதற்கு முன்னர், பாராளுமன்றம் வரை பேசக்கூடிய ஒரு
மாற்றுத்திறனாளியாக திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அம்மையார்
பாராளுமன்ற உறுப்பினராக எல்லோருமே அறியக்கூடிய வகையில்
வகிபாகம் வகித்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கான வாய்பை
கொடுத்து மாற்றுத்திறனாளிகளுக்காக பேசுகின்ற விடயத்தை பார்க்கக்
கூடியவாறு இருக்கின்றது.

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் கணிசமாக கடந்த 2017,
2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதே போலதான் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் ஒரு மாற்றுத்திறனாளி
இருக்கின்றார். ஏனைய பிரதேசசபைகளிலும் இம்முறை நடைபெற்ற
உள்ளூராட்சி தேர்தலில் கணிசமாக மாற்றுத்திறனாளிகள்

உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை என்னால் குறிப்பிட்டு சொல்ல
கூடியவகையில் இருக்கின்றது.

2. அந்த அரசியல்களம் பாதிக்கப்பட்டோர்களை மையப்படுத்தி அல்லது முன்னிலைப்படுத்தி என்ன சேவைகளை செய்ய வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றீர்கள்?

நாம் எதிர்பார்க்கின்ற வேலைத்திட்டங்கள் அரசியலால் மட்டும் தீர்த்துவிட
முடியாத பிரச்சினைகள் இருக்கின்றது. எல்லோருக்குமே தெரிந்த விடயம்
சாதாரணமாக நான் ஒரு பிரசேசபை உறுப்பினர். என்னாலான சேவையை
செய்வதற்கு பிரதேசசபை ஒரு தளமாக இயங்கி வருகின்றது.

அரசியல் சார்ந்த உறுப்பினர்கள் அங்கத்துவம் வகித்து வாக்கெடுப்பின்
மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அந்த சபையினுடைய
ஆளுகைக்குட்பட்ட விடயங்கள் இருக்கின்றது. நிதிசார் விடயங்கள், ஏனைய
திணைக்களத்திற்கான ஒதுக்கீடுகள் அவ்வாறானவற்றை மையப்படுத்தியே
இவ்வாறான வேலைத்திட்டங்களை கொண்டு செல்ல முடியும்.
ஒட்டுமொத்தமாக அரசியலால் எல்லா விடயங்களையும் சாதித்து விடமுடியும்
என்பது முற்றிலும் உண்மையில்லாத ஒரு விடயம்.

அதிகமானோர் எண்ணிக்கொள்வது அரசியலுக்குள் உள்வாங்கிவிட்டால்
அதிகளவு சாதித்து விடலாம் அல்லது அதிகமான வேலைத்திட்டங்களை
முன்கொண்டு செல்லலாம் என்று. இலங்கை அரசாங்கத்தின் அரசியல்
யாப்பின் சீர்திருத்தத்திற்குட்பட்டு நாங்கள் செயற்படுபவர்களாக தான்
இருக்கின்றோம்.

அரசியல் பிரமுகர்களுடன் இணைந்ததாக தான் திணைக்களங்கள்
இருக்கின்றது. அரசியல் வாதிகளால் நிறைவேற்றப்படுகின்ற விடயங்களை

நடைமுறைப்படுத்துகின்ற பெரும் பங்கு திணைக்களங்களுக்கு
உரித்துடையதாக இருக்கின்றது. நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றக்
கூடிய வகையில் இருந்தாலும் கூட அந்த தீர்மானத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க
வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசியல் பிரவேசத்தில் என்னுடைய பிரதேச மக்களுக்கு முழுமையான
சேவையை வழங்கக்கூடியவனாக இருக்கின்றேனா என்று சொன்னால்
இல்லை. ஏனெனில் என்னுடைய பிரதேசசபையினுடைய நிதி
வளத்திற்கேற்றவாறுதான் செயற்பாடுகளைக் கொண்டு செல்ல முடியும்.

அரசியலுக்கு வந்தவுடனே இவர் பிரதேச சபை உறுப்பினராக வந்து
விட்டார் மாற்றுத்திறனாளிகளுக்கு குரல் கொடுப்பதற்காக வந்து விட்டார்,
அவர்களுக்கான முழுமையான சேவையை வழங்கிவிடுவார் என்று
சொன்னால் அது முற்றிறும் பொய்யான விடயம் என்று தான் சொல்ல
வேண்டும்.

அந்த இடத்தில் இதனை நாம் தெளிவுபடுத்த வேண்டியவர்களாக
இருக்கின்றோம். ஒரு பிரதேசசபை உறுப்பினராக பிரதேசசபையில்
அங்கீகாரங்களை வழங்க கூடியதாக இருக்கும். அந்த அங்கீகாரங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னூட்டலாக இருக்கின்ற
திணைக்களம், சபை சார்ந்த விடயங்கள் இதில் பிரதான பங்கு வகிக்கின்றது.

முக்கியமான விடயமாக அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,
மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறான விடயங்களை கொண்டு செல்லலாம்
என்று சொன்னால் போர் முடிந்து பத்து வருடத்திற்கு பின்னரும்
அவர்களுக்கு நிலையான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படவில்லை என
நான் இந்ந இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறு செய்வதற்கு விரும்புகின்ற, முயற்சிக்கின்ற விடயமாக
பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான
கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டிருந்தாலும் போரினால் அதிகமாக
பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் என்கின்ற வகையில்
மாகாணங்களுக்கு என்ற கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
கொள்கையை உருவாக்குவதற்கு முக்கிய செல்வாக்கு செலுத்துவது இந்த
அரசியல் தான் என்று கருதுகின்றேன்.

எமது மாகாண சபை ஊடாக கொள்கை ஒன்றினை உருவாக்கி அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்லுவோமானால் நிலையான செயற்பாட்டை
சாதிக்கக்கூடிய, முன்கொண்டு செல்லக் கூடியவாறு இருக்கும்.

பாதிக்கப்பட்ட சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக
பேசுவதற்கான வல்லமை கொண்டவர்களாக அரசியல் பிரமுகர்கள்
இருக்கின்றார்கள். வடக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளின்
எண்ணிக்கை 20011 இருக்கின்றது. மாகாண சபைகளில் அல்லது
பாராளுமன்றத்தில் பேசப்படுகின்றதா என்றால் அவை விடைதெரியாத
வினாக்களாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியலால் சாதிக்கக் கூடிய முயற்சிகளை நாம்
ஒரு மையப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்போமானால் பொதுவாக கொள்கை
ஒன்றினை உருவாக்கி அதிலிருந்து சில விடயங்களை கொண்டு செல்வோம்.
ஆனால் நிச்சயமாக அரசியலால் சில விடயங்களை சாதிக்க கூடியதாக
இருக்கும்.

இக் கொள்கை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது நாங்கள்
யோசிக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. கொள்கை உருவாக்கம் என்ற
ஒன்றை மேற்கொள்ளும் போது பாதிக்கப்பட்ட சமூகம் அல்லது
மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி நாம் உருவாக்குவோமானால்
பெரும்பான்மையாக உள்வாங்க வேண்டியவர்கள் அந்த சமூகத்தினர்,
அவர்களுடன் பயணிக்கின்ற திணைக்களங்கள், அரசியல் பிரமுகர்கள்
அனைவரும் இணைந்து உருவாக்குகின்ற சந்தர்ப்பத்தில் பூரணமான
கொள்கையாக வெளிவரக்கூடியவாறு இருக்கும்.

3. சக்கரநாற்காலி பாவனையாளர் என்ற விதத்தில் முள்ளத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று பெரிதளவில்
எதிர்பார்க்கின்றீர்களா? அல்லது சக்கரநாற்காலி
பாவனையாளர்களுக்கிடையே என்ன வேறுபாடுகள் இருக்கின்றது?

தற்போது நாம் குரல் கொடுக்கின்ற விடயமாக பாதிக்கப்பட்ட சமூகம்
இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் உள்வாங்கப்படுபவர்கள்;
மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை
இழந்த சிறுவர்கள், பிள்ளைகளை இழந்த முதியோர்கள்
இவ்வாறானவர்களை மையப்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் என்று
பேசினாலும் கூட இவர்களில் மாற்றுத்திறனாளிகள் வேறுபட்டவர்கள்.

பாதிப்பின் அடிப்படையில் இருக்கின்ற பிரச்சினைகளை மையப்படுத்தி
மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்துகின்றோம்.
1. கடும் பாதிப்பிற்குள்ளானவர்கள்
2. ஓரளவு பாதிக்கப்பட்டவர்கள் என பிரிக்கலாம்.

2008 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு
அனைத்து விதமான சவால்களுக்கும் உள்வாங்கப்பட்டவன் என்ற

வகையிலும், ஏனைய மாற்றுத்திறனாளிகளுடன் நெருங்கி பழகியவன் என்ற
வகையிலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சினை
இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை பாதிப்பின் அடிப்படையில்
இரண்டாக பிரிக்கலாம்.
1. கழுத்திற்குக் கீழ் இயக்கமில்லாதவர்கள்
2. இடுப்பிற்குக் கீழ் இயக்கமில்லாதவர்கள்

கழுத்திற்குக் கீழ் இயங்காதவர்கள் எனும் போது இவர்கள் கூடுதலாக
சமூகத்தோடு இணைக்கப்படுவது குறைவு ஏனெனில் அவர் தன்னுடைய
தலையை மட்டும்தான் அசைப்பார். சிலர் சக்கரநாற்காலியில் இருக்க
மாட்டார்கள் அவ்வாறு இருத்திவிட்டாலும் கூட உதவிக்கு இன்னொருவர்
அவர் பக்கத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறானவர்கள் சமூகத்தில் அடையாளப்படுத்துவது குறைவு.
இவ்வாறான ஒரு புரிதல் சமூகத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு
உள்ளவரின் நிலைமையை யோசித்து பார்த்தோமானால் அது கடுமையான
பாதிப்பாக காணப்படுகிறது.

சாதாரணமாக ஒரு காலை இழந்தவருடன் கழுத்திற்குக்கீழ்
இயங்கமுடியாதவரை ஒப்பிட முடியாது. அவரை தனித்துவமாக அல்லது
முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டுவதில்
நியாயப்பாடு இருக்கின்றது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சாதாரணமாக தன்னுடைய முகத்தில் இருக்கின்ற ஈயைக்கூட தனது
கைகளினால் கலைக்க முடியாது. வீடுகளில் காணப்படுகின்ற பல்லி, தேள்

இவை ஏதேனும் அவரது உடலில் விழுந்தால் கூட எதுவும் செய்ய முடியாது
அவர் இன்னொருவரை எதிர்பார்க்கத்தான் முடியும்.
ஏனைய பாதிக்கப்பட்டவர்களை பொறுத்த வரையில் அவர்களால் தங்களது
பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை முன்னுரிமைப்படுத்துவதற்கு
இது ஒன்றே போதுமானதாக இருக்கின்றது.

இதைவிட நாங்கள் அன்றாடம் செய்கின்ற சல,மல முகாமைத்துவம்
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பாதிப்பிற்குக் கீழ்
எதுவும் தெரியாது. சாதாரணமாக அவர்களுக்கு சலம், மலம் கழிப்பது கூட
தெரியாது. அதனால் தான் பிறந்த குழந்தைக்கு ஒப்பாக
பார்க்கவேண்டியவர்களாக இருப்பார்கள். பாதிக்கப்பட்ட சமூகமாக இருந்து
கொண்டு இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதில் நான் ஏனைய
மாற்றுத்திறனாளிகளுள் இவர்கள் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்று
குறிப்பிடுகின்றேன்.

இதே போன்று தான் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பிற்குக் கீழ்
இயங்கமுடியாதவர்களும் தங்களது கைகளை அசைத்தாலும் ஏனைய
பிரச்சினைகள் அவ்வாறே இருக்கின்றது. தமது காலில் இரவு எறும்பு
கடித்தால் கூட அவர்களுக்கு தெரியாது. காலையில் பார்க்கும் போது
புண்ணாக இருந்தால் தான் தெரியும். இவை பாதிப்பின் அடிப்படையில்
கடுமையான பாதிப்பாக இருக்கின்றது.

இதில் விதிவிலக்காக சிலர் இருக்கின்றார்கள். நடமாட கூடியவர்களாக
இருப்பார்கள், தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களோடு
ஒப்பிட்டு ஏனைய முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை
கூறமுடியாது. இவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய
பாதிக்கப்பட்டவர்களை விட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை
முன்னுரிமைபடுத்துவதற்கான நியாயப்பாடுகள் இருக்கின்றன.

ஏனைய மாற்றுத்திறனாளிகள் நிற்கின்ற போதும் பத்து முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்கள் நிக்கின்ற போதும் முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்களை தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒன்றை
தெளிவாக யோசிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த உறவுகள் என்றாலும் சரி, இங்கே இருப்பவர்கள் என்றாலும்
சரி பாதிக்கப்பட்ட சமூகம் என்பது ஏதோ ஒரு விதத்தில் தங்களை
பாதிப்பிற்குள்ளாக்கியவர்கள் தான். இதற்காக நாம் முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தான் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற
எண்ணப்பாடு எம்மிடம் இருக்கக்கூடாது.

இதனை தாண்டி முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த
படியாக இருக்கின்றவர்கள் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்கள்.
தமது முன்னே நடப்பது எதுவும் தெரியாதவர்களாக அதாவது அவர்களுக்கு
உணவை கூட தமது கைகளினால் அடையாளப்படுத்திதான் கண்டுகொள்ள
முடியும்.

வீதியில் செல்லும் போது தமக்காக கிடைத்த அந்த வெண்பிரம்பை கையில்
கொண்டு ஏதோ ஒரு தடயங்களை வைத்து தட்டி தட்டி செல்கின்றார்கள்.
அதன் போது பலர் விழுந்தும் இருக்கின்றார்கள். வடமாகாண வீதிகளை
பார்த்தால் பாதிக்கப்படாதவர்கள் கூட சரியான முறையில் செல்ல முடியாத
வீதிகளாக தான் இருக்கின்றது.

இரண்டு கைகளையும் மணிகட்டிற்கு கீழ் இழந்தவர்கள் தங்களை ஏதோ
முகாமை செய்கின்றார்கள். ஆனால் முழங்கைக்கு மேல் இழந்தவர்களது
நிலைமையை நாம் சற்று சிந்திக்கத்தான் வேண்டும். தன்னுடைய

கடமைகளுக்கு இன்னொருவர் கடமையாற்ற வேண்டிய நிற்பந்தத்திற்கு
உள்ளாகியுள்ளார்கள்.

இவ்வாறான மூன்று பாதிப்புக்களையும் கடும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள்
என கூற முடியும். இதை தாண்டியிருக்கின்ற மாற்றுத்திறனாளிகள்
ஓரளவிற்கு சமூகத்துடன் சேர்ந்து இயங்கக் கூடியவர்களாக
இருக்கின்றார்கள். ஆகவே கடும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை
மட்டும் பார்த்தால் போதும் என்கின்றதை விட ஒட்டுமொத்த
மாற்றுத்திறனாளிகளையும் பார்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும்
இருக்கின்றது.

4. மாற்றுத்திறனாளிகள் தங்களை நிறுவனப்படுத்தி வளர்ப்பதில் ஓரளவு
வெற்றி கண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே இருக்கக்கூடிய இணைந்து செயற்படும் தன்மை இன்று எப்படி இருக்கின்றது?

மாற்றுத்திறனாளி அமைப்புக்கள், முதியோர் அமைப்புக்கள், சிறுவர்
அமைப்புக்கள் தங்களை நிறுவனமயப்படுத்தி வளர்ந்திருக்கின்றார்கள்.
அதனை மறுக்கவே முடியாது. 2009 ற்கு பின்னர் கூடுதலானவர்கள்
நிறுவனங்களாக பதியப்பட்டு தங்களுடைய சேவையை வழங்க
கூடியவர்களாகவும், தனித்துவமாக செயற்பட கூடியவர்களாகவும்
இருக்கின்றார்கள்.

2015, 2016, 2017 ம் ஆண்டுகளில் உயிரிழை முள்ளந்தண்டு வடம்
பாதிக்கப்பட்டோர் அமைப்பினுடைய தலைவராக இருந்தேன்.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ற தனித்துவமான
அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அதனை முன்நோக்கிக் கொண்டு
செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அதனுடைய தலைமை பொறுப்பு என்னிடம்
கிடைக்கப்பெற்றது.

அதனை பொறுப்பெடுத்த பின்னர் அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டு அதனை
பெரியதொரு அமைப்பாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுடைய
தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்யக்கூடிய, தனித்துவமாக
அடையாளப்படுத்தக் கூடிய அல்லது உலகளாவிய ரீதியில்
இவ்வாறனதொரு அமைப்பு இருக்கின்றது என்று அடையாளப்படுத்தி
சமூகத்திற்கு கொண்டு செல்லக் கூடிய பங்கினை நிறுவனமயப்படுத்தலால்
நாம் அடைந்திருந்தோம்.

அதேபோல தான் பல்வேறுபட்ட நிறுவனங்கள் வடமாகாணத்தில் 34
அமைப்புக்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டு நிறுவனமயப்படுத்தி
இருக்கின்றார்கள். இதனால் ஓரளவிற்கு தமது தேவைகளை பூர்த்தி செய்யக்
கூடியவர்களாக அல்லது அடையாளப்படுத்தக்கூடியவர்களாக அல்லது
அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடியவர்களாக மாற்றம் பெற்று
இருக்கின்றார்கள்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிறுவனமயப்படுத்தலின்
ஊடாக மாற்றுத்திறனாளி அமைப்புக்கள், மாற்றுத்திறனாளிகள் ஓரளவிற்கு
சமூகத்தில் பேசக்கூடியவர்களாக முன்னேறியிருக்கின்றார்கள். இந்த
இடத்தில் அனைத்து அமைப்புக்களையும் பாராட்ட வேண்டிய தேவைப்பாடு
இருக்கின்றது.

ஆனால் அமைப்புக்கள் இணைந்து செயற்பட வேண்டிய சூழல் கட்டாயம்
இருக்கின்றது. ஒரு முழுமையான இலக்கை நாம் அடைய வேண்டுமாக
இருந்தால் நாம் இணைந்து செயற்படுவதன் ஊடாக அதனை
பெற்றுக்கொள்ள முடியும். அவை எல்லோருடைய மனோநிலையிலும்
மாற்றம் வரவேண்டியவையாக இருக்கின்றது.

இது என்னுடைய அமைப்பு என்பதனை விட எங்களுடைய அமைப்பு என
நாம் பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு அடையாளப்படுத்தப்பட்டவர்களாக
அதாவது விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர், முள்ளந்தண்டுவடம்
பாதிக்கப்பட்டவர்கள் என்று இருக்கின்ற நாம் ஒருமித்து குரல் கொடுக்கின்ற
சந்தர்ப்பத்தில் தான் எங்களது தேவைகளை முழுமையாக அடைய முடியும்.

கூடுதலான இடங்களில் பார்த்தோமானால் போராட்டங்கள் நடைபெற
வேண்டும். போராட்டங்களின் ஊடாக தான் சில விடயங்களை நாம்
முன்கொண்டு செல்ல முடியும். போராட்டம் என்பது குரல் கொடுத்து
போராட கூடியதாக இருந்தால் தான் எமது இலக்கை நாம் அடைய முடியும்.

இணைந்து செயற்படுதல் என்பது இருந்தாலும் கூட அது மேலும் வலுப்பெற
வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கொருவர்
புரிந்துணர்வுடன், எங்களுடைய பிரதேசம், மாகாணம், பாதிக்கப்பட்ட
அனைவரும் போர், இயற்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான
மையப்புள்ளியை பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் பிரிவினைவராது. அனைவரும்
சேர்ந்து செயற்படக்கூடியவர்களாக இருக்கும்.

அவர் உதவி செய்தால் என்ன இவர் உதவி செய்தால் என்ன, எமக்கு
மட்டுமே உதவி செய்ய வேண்டும் என்கின்ற மனநிலையில் இருந்து நாம்
மாற வேண்டும். எமது மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம்
இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால்
அமைப்புக்கள் ஊடாக உள்வாங்கப்பட்டவர்கள் தான் இதிலிருந்து
உதவியை பெறுகின்றார்கள் ஆனால் உள்வாங்கப்படாத பலர்
விடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்ற துர்ப்பாக்கிய நிலை
இருக்கின்றது.

நாம் இணைவோமாக இருந்தால் அனேகமான விடயங்களை சாதிக்கலாம்.
இணைந்து செயற்படக் கூடிய செயற்திட்டங்களை தான் முன்நோக்கி
கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும்.

கடந்த 2016, 2017, 2018களில் நடைபெற்ற தமிழ் பரா விளையாட்டுப்
போட்டியினை பார்போமானால் அமைப்புக்களை உள்வாங்கி
அமைப்புக்களில் இருந்து விடயங்களை வெளிக் கொண்டு வருவதோடு
இவ்வாறன அமைப்புக்கள் செயற்படுகின்றது என்ற விடயத்தை உலகிற்குச்
சொல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களை
அவர்கள் இணையும் மூலமாகதான் பெற்றுக் கொள்ளலாம்.

நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு
விளையாடிவிட்டு வருவதாக நினைத்தார்கள் என்று சொன்னால்
அடுத்தகட்டத்தை கொண்டு செல்ல முடியாதவர்களாக இருப்பார்கள்.

இணைவதன் ஊடாக பல விடயங்களை சாதிக்க முடியும். எப்போதும் குரல்
கொடுப்பவர்கள் தனித்து நின்று குரல் கொடுப்பதைவிட இணைந்து நின்று
குரல் கொடுப்பது என்பது அது எங்கேயும் ஒலிக்கும். ஒருகை தட்டி ஓசை
எழாது ஓசையானது பல கைகள் தட்டினால் தான் எழும் அதற்கமைய
இணைந்து செயற்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

அதை போன்று நிறுவனமயப்படுத்தி வளர்ந்திருக்கின்றார்கள், அதை
வழிநடத்தி செல்கின்றவர்கள் சரியாக செல்கின்றார்கள். ஆனால் இணைந்து
செயற்படுதலில் அவர்கள் இன்னும் தங்களுடைய விட்டுக் கொடுப்புக்கள்
அது போன்ற பல விடயங்களை இணைந்து செயற்படுவதன் ஊடாக சாதிக்க
முடியும். இணைதலில் இன்னும் புரிதல் கொள்ள வேண்டிய தேவைகள்
இருக்கின்றது.

5. மாற்றுத்திறனாளிகளுடைய அவசர மருத்துவ தேவைகள் குறித்து பல விடயங்களை முகப்புத்தகங்களில் எழுதி வருகின்றீர்கள் அவர்களது தேவைகள், அவசர தேவைகள் அதாவது அவர்களது உயிரைத் தின்னும் நாள்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்கக் கூடிய அவசர தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் இருக்கின்றனவா?

மாற்றுத்திறனாளிகளின் மருத்துவம் என்ற வகையில் அக் கேள்விக்கு
அவர்களுக்கு உடனடியாக செய்யப்பட வில்லை என்பது தான் அதற்கான
சரியான விடையாக இருக்கும். அவர்களுடைய அவசர தேவைகள் குறித்து
நாம் கவனம் செலுத்த வேண்டும். நான் ஏற்கனவே தொட்டுச் சென்றதன்
அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் வகைகளில் சில
மாற்றுத்திறனாளிகள் அவசரமான உதவிகளை கோருகின்ற சந்தர்ப்பங்கள்
இருக்கின்றன.

அச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினாலோ அல்லது நிறுவனங்களினாலோ
அவர்களின் உடனடி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதா என்று
கேட்டால் இல்லை என்று தான் பொதுவாக மாற்றுத்திறனாளிகளின் குரல்
ஒலிக்கின்றது.

அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி படுக்கை புண்ணினால்
வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்ற செய்தி என்னிடம் கிடைக்கப்
பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு உடனடியாக உதவி செய்யக்கூடியவாறு
இல்லை. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது. அவசர
மருத்துவ தேவையாக அழுத்தப்புண் இருக்கின்றது.

அழுத்தப்புண் என்பது ஒரு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாக
உள்ளது. ஏனென்றால் படிப்படியாக அழுத்தப்புண் பெரிதாகி எலும்பு
பகுதியை தாக்குவதோடு கிருமித்தொற்றுக்கு உள்ளாகி பலர் எங்களோடு

இருந்து பயணித்து, உணவருந்தியவர்கள் இறந்திருக்கின்றார்கள். நான்
நேரடியாக பார்த்த விடயம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சரியான மருத்துவவசதி
வழங்கப்படாமையே காப்பாற்ற முடியாமையே காரணமாக இருக்கின்றது.
அழுத்த புண்ணினால் ஒரு மாற்றுத்திறனாளி இறக்கின்ற சந்தர்ப்பங்கள்
ஏனைய வளர்ந்த நாடுகளில் இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்று
தான் கூறுகின்றார்கள்.

ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நான் என்னுடைய வலைத்தளங்களில்
இவ்வாறான விடயங்களை வெளிக் கொண்டுவருவது எல்லோரும் பார்க்க
வேண்டும், கருசனை செலுத்த வேண்டும், அச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு
தேவையான உதவிகள் சென்றடைய வேண்டும் என்கின்ற
எண்ணப்பாட்டுடன் மாத்திரமே.

ஆனால் இந்த விடயங்களை யார் வெளிக் கொண்டுவர வேண்டும் என்றால்
ஒவ்வொரு தனிப்பட்டவரும் தங்களுடய பாதிப்பை, தேவையை
வெளிக்கொண்டுவருகின்ற சந்தர்ப்பத்தில் தான் அது சமூகத்திற்கு சிறந்த ஒரு
தேவையான விடயமாக எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வெறுமனவே நான் எழுதுவதனால் இவ் விடயங்களை எல்லோரும்
ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியாது. ஏனெனில் அதற்கான
மாற்றுக்கருத்துக்களையும் சிலர் கூறுவார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் என்ற வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான
புற்றுநோய்கள், அவர்களது சிறுநீரக பாதிப்பு, அழுத்தப்புண் என்பன ஒரு
உயிர் கொல்லியாக இருக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில்
உடனடியாக உதவிகளை கோரும் போது செய்ய முடியாத சூழல்

இருக்கின்றது. அரசாங்கத்தினாலும் இவ்வாறானவர்களுக்கு சிறப்பான
விசேட மருத்துவவசதி செய்யப்படாமல் தான் இருக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலைகளில் விசேட வசதிகள்
காணப்படவில்லை. சாதாரண மனிதர்களுக்கு இருக்கின்ற வசதிகள் தான்
காணப்படுகின்றது. விசேடமான அலகு, விசேடமாக சிகிச்சை
அளிக்கக்கூடிய இடங்களோ இல்லை.

கூடுதலாக நாம் பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான
பிரச்சினைகளினால் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்கின்ற
சந்தர்ப்பங்களும் மருத்துவ உதவியை கோராமல் என்ன நடந்தாலும்
எங்களுடைய வீட்டோடு போகட்டும் என்கின்ற நிலைப்பாடு தான்
மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் இருக்கின்றது.

எனவே மருத்துவ வசதி என்பது விசேட மருத்துவ வசதியாக இருக்கக்கூடிய
ஒரு சூழல் இல்லை. அச்சந்தர்ப்பத்தில் நாங்கள் சில மருத்துவ வசதி
செய்திருக்கின்றோம். சிலரது உயிர்களை காப்பாற்றி இருக்கின்ற விடயத்தை
இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றோம்.

அழுத்த புண் வந்த ஒருவருக்கு விசேட சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில்
வைத்தியரை நாடி அவருக்கான சேவைகளை வழங்குவதன் ஊhக அவரை
குணப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.

ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும் என்பதனால் செய்யாமல்
இருக்கின்றார்கள். அவ்வாறு நாங்கள் செல்கின்ற சந்தர்ப்பத்தில் தனியார்
வைத்தியசாலையில் பணங்கொடுத்து செய்யக்கூடியவாறு இருக்கின்றது.
நாம் ஒரு பயனாளிக்கு செய்திருக்கின்றோம். அந்த இடத்தில் அவரது
அழுத்தபுண் குணமடைந்து ஆரோக்கியமாக இருக்கின்றார்.

இவ்வாறு தனியார் வைத்தியசாலைகளில் இவர்களுக்கான மருத்துவவசதி
செய்யக் கூடியவாறு இருக்கின்றது என்று சொன்னால் ஏன் அரசாங்க
வைத்தியசாலையில் செய்ய முடியாதிருக்கின்றது. கூடுதலாக இது
என்னுடைய கருத்தாக இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற அரச
மருத்துவமனைகளில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகளிடம்
கேட்டீர்களானால் அவர்களுடைய உள்ளார்ந்த விடயங்களை
வெளிக்கொண்டுவருவார்கள்.

அரசாங்க வைத்தியசாலைக்கு ஏன் செல்ல முடியவில்லை, அதில் எவ்வாறு
பராமரிக்கப்படுகின்றார்கள், எவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது
என்று ஒரு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலையில்
தங்கவிட்டால் அவரோடு கூட நின்று பராமரிக்க முடியாத உதவி
இல்லாதவர்கள் இன்னொருவரை கூலிக்கு அமர்த்தி பார்க்க வேண்டிய
சந்தர்ப்பத்தில் நாளொன்றிற்கு இரவு பகல் என 2000 ரூபாவிற்கு மேல்
அவருக்கு வழங்கினால் தான் அவரை பராமரிக்கக் கூடிய சூழல்
இருக்கின்றது.

ஒருவருடைய உயிரை உடனாடியாக இவ் மருத்துவ உதவியினை செய்தால்
காப்பாற்ற முடியும், என்று சொல்கின்ற அளவிற்கு இங்கு மருத்துவ வசதிகள்
இல்லை. கூடுதலாக இருக்கின்றவர்களுடைய மருத்துவ சிகிச்சையில் அதீத
கவனம் செலுத்துவோமானால் இவர்கள் மேலும் பாதிக்கப்படாமல்
இருப்பதற்கு உறுதுணையாக அமையும்.

எனவே மருத்துவ சிகிச்சை என்பது முக்கியமான ஒன்று. இனிவரும்
காலங்களில் இருக்கின்றவர்கள் இவ்வாறான சிகிச்சைகள் அரசாங்கத்தினால்
வழங்க முடியாது, அரசாங்கத்தில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது
என்றாலும், தனித்துவமாக செயற்படுத்த முடியாவிட்டாலும் புலம்பெயர்ந்த
உறவுகள் பாதிக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொருவரும் தங்களுடைய

பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் கை கொடுத்து
காப்பாற்ற முடியும் என்பதை நான் இந்த இடத்தில் பதிவிடுகின்றேன்.

எனவே மருத்துவ சிகிச்சைக்கு கூடுதலான தொகைகளை
செலுத்தாவிட்டாலும் சிறு சிறு தொகைகளை செலுத்தி
காப்பாற்றுவோமானால் மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களை
வாழவைக்க முடியும்.