காலபோக்கில் நிறைய உயிர்க்கொல்லி நோய்கள் ஆக்கிரமித்துவிட்ட கொடிய கால கட்டத்தில் நாம் பயணித்து கொண்டுள்ளோம் அது தவறாகாது. எண்ணில் அடங்காத நோய்கள் இன்று மனித சமுதயாத்தைக் கொன்று குவிக்க தயாராகிவிட்ட ஒரு முறையற்ற வாழக்கையை நாம் பின்பற்றத் தொடங்கி விட்டோம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் பயனுள்ள பழக்கத்தை மறந்தே போய்விட்டோம். தொழில்புரட்சியின் காரணமாகக் கணக்கில் அடங்கா வாகன உற்பத்தி, அதை கையாளும் எளிமை போன்ற காரணங்களால் நம் சமுகம் இந்த ஆரோக்கிய பயணத்தைத் தொலைந்து போக செய்துவிட்டது. அது மட்டுமில்லாமல் வாகன பெருக்கம், சாலை நெரிச்சல், மக்கள் தொகை, குறித்த காலத்தில் சேர வேண்டும் போன்ற பல காரணங்களால் நாம் மிதிவண்டி உபயோகிக்கும் பழக்கத்தை தூர எறிந்து விட்டோம்.
உடல்நலம் நம் முழு மூச்சாக இருக்கும் பட்சத்தில் மிதிவண்டிப் பயணம் ஒரு நல்ல தேர்வாக அமையும். நான் அதற்காக உங்களை மிதிவண்டியை எடுத்து கொண்டு உச்சி வெயிலில் தார்ச் சாலையின் நடுவில் பயணிக்க சொல்லவில்லை. அப்படி செய்தாலும் நாம் மீண்டும் வீடு வந்து சேருவோம் என்ற உத்தரவாதம் இல்லை. எல்லோரும் பெட்ரோலிய வாகனங்களைப் பயன்படுத்தப் பழகி விட்ட காலத்தில் நாம் மட்டும் மிதிவண்டியில் பயணித்தால் இந்த சமுதாயம் நம்மை ஒரே வார்த்தையில் முட்டாள் என்று கூறி விடும். அதற்காகக் கண்டுபிடிக்கபட்ட ஒன்று தான் நிலையான மிதிவண்டி இதை ஆங்கிலத்தில் (static bicycle or stationary bicycle) என்று கூறுவர்.
மிதிவண்டிப் பயணம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு உடல்நலப் பயணம். மிதிவண்டி மிதிப்பதால் நம் கால்கள் வலுப் பெறுவதோடு நம் இதயத்தின் இயங்கு திறனை வலுபடுத்தும் என்பது மருத்துவர்கள் நிருபித்த ஒன்று. இது போன்ற உபகரணம் இப்பொழுது அனைத்து உடற்பயற்சி நிலையங்களிலும் நாம் காணலாம். அதில் யாராவது ஒருத்தர் அமர்ந்து அதனை ஓட்டிக் கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம், என்னடா இது உட்கார்ந்த இடத்திலேயே ஓட்டிகிட்டு இருக்கான் என்று சிரிப்பு கூட வரலாம். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் இதனை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு தங்கள் பயிற்சியைத் தொடரலாம்.
இதற்குப் பெரிய பரிந்துரைகளோ ஆலோசனையோ தேவை இல்லை. நீங்க உடல்நலமாக இருக்கும் பட்சத்தில் இந்த உடற்பயிற்சியைக் காலையிலோ, மாலையிலோ உங்களால் முடிந்தால் இந்த மிதிவண்டியை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு பயிற்சியைத் தொடருங்கள். குறைந்தது தினமும் அரை மணி நேரம் மிதிவண்டி மிதிப்பதால் இதயமும் அதனைச் சுற்றி உள்ள தசைப் பகுதியும் வலுப்பெரும். இதய தசைகள் வலுப்பெருவாதால் நம் உடலில் ரத்த இயக்கம் சீராக்கப்படுகிறது. நாம் நம்மை இருதய நோய்களில் இருந்து முற்றிலும் காத்துக் கொள்ளலாம்.